22

22

மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு 24 ஆம் திகதி விடுமுறை!

schools_stu.jpgமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி மூடப்படும் என்றும் மீண்டும் அப்பாடசாலைகள் 27 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வித் திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை விருப்பு வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாக  பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மட்டும் 28 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. மேல் மாகானத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஆறு பாடசாலைகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இராணுவத்திடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை : டி.கே.பி. தஸாநாயக்க

dkb-dasanayaka.jpg
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன்கருதி கடற்படையினர் பல நடவடிகைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த இரு நாட்களில் கடற்படையினரிடம் 5000க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடையும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல எமக்கு ஆறு மணிநேரம் தேவைப்பட்டது. கடல் வழியாகத் தப்பி வரும் மக்களில் காயமடைந்தவர்களின் நலன் கருதி மருத்துவ மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய வசதிகள் புல்மோட்டை கடற்தளத்தில் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்க்கக் கூடிய வகையில் கடற்படையினர் தயாரான நிலையலேயே உள்ளனர்” என்றார்

கடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் விடுவித்துள்ளனர்- கெஹெலிய ரம்புக்வெல

keheliya_rambukwella.jpgகடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெரும் தொகையினரை படையினர் விரைவில் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்ததுவ உதவிகளை படையினர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார். 

நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லை – அதிமுக, தேமுதிக,மதிமுக, இடதுசாரிகள்

jayalalitha.jpg“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்தச் சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும்” என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களைச் சட்ட விரோதம் என்று அறிவித்திருக்கிறது.

வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதி படையினர் வசம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு

keheliya_rambukwella.jpgபாதுகாப்பு வலயத்தில் மூன்றில் ஒரு பகுதியை படையினர் இப்போது கைப்பற்றியுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இராணுவத்தின் 55 ஆம் 58 ஆம் படையணியினர் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து பொது மக்களை விடுவித்துக்கொண்டு தெற்கு பக்கம் நோக்கி முன்னேறுகின்றனர். இன்னும் 8 கிலோ மீற்றர் தூரமான நிலப்பரப்பு மட்டுமே புலிகளிடம் எஞ்சியுள்ளது. இதற்குள்தான் பிரபாகரனும் மறைந்துள்ளார் என நம்புகிறோம். புலிகளின் தலைவலைரக் காப்பாற்றும் நோக்கில் இப்பிரதேசத்தில் சுய விருப்பத்துடனேயே பொது மக்கள் தங்கியுள்ளனர் என்ற பொய்ப் பிரசாரம் இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

புலிகளிடமிருந்து விடுதலை பெற அவர்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கெண்டனர். கையில் கிடைத்த பொருட்களுடன் கடல் ஏரியில் மார்பளவு நீரில் இறங்கியேனும் தப்பிச் செல்ல அவர்கள் காட்டிய வேகம் இதனை நன்கு நிரூபிக்கின்றது.

கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று

thissa-abeysekara.jpgகாலஞ் சென்ற பிரபல சினிமாக் கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொழும்பு, ராஜகிரியவிலுள்ள சந்திரா டி சில்வா விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு தேசிய கலாபவனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ள நடைபெற மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் திஸ்ஸ அபேசேகர கடந்த 18ஆம் திகதியன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை.- வினோ

sri-lanka-parliament.jpgவன்னியில் மக்கள் பெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வட பகுதியில் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கோ அல்லது மக்கள் வாக்களிப்பதற்கோ பொருத்தமான சூழல் இல்லை.என்று வினோ நோகாதரலிங்கம் த. தே. கூ. எம்.பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் கணக்கின்படி பார்த்தால் இனி அங்கு பொதுமக்கள் இல்லை என்ற கருத்தைத் தோற்றுவித்துள்ளது.

அப்படியானால் எஞ்சியிருக்கின்ற மக்கள் யார்? அவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? இதற்கு அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்களை இழந்துதான் ஒரு சமாதானம் கிடைக்குமென்றால் அவ்வாறான ஒரு முடிவு எமக்குத் தேவையில்லை. ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள சகோதரர்களுடன் சந்தோசமாக வாழ நாம் தயாராக இருக்கின்றோம். எமக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

புலிகளின் முக்கிய இரு தலைவர்கள் படையினரிடம் சரண் – பாதுகாப்பு அமைச்சு :எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை- விடுதலைப்புலிகள்

dayamaster.jpgஎல்.ரி.ரி.ஈ.  இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று பிற்பகல் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்களிருவரும் சரணடைந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஊடகத்துறைப் பெறுப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் செயல்பட்டு புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சேவையாற்றியவராவார்.

geargemaster.jpgஜோர்ஜ் என்பவர் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் எல்.ரி.ரி.ஈ. தலைவரான பிரபாகரனின் மொழி பெயர்ப்பாளரகவும் செயல்பட்டு வந்தார். அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் கடந்ட 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின்போது இவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி

20-karunanithi1.jpgஇலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி. இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

இரு தினங்களில் 63, 000க்கும் அதிக – சிவிலியன்கள் படையினரால் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நேற்றைய தினமும் பெருந்தொகையான பொது மக்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருகை தந்ததாக தெரிவித்த அவர் கடந்த இரு தினங்களுக்குள் 62,609ற்கும் அதிகமான பொது மக்களை படையினர் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொது மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 35 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் பாரிய நடவடிக்கை தற்பொழுது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புதுமாத்தளன் பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினர் புதுமாத்தளன் வைத்தியசாலையையும் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளதாக பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். பொது மக்களுக்காக பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலையை புலிகளே பயன்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 புதுமாத்தளன் பகுதிக்குள் பிரவேசித்து முன்னேறி வரும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் புதுமாத்தளன் மேற்கு பிரதேசத்திலிருந்து கிழக்கு பிரதேசம் வரையிலான கரையோரத்தையும் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் இராணுவத்தினர் புலிகளின் கவச வாகனம் ஒன்றையும் தாக்கியழித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிச் செல்லும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த புலிகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நால்வர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வலயத்திலுள்ள பொது மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆரம்பித்தனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ மீற்றர் நீளமான மண் அணையை படையினர் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களை படையினர் மீட்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி சாரைசாரையாக மக்கள் வர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, திங்கட்கிழமை மாத்திரம் 39,081 பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். இவர்களில் 36,914 பேரை இராணுவத்தினரும், 2,167 பேரை கடற்படையினரும் மீட்டெடுத்தனர் என்றும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து தப்பி செல்லும் பொது மக்களை தடுக்கும் வகையில் புலிகள் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களையும், பீரங்கி தாக்குதல்களையும் நடத்தி வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.