“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்தச் சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும்” என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
“போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களைச் சட்ட விரோதம் என்று அறிவித்திருக்கிறது.
வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.