“எமது நாட்டில் அரசு ஊழியர்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளார்கள். அவர்களுக்கான ஓய்வூதியம் கூட ஒழுங்கான முறையில் கிடைக்கப் பெறுவதில்லை” என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகேகர நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
“எமது ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க.அரச ஊழியர்களுக்கு எவ்வாறான சலுகைகளை அளித்தது என எம்மை வினவுகிறார்கள் . ஆரம்ப காலத்தில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 55 ஆகக் காணப்பட்டது. இதனால் எமது ஆட்சிக்காலத்தில் நாம் ஓய்வூதிய நிலையத்தில் ஒரு கணிப்பை மேற்கொண்டோம். 55 வயதில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் 60 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை என்பன தொடர்பில் கணிப்பொன்று நடத்தப்பட்டது. அதன் பிரகாரம் 55 வயதில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை 100 க்கு 5 வீதமாகவே இருந்தது. இதனால் வயதெல்லை 60 ஆக தீர்மானிக்கப்பட்டது.
ஐ.தேகவினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது தற்போது 55 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஓய்வூதியக் கொடுப்பனவை அதிகரிக்க அக்காலக்கட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களின் பதவி உயர்வுகளில் எவ்வித பாதகமான நிலை ஏற்பட்டாலும் ஓய்வூதியம் பாதிக்கபடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என தற்போது கூறப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் அரச ஊழியர்கள் ஒரு குழப்ப நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
அரச ஊழியர்களுக்காக 25,000 வீடுகளை அமைக்கும் திட்டம் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1500 வீடுகள் தென் பகுதி காலியில் அமைக்கப்பட்டன. இப்பொழுது அவற்றைத்தான் மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 1500 வீடுகள் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது? திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஆசிய வங்கியோ, சர்வதேச நாணய நிதியமோ இலங்கைக்கு கடன் உதவி வழங்கும்போது, அந்நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார நிலையை அவதானித்தலே முக்கியமான செயலாக இருக்கும் . நாட்டில் நிதி கொள்கைகள் ஒழுங்கான முறையில் கணக்கிடப்படாவிட்டால், எந்த நாடும் நமது நாட்டுக்கு உதவி வழங்க முன் வரப்போவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலையே காணப்படுவதாகப் பரவலாக பேசப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.