June

June

‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) – புன்னியாமீன்

world-environment-day-wed-2009.jpgஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும்,  சுற்றுச் சூழல்லைப்  பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின்  முக்கியத்துவம்,  இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது.  இதில் சுற்றுச் சூழலுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் சூழல் மாசடையச் செய்வதிலும், அதிக அளவு இயற்கை வளங்களை சர்வ நாசஞ் செய்வதிலும் ஈடுபடுவது மனிதனே! என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல்  (World Environment Day)  தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

சூழல் மாசடைதலை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவதாக நிலம் மாசடைதல், அடுத்தாக நீர் மாசுறுதல்.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள்,  வனாந்திரங்கள்,  வனசீவராசிகள், வளிமண்டலம்,  பறவைகள்,  சோலைகள்,  கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம்,  விலங்கினம், பறவையினம்,  தாவரங்கள்,  கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி,  உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.நவீன விஞ்ஞான,  தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக  சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள்,  புகை என்பன நீர் நிலைகள்,  வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல்,  ஓசோன் படை பாதிப்பு,  நன்னீர் வளம்,  சமுத்திரம்,  கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு,  வனாந்திரமாக்கல்,  உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம்,  சுகாதாரம்,  இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும்,  அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை

ENUP  இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை,  சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும்,  குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்,  தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும்,  சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு,  கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம்,  சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல்   இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை  மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம்  ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல்,  புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி,  பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் – வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி,  ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி,  நம் வசிப்பிடம்,  நம் வீடு
1997 – பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி – நம் எதிர்காலம்,  காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு – செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் – அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் – இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் – கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் – தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி – ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் – குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி

இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி,  ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டின் செயற்திட்டத்தின் கீழ்  சூழல் சம்பந்தமான விடயங்களுக்கு மனிதநேயத்தை வழங்குதல்,  மக்களை நிலையானதும், பொறுப்பானதுமான விருத்தியின் சுறுசுறுப்பான பிரதிகளாகச் செயற்பட அதிகாரமளித்தல். சூழல் சம்பந்தமான விடயங்கள் பற்றி சமூகத்தின் மத்தியில் மனப்பான்மை மாற்றம் பற்றிய நற்புரிந்துணர்வை வளர்த்தல்,  எல்லா நாடுகளுக்கும்,  மக்களுக்கும் மகிழ்ச்சியுடனும், மிக்க பாதுகாப்புடனும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் செயற்படல் என்ற அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா 
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து

2009ல் உலக சூழல் தின முதன்மைக் கொண்டாட்டத்தை  மெக்சிக்கோவில் நடத்துவதாக ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்ட தலைவரும் நிர்வாகப் பணிப்பாளரும், அறிவித்துள்ளார்கள். எனினும், எனினும் தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலின் ஆரம்பம் மெக்சிக்கோவில் இடம்பெற்றதாகக் கருதப்படுவதினால் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சில தாக்கங்கள் உருவாகலாம் என கருதப்படுகின்றது.

இன்னும் 180 நாட்களில் கோப்பன் ஹேகனில் நடைபெறவுள்ள நெருக்கடியான சூழல் மகாநாட்டில் காலநிலை மாற்றம் பற்றியும் வறுமை ஒழிப்பு பற்றியும், காடுகளின் சிறப்பான முகாமைத்துவம் பற்றியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர உள்ளனர். இதனையொட்டி இவ்வருட சூழல் தினம் முக்கியத்துவம் பெறவுள்ளது.  ஐ.நா. சூழல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய 100கோடி மரங்கள் நடத்திட்டமிடப்பட்டுள்ளன.  இதில் 25 கோடி மரங்களை நட மெக்சிக்கோ முன்வந்துள்ளது.

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர் கெள்ளும் சவால்களிளொன்று சுற்றுச் சூழல் மாசடைதலாகும். இந்நடவடிக்கையானது மக்களால் தன்னிச்சையாக ஏற்படுத்தப்படுகின்ற அபாயகமரான செயற்பாடாகும் என்றும் கூறலாம். இதனால் சர்வதேசமும் அதனைச் சூழவுள்ள பிரபஞ்சமும் அதன் இயற்கை சமநிலையிலிருந்து மாற்ற மடைகின்றது. எனவே இவ்வையகத்தே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதும் இச்சுற்றாடல் மாசடைதல் என்பது வெள்ளிடைமலை. ஏலவே இதுபற்றிய விழிப்புணர்வை அனைவர்களுக்கும் உண்டாக்க வேண்டிய கடப்பாடு புத்திஜீவிகளையே சாரும்.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு

alice.jpgகனடாவை சேர்ந்த பெண்  எழுத்தாளர் அலைஸ் முன்றோவுக்கு இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சிறந்த ஆங்கில இலக்கிய படைப்புக்கான புக்கர் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ. 47 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு கனடாவின் அலைஸ் முன்றோ, இந்தியாவின் மகாஸ்வேதா தேவி, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளர் வி.எஸ்.நைபால் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இது குறித்து நடுவர் குழுவினர் கூறுகையில், அலைஸ் முன்றோ சிறுகதை எழுத்தாளர் என்ற அளவில் தான் அனைவராலும் அறியப்பட்டுள்ளார். ஆனால், அவரது நாவல்கள் அனைத்துமே தலைசிறந்த எழுத்தாளர்களின் தலைசிறந்த எழுத்துக்களை போல் உள்ளது. அவரது புத்தகம் ஒவ்வொன்றையும் படிக்கும் போது நாம் இதுவரை அறிந்திராத புதிய விஷயம் ஒன்றை கற்றுக்கொள்ளலாம் என்றனர்.

இந்த விருது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என முன்றோ தெரிவித்துள்ளார்.

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!! : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

Nithiyananthan_DrVanni_MissionMoorthy N S DrThaya_Idaikadar_Clrசெய்தி: கெப்டன் அலி கப்பல் கடற்படையால் கைப்பற்றப்பட்டது.

கெப்டன் அலி என்ற கப்பல் இன்று (SL_June 05 2009) அதிகாலை கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இலண்டனிலிருந்து அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததாக கூறப்படும் இக்கப்பல் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போதே கடற்படையால் கைப்பற்றப்பட்டது எனக்கூறப்படுகிறது.

ஆயினும் வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்கனவே இலங்கை அரசுடன் இரகசியமாக மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமையவே கப்பல் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைய அனுமதிக்கப்பட்டது. எந்தவொரு கப்பலும் அதன் புறப்படும் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது அது எத்துறைமுகத்திற்குச் செல்கிறது என்பது போன்ற விதிமுறைகளுக்கு அமையவே புறப்பட முடியும். அதற்கு ஏற்ப வணங்கா மண் ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தே கப்ரன் அலியை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக ‘லண்டன் குரல்’ பத்திரிகைக்கு தெரியவந்துள்ளது. ‘வணங்கா மண்’ ‘கப்டன் அலியாகி’ இலங்கைக்குச் செல்ல இலங்கை அரசு அவர்களைக் கைது செய்வது போல் கைதுசெய்து விடுவிக்க உள்ளது.

லண்டன் வந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் வணங்கா மண் தொடர்பாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் இன்று (யூன் 4) கேள்வி எழுப்பியபோது, கப்பல் தகுந்த ஆவணங்கள் இன்றி இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்தால் இலங்கை அரசு தனது பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார். வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவினருடன் இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது தொடர்பாக அவர் எதனையும் குறிப்பிடவில்லை. கப்பலில் உள்ள பொருட்கள் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் மனிதாபிமான உதவிப் பொருட்கள் விதிமுறைகளுக்கு அமைவாக வழங்கப்பட்டால் அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதில் எவ்வித தடையும் இல்லை என்பதை இலங்கை உயர்ஸ்தானிகர் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இதற்கான இரகசிய உடன்பாடும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்தது.

செய்தியின் பின்னணி:

இன்று லண்டனில் வெளியான ‘லண்டன் குரல்’ பத்திரிகையின் பிரதான செய்தி. தேசம் நெற் வாசகர்களுக்காக மீள் பிரசுரமாகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வணங்கா மண் ஏற்பாட்டுக் குழுவின் நேர்காணலை பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 2

வணங்காமண் ஏற்பாட்டலர்களை நேர்காண்கிறார்கள் GTV www.tubetamil.com 3

வணங்கா மண் தொடர்பாக வெளியான முன்னைய கட்டுரை.

புலத்து தமிழ் மக்களின் இஸ்ரேலியக் கனவு ‘வணங்கா மண்’ : த ஜெயபாலன்

வணங்கா மண்: வசூல் மர்மம் தொடர்கிறது! பொருட்கள் இல.அரசிடம் ஒப்படைக்கப்படும்!!!

‘உலகமே கை விட்ட பின் எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணம்.’ என்று பெரும் எடுப்பில் ஆரவாரித்த வணங்கா மண் ஒருங்கிணைப்புக் குழுவின் வசூல் மர்ம் இன்னும் தொடர்கிறது.

‘சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா? வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எம்மினம் அழிய விடுவோமா? அரசுகள் கைவிட்டால் என்ன? மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து செல்லுங்கள் எம்துயரை, பெற்றுக்கொள்வோம் அவர்கள் ஆதரவை. காத்திடுவோம் எம் உறவுகளை!!!’ என்று உணர்ச்சிகளைத் தூண்டி முழுவீச்சில் வணங்கா மண் பொருட்களையும் நிதியையும் சேகரித்தது.

ஆனால் பட்டினியால் தவித்த மக்களின் இறுதிப் பகுதியினர் மீட்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு இருவாரங்கள் கடந்தும் இன்னமும் இக்கப்பல் வன்னி மக்களை நெருங்கவில்லை. முல்லைத் தீவு கடற்பரப்பிற்கு கொண்டு சென்று சர்வதேச கவனத்தை ஈர்க்கப் புறப்பட்ட வணங்கா மண் தற்போது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது சுயஸ் கால்வாயைக் கடக்கும் இக்கப்பல் இலங்கை அரசின் உடன்பாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை அடைந்து பொருட்கள் அரசினால் கையேற்கப்பட உள்ளதாக லண்டன் குரலுக்குத் தெரிய வருகிறது. 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஆரம்பிக்க்பட்ட இந்த வணங்கா மண் கப்பல் திட்டம் அதன் ஆரம்பத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது தங்கள் ஆரம்ப முடிவில் இருந்து U-turn எடுத்து இலங்கை அரசிடம் பொருட்கள் கையளிக்கப்பட உள்ளது.

மார்ச்சில் ஆரம்பிக்க்பட்ட “Mercy Mission to Vanni” என்றழைக்கப்பட்ட இக்கப்பல்த் திட்டத்திற்கு கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி ஆகியோரைக் கொண்ட Dr மூர்த்தி தலைமையிலான குழு பொறுப்பாக இருந்தது. இக்குழுவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவருடன் லண்டன் குரல் தொடர்பு கொண்ட போது இது பற்றிய விபரங்கள் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

வன்னிமிசன் என்ற பெயரில் உள்ள உத்தியோகபூர்வ இணையத்தளமும் முக்கிய தகவல்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. வன்னிமிசனில் அனுப்பப்படும் பொருட்களின் விபரம், அதற்கு சேகரிக்கப்பட்ட நிதி விபரம் அதற்கான செலவு விபரங்கள் எதுவுமே அறிவிக்கப்படாமல் கப்ரன் அலி, சிரியா நாட்டுக் கொடியுடன் கப்பல் இலங்கை நோக்கிச் செல்கிறது.

இக்கப்பலின் கொள்ளளவு Maximum TEU capacity : 5560 Reefer containers : 1080. ஆனால் கப்ரன் அலியின் கொள்ளளவிலும் மிகக் குறைவான தொகையான 900 மெற்றிக்தொன் வரையான உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களுமே அனுப்பப்படுகின்றது.குறைந்த அளவான பொருட்களுக்கு தனியாக ஒரு கப்பலை ஒழுங்கு செய்து அனுப்புவதற்கான செலவுத் தொகை மிக மிக அதிகமாகும்.

பிரித்தானியாவில் உள்ள இந்துக் கோவில்கள் ஒன்றியம் மட்டும் 200 000 பவுண்களை வன்னிமிசனுக்கு வழங்க முன்வந்து 50 000 பவுண்களுக்கு காசோலையை உடனடியாக வழங்கி இருந்ததாக வன்னிமிசன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

வன்னி மக்களின் அவலத்தை முன்நிறுத்தி ஆபிரிக்காவில் உள்ள உயர்ந்த மலைச் சிகரமான கிளிமொஞ்சதாரோ மலையில் ஏறிய கீரன் அரசரட்ணம் என்ற இளைஞர் 30 000 பவுண்சை சேகரித்து வணங்கா மண் திட்டத்திற்கு வழங்கி உள்ளார்.

இதனைவிட வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இந்த வன்னிமிசனுக்கு பொருளாகவும் நிதியாகவும் உதவிகளை வழங்கி உள்ளனர்.

ஆனால் இந்த வன்னி மிசனின் ஏற்பாட்டுக் குழுவினர் ஒரு கப்பலை ஒழுங்கு செய்து  பொருட்களை அனுப்பினால் தங்கள் பொறுப்பு முடிந்தது என்ற வகையில் நடந்துகொள்கிறார்கள் என இவர்களுடன் தொடர்பு கொண்ட பொதுமக்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினரான கவுன்சிலர் தயா இடைக்காடர், கலாநிதி நித்தியானந்தன், Dr புவி, Dr மூர்த்தி ஆகியோர் இந்த வன்னிமிசன் தொடர்பாக பொறுப்புடன் நடந்து கணக்கு மற்றும் விடயங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழ ஆரம்பித்து உள்ளது.

காத்தான்குடியில் இளம் வர்த்தகர் கடத்தல்

witevehicle.jpgமட்டக் களப்பு காத்தான்குடியில் நேற்று நள்ளிரவு இளம் வர்த்தகர் ஒருவர் வீட்டிலிருந்த வேளை, வெள்ளை வேனில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  கலந்தர் லெப்பை அஜ்மத்(வயது 38) என்ற பாதணி தயாரிக்கும் நிறுவனமொன்றின் உரிமையாளரான வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

நள்ளிரவு உறக்கத்திலிருந்த வேளை கதவைத் தட்டியெழுப்பிய சம்பந்தப்பட்ட நபர்கள் பலவந்தமாக இவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து காத்தான்குடி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதற்கான பின்னணியோ இது வரை வெளியாகவில்லை.

தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் கருத்து குறித்து கவலைப்படவில்லை – ஸ்ரீ காந்தா பா.உ.

srikanthaa.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லையென அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற முடியுமென்று எவராவது நம்பினால் அந்த அரசியல்வாதிகள் இலங்கையின் சாசனத்தைப் படித்து பார்ப்பது நல்லது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் நாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து எமது மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றோம். எமது வெற்றி தொடர்பாக தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை இப்போது முன்வைப்பவர்கள். யாழ். குடாநாட்டில் 1994 மற்றும் 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

அது ஒருபுறம் இருக்க அரசியல்சாசனத்துக்கு விரோதமாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செயற்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்கள் முதலில் சமர்ப்பித்து சட்டரீதியாக சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, கூட்டமைப்பை கூண்டோடு பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றமுடியாது.

எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவிருந்தாலும் கூட அந்த விவகாரம் நீதி மன்றத்திலேயே முடிவு செய்யப்பட வேண்டிய விடயமாகும். எனவேதான் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லை என்றார்.

“இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்தால் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி’

SLMC Gen Sec M T Hasan Aliவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.  தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.

அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.

யசூசி அகாஷி 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம்

yasusiakasi.jpgஇலங் கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி எதிர்வரும் 8ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கையிலுள்ள ஜப்பானியத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் யசூசி அகாஷி தனது விஜயத்தின்போது அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சியினரைச் சந்தித்து மீள்குடியேற்றம்,  அபிவிருத்தி, புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு 18ஆவது தடவையாக விஜயம் செய்யும் அகாஷி தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப முன்னர் எதிர்வரும் 11ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்றும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

வட மாகாண மாதிரிக் கிராம மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

north_.jpgவட மாகாணத்திலுள்ள மாதிரிக் கிராமங்களில் வாழும் மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீடமைப்புத் திட்டங்களை முன்னிட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம்,  மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயங்களில் உள்ள அலுவலர்களிடமிருந்தும் இதற்கான ஒத்துழைப்புக்கள் பெறப்படவுள்;ளன.

இதுதவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதோடு வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு அரச அதிபரின் வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வீட்டிற்குள் நேற்று நண்பகல் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் பணம், நகை உட்பட சுமார் 15 லட்சம் பெறுமதியான உடைமைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. அரசாங்க அதிபர் தனது கடமையின் நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் இருந்தவேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உப்போடையிலுள்ள அவரது இல்லத்திற்குள் நுழைந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தங்களை அடையாளம் காண முடியாதவாறு ஹெல்மெட்டினால் முகத்தை மறைத்திருந்ததாகவும், கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியன வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆயுததாரிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவி,மற்றும் விருந்தினராக வந்திருந்த உறவினர்கள் உட்பட அங்கிருந்தவர்களை மிரட்டி அறையொன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் வைத்திருந்த ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கை கிரிக்கெட் அணியின் வரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

muralitharan-sri-lankas.jpgஐ.சி.சி. 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியும், ஏனைய நாடுகள் போட்டியை பகிஷ்கரிக்க கோரியும் லண்டன் வெலிங்டன் வீதியில் லண்டன் வாழ் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாளை  5ஆம் திகதி லண்டனில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி. இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது. இதன்போது நேற்று புதன்கிழமை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கைகளில் பாதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதனால் உலக அரங்கில் இலங்கை கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியின் போது மைதானத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.  மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி கிரிக்கெட் அணி உலக நாடுகளுடன் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகளை பிரித்தானியா புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  போட்டிகள் நடைபெறும் தினங்களில் மைதானங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது