மத்திய கிழக்கின் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
குடியேற்றங்களின் எதிர்காலம் பற்றி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தைகளில்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் சார்பாகப் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார். விதிவிலக்கு எதுவுமின்றி தனது அனைத்து விதமான குடியேற்ற நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்திக்கொள்வதை அதிபர் ஒபாமா காண விரும்புவதாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் புதனன்று கூறியிருந்தார்.
அதிபர் ஒபாமாவை வாஷிங்டனில் சந்திக்கின்ற பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் தொடர்ந்தும் யூதக் குடியேற்றங்களை உருவாக்கிவருவது பாலஸ்தீன தனிநாடு என்ற இலட்சியம் எட்டப்படுவதை தடுத்துவிடும் என்று முஸ்லிம் நாடுகள் அஞ்சுகின்றன.