மஸ்கெலியா டவுன்சைட் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாயம்; எச்சரிக்கை

மஸ்கெலியா, மோகினி நீர் வீழ்ச்சி பகுதியிலும், ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டப் பிரதேசத்திலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன நேற்று தெரிவித்தார்.

இதே நேரம் காலநிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மண் சரிவு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்ல தண்ணீர் மோகினி நீர் வீழ்ச்சி பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் நேற்று முன்தினம் விழுந்துள்ளன. இது பெரிய மண் சரிவுக்கான முன்னறி குறியாகக் கூட இருக்கலாம். அதனால் இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிவிப்பை இப்பிரதேசத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கும், அம்பகமுவ பிரதேச செயலாளருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹப்புகஸ்தலாவ – நாவலப்பிட்டி வீதியிலுள்ள டவுன்சைட் தோட்டத்தின் நிலப்பகுதியிலும் வெடிப்பு ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *