28
28
மேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.
ஐந்தாவது மேல் மாகாண சபையின் இன்றைய முதலாவது கூட்டம் ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டடத் தொகுதி சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாகாண சபையின் புதிய தலைவர், பிரதித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கான உத்தியோகபூர்வ தெரிவுகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐந்தாவது மேல் மாகாண சபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வன்னி யில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழு இன்று வன்னிக்கு விஜயம் செய்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு ஏற்ப, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழ் வன்னியில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர்; கூறினார். இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு வசதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வன்னியில் நிலைமைகளை அவதானிப்பதுடன் கிழக்கில் திருகோணமலைப் பிரதேசத்திற்கும் சென்று பாடசாலைகளின் நிலைவரங்களை ஆராய்ந்து அவற்றின் தரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.
இலங் கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரஷ்யா தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் சமகால நிலைவரங்கள் குறித்து இரு தலைவர்களும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியனார்கள். இக்கலந்துரையாடலின்போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, இலங்கையை ஒரு நீண்டநாள் நண்பனாகவே கருதுவதாகத் தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான சிறந்த நல்லுறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பப்போவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா வழங்கிய காத்திரமான உதவிகளுக்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு இவ்வுரையாடலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் பொதுமக்களை அவர்களிடமிருந்து விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு முயற்சிகளின்போது ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இத்தொலைபேசி உரையாடலின்போது உடன்பாடு காணப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சில முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை சர்வதேசக் குழுவுக்கு, இலங்கை அரசுதடைவிதித்துள்ளது என்று குழுவின் தலைவர் ஜக் வூப் கெலன் பேகர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“சில முகாம்களுக்கு மாத்திரம் செல்லவே எமக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன், மெனிக்பாம் முகாமின் சில பகுதிகளுக்குச் செல்லவும் அனுமதி தரப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசுஎங்களுக்கு எந்தளவிற்குப் பணியாற்ற அனுமதியளிக்கும் என்று தெரியவில்லை. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் போன்றன தேவைப்படுகின்றன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் நேற்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புத் தரப்பு கூறுகின்றது.
அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத் தரப்புத் தகவல்களின்படி குறிப்பிட்ட 11 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அதேவேளை, படையினருக்கு எத்தகைய சேதங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் பின்பு ரி 56 ரகத் துப்பாக்கிகள் 05, கிளேமோர்க் குண்டுகள் 20, கைக்குண்டுகள் 02, மிதி வெடிகள் 02 மற்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளால் கிட்டத்தட்ட இலங்கை அரசாங்க கருத்துக்கு முரணான தீர்மானம் ஒன்று இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.
இறுதியாக இந்த தீர்மானத்தில் இணக்கத்தை காணும் வகையில் சில மாற்றங்களுடன் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்பட, 59 புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்க உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் காபினட் அமைச்சர்களாகவும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், ப. சிதம்பரம் ஏற்கெனவே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஜி.கே. வாசன் புதிய காபினட் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், வாசன், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு வகித்து வந்தார்.
மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். திமுகவின் சார்பில் மீண்டும் ஏழு பேர் அமைச்சர்களாக இடம் பெறும் நிலையில், காங்கிரஸின் சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை பதவியேற்கும் அமைச்சர்களுடன் சேர்த்து, மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலம் 79 ஆக இருக்கும். அதில், 9 பேர் பெண்கள். ஆனால், தமிழகத்திலிருந்து பெண்கள் யாரும் இல்லை. புதுவையைச் சேர்ந்த வி. நாராயணசாமி, மீண்டும் இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல்கள் 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி நடத்தப்பட உள்ளதாக யாழ்., வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதன்படி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஓர் இலட்சத்து 417 பேர் தகுதி பெற்றுள்ளதோடு, வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிட 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ். மாநகர சபைக்கு 11 வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் மூலம் 23 உறுப்பனிர்கள் யாழ். மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட உள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ். மாவட்ட 2008க்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு மே 30 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்த மாத முதல் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
யாழ். மாநகர சபைத் தேர்தலையொட்டி 67 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேவேளை, புத்தளம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்கள் கோரினால் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாநகர சபைக்கு 1998 ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. யாழ். மாநகர சபை மேயராக எஸ். கந்தையா பணிபுரிந்தார்.
வவுனியா நகர சபை
இதேவேளை வவுனியா நகர சபைத் தேர்தல் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்படும் எனவும் வாக்களிக்க 24 ஆயிரத்து 626 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார். இத்தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
வவுனியா மாநகர சபைக்கு 2000ஆம் ஆண்டு இறுதியாகத் தேர்தல் நடைபெற்றது. தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், நகர சபை மேயராக பணிபுரிந்தார்.
இதேவேளை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 17 முதல் 24 வரை ஏற்கப்பட உள்ளதோடு தேர்தல் ஆணையாளர் இது தொடர்பான அறிவித்தலை ஜூன் 4ஆம் திகதி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட பல பிரதான கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றன. அவை வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளன.
மஸ்கெலியா, மோகினி நீர் வீழ்ச்சி பகுதியிலும், ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டப் பிரதேசத்திலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன நேற்று தெரிவித்தார்.
இதே நேரம் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மண் சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நல்ல தண்ணீர் மோகினி நீர் வீழ்ச்சி பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் நேற்று முன்தினம் விழுந்துள்ளன. இது பெரிய மண் சரிவுக்கான முன்னறி குறியாகக் கூட இருக்கலாம். அதனால் இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிவிப்பை இப்பிரதேசத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டத்தின் நிலப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.