அம்பாறை கரையோரங்களில் சுனாமி அச்சம்: கடல் நீர் உட்புகுந்ததால் பெரும் பரபரப்பு

sea.jpgஅம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் மினி சுனாமி ஏற்பட்டதனால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து பதற்றத்துக்குள்ளாகினர். நேற்று வியாழன் அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பும், காற்றின் வேகமும் அதிகரித்ததனால் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுகளும் தோணிகளும் கிறவல் வீதிக்கருகில் ஒதுக்கப்பட்டிருந்தன. இது தவிர நாலாபுறமும் படகுகளும், தோணிகளும் ஒதுங்கிக் கிடந்தன.

மீனவர்களின் வாடிகளுக்குள் கடல் நீர் புகுந்ததனால் அங்கிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தொழில் ரீதியான உபகரணங்களும் கடல் நீரில் அகப்பட்டன. கடல் கொந்தளிப்பும், உயர்ந்த அலைகளும் தொடர்ந்தும் ஏற்பட்ட வண்ணமுள்ளதனால் மீனவர்கள் தத்தமது படகுகளையும் தோணிகளையும் கடற்கரையை அண்மித்துள்ள தோணாக்களிலும், ஊர் பிரதேசங்களிலும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களுக்குச் சிறு சிறு சேதம் ஏற்பட்ட போதிலும் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடல் கொந்தளிப்பும் மினி சுனாமியும் ஏற்பட்டதனால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்த மக்கள் அச்சம் காரணமாகப் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.

தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நிலை சீரடையக் கூடிய வாய்ப்புக்குறைவாக இருப்பதாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறினர். குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்போன்ற கடற் பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *