29

29

படைவீரர்களுக்கு முன்னுரிமை வழங்க பணிப்பு

தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களுக்கு வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னக் கோன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பணித்துள்ளார். இது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி உள்ளூராட்சிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள், நகர, மாநகர சபைகள் பிரதேச சபைக் காரியாலயங்களுக்கு அதன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் படை வீரர்களுக்கு முன்னுரிமையளிக்கவும், அவர்களது தேவையை விரைவாக நிறைவேற்றவும் உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படுமானால் அது பற்றி அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன் அவர்கள் குறித்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் மாகாண பிரதம செயலாளர்கள் மூலம் அறிவுறுத்தப்படவுள்ளது.

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

27-saniamirza.jpgபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

ஈரான் உதவியுடன் 1000 கிராமங்களுக்கு மின்சாரம்

wdj-senavi.jpgஈரான் உதவியுடன் 8 ஆவது கிராமிய மின்சார அபிவிருத்தித் திடத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை மின் சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ. டீ.ஜே. செனவிரத்ன முன்வைத்திருந்தார்.

இத்திட்டத்துக்கு 106.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1000 கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்படும். அத்துடன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் புதிய பபவனையாளர்கள் உள்வாங்கப்படுவர்.

முகாம்களில் மரணமான 66 பேரின் சடலங்கள் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருக்கையில், குறிப்பிட்ட சில நாட்களில் மரணமடைந்த 66 பேரது சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.  இதில் ஆறு சிசுக்களது சடலங்களும் அடங்கும்.

செட்டிகுளம் முகாம்களில் தங்கியிருக்கும் முதியோரின் மரணவீதம் அதிகரித்து வருகிறது. தினமும் ஐந்து முதல் எட்டு வரையிலான முதியவர்கள் இங்கு மரணமடைகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்ட 66 சடலங்களில் மிகப் பெரும்பாலானவை வயோதிபர்களுடையவை.

உறவினர்களால் பொறுப்பேற்கப்படாததும் அடையாளம் காணப்படாத சடலங்களே இவையாகும். வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

முதியவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் இல்லையேல் இவர்களை வயோதிபர் இல்லங்களில் சேர்த்து விடுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டரங்கு!

ground.jpgஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பார்வையாளாகளுக்கான வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டரங்கு ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வாணபால முன்வைத்திருந்தார்.

45 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த விளையாட்டரங்குக்கு 535 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது,

மகரகமையில் வீடமைப்புத் திட்டம்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக மகரகமையில் அமைந்துள்ள காணியில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.

நந்திமித்திரவை எம்.பி.யாக நியமிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

மாத்தளை மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு நந்திமித்திர ஏக்கநாயக்காவை நியமிப்பதை தடுக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ரோகண பண்டாரநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஐ.தே.க.உறுப்பினரான நந்திமித்திர ஏக்கநாயக்க கடந்த பொதுத் தேர்தலில் அந்தக்கட்சியில் போட்டியிட்ட போதும் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ஐ.தே.க. எம்.பி.அலிக் அலுவிகார காலமானதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக கூடுதல் விருப்பு வாக்குப் பெற்ற நந்திமித்திர ஏக்கநாயக்க அந்தப் பதவி தனக்கு வழங்கப்படவேண்டுமென கோரிவரும் நிலையில், அவருக்கு இந்தப் பதவியை வழங்கக் கூடாதென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பெறுபோறுகளின் அடிப்படையில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவாரென தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபர் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மாத்தளை மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றுள்ள நந்திமித்தர பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவாரென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றத் தவறியது இலங்கை தமிழர்களைப் பாதிக்குமா?

uno.jpgஇலங் கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி இலங்கை அரசு மீது சர்வதேச தமிழ் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பதால் இலங்கைக்குள்ளே இருக்கும் தமிழ் மக்களின் நலன்கள் பெரிதாக பாதிக்கப்படும் நிலை உருவாகாது என்றே தான் கருதுவதாக லண்டனில் உள்ள இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய அரசியல் போராட்ட நிலைபாட்டிலும் வழிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை கரையோரங்களில் சுனாமி அச்சம்: கடல் நீர் உட்புகுந்ததால் பெரும் பரபரப்பு

sea.jpgஅம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் மினி சுனாமி ஏற்பட்டதனால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து பதற்றத்துக்குள்ளாகினர். நேற்று வியாழன் அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பும், காற்றின் வேகமும் அதிகரித்ததனால் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுகளும் தோணிகளும் கிறவல் வீதிக்கருகில் ஒதுக்கப்பட்டிருந்தன. இது தவிர நாலாபுறமும் படகுகளும், தோணிகளும் ஒதுங்கிக் கிடந்தன.

மீனவர்களின் வாடிகளுக்குள் கடல் நீர் புகுந்ததனால் அங்கிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தொழில் ரீதியான உபகரணங்களும் கடல் நீரில் அகப்பட்டன. கடல் கொந்தளிப்பும், உயர்ந்த அலைகளும் தொடர்ந்தும் ஏற்பட்ட வண்ணமுள்ளதனால் மீனவர்கள் தத்தமது படகுகளையும் தோணிகளையும் கடற்கரையை அண்மித்துள்ள தோணாக்களிலும், ஊர் பிரதேசங்களிலும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களுக்குச் சிறு சிறு சேதம் ஏற்பட்ட போதிலும் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடல் கொந்தளிப்பும் மினி சுனாமியும் ஏற்பட்டதனால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்த மக்கள் அச்சம் காரணமாகப் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.

தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நிலை சீரடையக் கூடிய வாய்ப்புக்குறைவாக இருப்பதாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறினர். குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்போன்ற கடற் பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யூதக் குடியேற்றம்: அமெரிக்க கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல்

israeli-settlements.jpgமத்திய கிழக்கின் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குடியேற்றங்களின் எதிர்காலம் பற்றி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தைகளில்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் சார்பாகப் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார். விதிவிலக்கு எதுவுமின்றி தனது அனைத்து விதமான குடியேற்ற நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்திக்கொள்வதை அதிபர் ஒபாமா காண விரும்புவதாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் புதனன்று கூறியிருந்தார்.

அதிபர் ஒபாமாவை வாஷிங்டனில் சந்திக்கின்ற பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் தொடர்ந்தும் யூதக் குடியேற்றங்களை உருவாக்கிவருவது பாலஸ்தீன தனிநாடு என்ற இலட்சியம் எட்டப்படுவதை தடுத்துவிடும் என்று முஸ்லிம் நாடுகள் அஞ்சுகின்றன.