பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள் உள்பட, 59 புதிய அமைச்சர்கள் இன்று வியாழக்கிழமை பதவியேற்க உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் காபினட் அமைச்சர்களாகவும், எஸ்.எஸ். பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன் ஆகிய நால்வரும் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில், ப. சிதம்பரம் ஏற்கெனவே உள்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஜி.கே. வாசன் புதிய காபினட் அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், வாசன், இணை அமைச்சர் தனிப்பொறுப்பு வகித்து வந்தார்.
மன்மோகன் சிங்கின் கடந்த அமைச்சரவையில், தமிழகத்தின் சார்பில் அதிகபட்சமாக 13 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். திமுகவின் சார்பில் மீண்டும் ஏழு பேர் அமைச்சர்களாக இடம் பெறும் நிலையில், காங்கிரஸின் சார்பில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைத்துள்ளது. மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை பதவியேற்கும் அமைச்சர்களுடன் சேர்த்து, மன்மோகன் சிங் அமைச்சரவையின் பலம் 79 ஆக இருக்கும். அதில், 9 பேர் பெண்கள். ஆனால், தமிழகத்திலிருந்து பெண்கள் யாரும் இல்லை. புதுவையைச் சேர்ந்த வி. நாராயணசாமி, மீண்டும் இணை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.