April

April

உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜி20 மாநாட்டில் நடவடிக்கை

g-20.jpgலண்டனில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வுகளின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச பொருளாதர நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கான பணத்தை அதிகரிப்பது, நிதி கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினைகள் குறித்து லந்துகொண்ட தலைவர்கள் கலந்துரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இன்னல்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.மேலும் 25 பில்லியன் டி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி, உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். செல்வாக்கு வாய்ந்த அனைத்து நிதி நிறுவனங்கள், நிதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சந்தைகள் மீது, கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புதிய நிதி ஆணையத்தை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து, உலக பொருளாதாரம் மற்றும் சந்தையின் அபாயத்தையும், கண்காணிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிகின்றன. 

இலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்கு கட்டார் பூரண ஒத்துழைப்பு

president_qutr_amb.jpgஇலங்கையின் வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும், முதலீட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் கட்டார் அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி காலித் பின் மொஹமட் அல் அத்தியா அரசாங்கத்துடன் நடத்திய இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழியை வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு முதலீட்டு, பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. கட்டார் மன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறபோது இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகுமென அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

கட்டார் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றுக் காலை (03) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுடன் கட்டார் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சரும் கலந்துகொண்டார்.

கட்டார் மன்னரின் இலங்கை விஜயத்திற்கான முன்னோடிப் பயணமாக வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருக்கின்றார். இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார விடயங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில், தொழில் முயற்சிகள் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பொறியியல், நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், விவசாய, கமநல சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் விஜேதிலக, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஜோர்ஜ் மிக்காயல், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், நிதியமைச்சு, முதலீட்டுச் சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் முதலானோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கட்டார் அரசுடன் இணைந்து தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டார் வங்கியொன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. கட்டாரில் தற்போது 1,40,000 இலங்கையர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பிள்ளைகளுக்காக இலங்கை நடத்தும் பாடசாலைக்கென நிரந்தரக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணியொன்றைப் பெற்றுத் தருமாறு இலங்கையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்டார் வெளிவிவகார அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அகியா, 1976 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட உறவு உள்ளது. இலங்கைக்கு உதவ வேண்டிய தருணம் இதுதான். எனவே, பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்காக முதலீடு செய்யும் விரும்பும் கட்டார் வர்த்தகர்களுக்கு முதலீட்டுச் சபையூடாக சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அதிகாரிக்கும் விடுதலைப் புலிகள் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல்: நோர்வே மீது இலங்கை அரசு அதிருப்தி

dr-palitha.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரியான சேர் ஜோன் ஹோம்ஸிற்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிக்கும் இடையில் தொலைபேசிக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நோர்வே அனுசரணை வழங்கியமைக்காக இலங்கைக்கான நோர்வே தூதுவரை அழைத்து இலங்கை அரசு அதிருப்தி வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரி சேர் ஜோன் ஹோம்ஸ் இடையில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் குறித்தே நோர்வேயின் தூதுவரிடம் இலங்கை வெளிநாட்டமைச்சு தனது அதிருப்தியினை வெளியிட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறானதொரு கலந்துரையாடலுக்கு அனுசரணை வழங்கியதாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் இந்தச் சந்திப்பின்போது ஒப்புக்கொண்டிருப்பதாக பாலித கொஹொன தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் அரச ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள் : ஐ.தே.க. எம்.பி. வஜிர

unp-vijira.jpg“எமது நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளார்கள். அவர்களுக்கான ஓய்வூதியம் கூட ஒழுங்கான முறையில் கிடைக்கப் பெறுவதில்லை” என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகேகர நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

“எமது ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க.அரச ஊழியர்களுக்கு எவ்வாறான சலுகைகளை அளித்தது என எம்மை வினவுகிறார்கள் . ஆரம்ப காலத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 55 ஆகக் காணப்பட்டது. இதனால் எமது ஆட்சிக்காலத்தில் நாம் ஓய்வூதிய நிலையத்தில் ஒரு கணிப்பை மேற்கொண்டோம். 55 வயதில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் 60 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை என்பன தொடர்பில் கணிப்பொன்று நடத்தப்பட்டது. அதன் பிரகாரம் 55 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை 100 க்கு 5 வீதமாகவே இருந்தது. இதனால் வயதெல்லை 60 ஆக தீர்மானிக்கப்பட்டது.

ஐ.தேகவினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது 55 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரிக்க அக்காலக்கட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களின் பதவி உயர்வுகளில் எவ்வித பாதகமான நிலை ஏற்பட்டாலும் ஓய்வூதியம் பாதிக்கபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தற்போது கூறப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் அரச ஊழியர்கள் ஒரு குழப்ப நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்காக 25,000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் தென் பகுதி காலியில் அமைக்கப்பட்டன.  இப்பொழுது அவற்றைத்தான் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 1500 வீடுகள் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது? திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிய வங்கியோ, சர்வதேச நாணய நிதியமோ இலங்கைக்கு கடன் உதவி வழங்கும்போது, அந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார நிலையை அவதானித்தலே முக்கியமான செயலாக இருக்கும் . நாட்டில் நிதி கொள்கைகள் ஒழுங்கான முறையில் கணக்கிடப்படாவிட்டால், எந்த நாடும் நமது நாட்டுக்கு உதவி வழங்க முன் வரப்போவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலையே காணப்படுவதாகப் பரவலாக பேசப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மாளிகாவத்தை சிறுநீரக மாற்று சிகிச்சை ஆராய்ச்சி பிரிவு தொடர்பில் சர்ச்சை

nimal-sri-pala.jpgகொழும்பு, மாளிகாவத்தையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவை எந்தத் தரப்பினரிடம் ஒப்படைப்பதென்பது தொடர்பாக நிலவிவரும் இழுபறி நிலைக்கு அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குள் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கப் போவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இப்பிரிவு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினரும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் சுமுகமான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் ஆராய்ச்சி பிரிவின் மருத்துவ உபகரணங்களை அனுராதபுரம் மற்றும் பதவிய அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குக் கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப்பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுமார் 17 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கம் 450 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் சிறுநீரக வியாதிகள் பிரிவை மக்கள் நலன்கருதி இந்நாட்டில் முதற் தடவையாக நிர்மாணித்திருக்கிறது.

இந்தப் பிரிவை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைப்பதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது. இதனால் இப்பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த இழுபறி நிலை ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இந்நிலை இனியும் தொடர இடமளிக்க முடியாது என்றார்.

இப்போதைக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் இல்லை – ஐ.சி.சி. அறிவிப்பு

icc-logo.jpgபாகிஸ் தானில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. லாகூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மொர்கன் வெலிங்டனில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

லாகூரில் நடந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு பாகிஸ்தõனுக்கு கிரிக்கெட் அணிகளையோ அதிகாரிகளையோ அனுப்ப முடியாது. அங்கு பாதுகாப்பு விடயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால்தான் கிரிக்கெட் அணிகளை அனுப்புவது பற்றி பரிசீலனை செய்ய முடியும் என்றார்

அமைச்சர்கள் தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” – ஐ.தே.க. ரங்க பண்டார

unp-ranga.jpgநாட்டு மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் 270 மீனவ படகுகள் கடலுக்குச் செல்ல கடற்படையினர் தடை விதித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் 8,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களது ஒரே ஜீவனோபாய தொழில் இது மட்டுமே. கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆழ்கடல் சுழியோடிகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது. இந்தத் தடையுத்தரவால் அந்நிய செலாவணியும் கிடைக்காமல் போகிறதல்லவா?

மீன்பிடிக்கச் செல்வதற்குக் கடல் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறு தீவுகள் காணப்படும் கடற்பகுதியிலேயே மீன் பிடிக்க முடிகிறது. தமிழ்-சிங்கள சித்திரை புது வருடத்துக்கு சில நாட்களே உள்ளன. இந்த உற்சவ காலத்தில் மக்களின் நிலை பற்றி எவருமே கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு புதுமாத்தளன் பகுதியில் 1 கிலோ மீற்றருக்கு புலிகளை மட்டுப்படுத்தி உள்ளதாகக் கூறுகிறது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கற்பிட்டி கடற்பரப்பில் மீன் பிடிக்க அரசு கடற்தொழிலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கின்றது என நான் அரசிடம் கேட்கிறேன் . மீனவர்கள் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்றே நான் அரசிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இன்று அமைச்சர்கள் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்களே தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். 

கட்டார் அமைச்சர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

president_qutr_amb.jpg இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் காலித் பின் மொஹமட் அல் அஹியாஹ் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அரச சேவைகள் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவித்தல் சர்ச்சைக்குரிய இரு விடயங்களை அமுல்படுத்தாதிருக்க அரசு முடிவு

pr-con-02042009.jpgஅரச சேவைகள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இரண்டு விடயங்களையும் நடைமுறைப்படுத்தவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட தாக பிரதி நிதி அமைச்சரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 17ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட அரச சேவைகள் ஆணைக்குழு நிறுவனச் சேவையை மீள் பரிசோதனை செய்ததுடன் சில திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.

அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட ஒருவர் மூன்று வருடங்களில் தனது தகுதிகாண் காலத்தில் வருடத்திற்கு இரண்டு தடவைகள் வீதம் ஆறு தடவைகள் வினைத் திறமைகாண் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இப்பரீட்சைகளில் அவர் சித்தியடையாவிடின் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பதே கொண்டு வரப்பட்ட திருத்தமாகும்.

நிரந்தர நியமனம் பெற்றவரும் தனது பதவி உயர்வுக்காக இவ்வாறான வினைத் திறமைகாண் பரீட்சைகளுக்கு தோற்ற வேண்டும். பரீட்சையில் சித்தியடையாதவர் பதவி ஏற்புகளை பெற மாட்டார். இந்த விடயங்களை தவறுதலாக விளங்கிக் கொண்டும் வீணான கற்பனையை வளர்த்துக் கொண்டும். சிலர் தேர்தலை சாதகமாக்கிக் கொண்டு தேர்தல் சுலோகங்களாக இவற்றை மாற்றி விட்டுள்ளனர்.

அத்துடன் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடும் ஒருவர் தொழிற்சங்க வேலைகளுக்காக கடமையிலிருந்து விடுவிக்கும் காலம் ஐந்து வருடத்திற்கு மட்டுப்படுத்தப்படுவதாகவே அரச வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையும் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம்

dr-varatharajah.jpgமுல்லைத் தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வரதராஜா தனது பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயாந்த மக்கள் தொடர்பான தவறான தகவல்களை வழங்கியதனையடுத்தே இவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக இவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பினனரே இவரைப் பணியிலிருந்து இடை நிறுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது