அரசாங்க பாடசாலைகளில் 2009ம் ஆண்டுக்கான மூன்றாந்தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கென கல்வி அமைச்சு 90 மில்லியன் ரூபாவை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள மூன்றாந்தவணை பரீட்சைக்கென மாணவர்கள் எவரும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
அத்துடன் பரீட்சைக்கென மாணவர்களிடம் கட்டணம் அறவிட வேண்டாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. சில மாகாண சபைகளும் இப்பரீட்சைக்கென நிதி ஒதுக்கியுள்ளதுடன் கல்வி அமைச்சின் வேண்டு கோளுக்கு இணங்க 3ஆம் தவணைப் பரீட்சை நடத்துவதற்குரிய செலவினம் தொடர்பான மதிப்பீடுகளை கல்வி அமைச்சுக்கு மாகாண சபைகள் அனுப்பி வைத்துள்ளன.
அத்துடன் இம்முறை க.பொத. சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் மாதிரி பரீட்சையும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறும். மூன்றாம் தவணைப் பரீட்சையாக ஆண்டு 6 தொடக்கம் 10ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்குரிய பரீட்சை நவம்பர் 17 தொடக்கம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும் அறிக்கையின் பிரகாரம் மாகாண அதிகாரிகளின் ஒப்புதல்களுடன் பரீட்சையை இவ் வாறு நடத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சில் 9 பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் தொகுதி (சிறிய பாடசாலை களுக்கான பிரதான பாடசாலையுடன் இணைந்து அடிப்படையில் பரீட்சைகளை ஒருங்கிணைப்பதற்கென அதிபர்கள் மற்றும் பிரபல்ய மான ஆசிரியர்களை உள்ளடக்கியதாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.