April
April
ஏப்ரல் 15ல் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பெர்னாட் கொச்னர் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் எல்ரிரிஈ பயங்கரவாதத்தை புறக்கணிப்பதும் ஆயுதங்களைக் கீழே போடுவதும் நிரந்தரத் தீர்வுக்கு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 12ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இருநாள் தாக்குதல் தவிர்ப்பை வரவேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்றும் பாராட்டி உள்ளனர். இத்தாக்குதல் தவிர்ப்பு காலப்பகுதியில் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மோதல் பிரதேசத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறவில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களை வெளியேறவிடாது புலிகள் பலவந்தமாகத் தடுக்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.
தாக்குதல் தவிர்ப்பிற்கு சற்று முன் தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த வெளியேற முற்பட்டவர்கள் புலிகளால் சுடப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக Under-Secretary-General for Humanitarian Affairs ஜோன் ஹொல்ம்ஸ் இவ்வறிக்கை வெளிவருவதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 5ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் தலைவர் பலத்த இழப்புகளின் மத்தியில் காப்பாற்றப்பட்டார். அத்தாக்குதலுக்கு மறுநாள் முதல் புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பிரான்ஸ் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இப்போராட்டங்கள் இரவு பகலாக பத்து நாட்களுக்கம் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. இந்நிலையிலேயே இவ்விரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை புலிகள் மீது காட்டமான கண்டனத்தையும் கடுமையான குற்றச்சாட்டையும் வைத்து உள்ளது. புலிக்கொடி மற்றும் பிரபாகரனின் படங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு வழங்கப்பட்ட பளீர் அறையாகவே இக்கூட்டறிக்கை வெளிவந்து உள்ளது.
ஒரு பயங்கரவாத அமைப்பிலும் பார்க்க ஜனநாயக அரசு பொது மக்களைக் காப்பத்தில் உயர்தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைசர்கள் டேவிட் மில்லிபான்ட் உம் பெர்னாட் கொச்னர் உம் மகிந்த ராஜபக்ச அரசு புதிய தாக்குதல் தவிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். எல்ரிரிஈ மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடிய அளவிற்கு நீண்டதாக தாக்குதல் தவிர்ப்பு இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர். மேலும் அப்பொது மக்கள் மோதல் பகுதிகளை விட்டு வெளியேறும்பட்சத்தில் அவர்களுக்கு பாகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை யுஎன் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இரு தரப்பும் சர்வதேச விதிமுறைகளைக் கடைப்பிடித்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படத்த வேண்டும் என்ற வழமையான கூற்றுக்களை மீளவும் தெரிவித்துள்ளனர்.
யுஎன் னும் ஏனைய சர்வதேச சமூக உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் அவ்விரு அமைச்சர்களும் தெரிவித்து உள்ளனர்.
Joint UK and French statement on Sri Lanka (15/04/2009)
The Foreign Secretary, David Miliband, and the Foreign Minister of France, Bernard Kouchner, issued a joint statement on the situation in Sri Lanka on Wednesday 15 April. They said:
‘We welcomed President Rajapakse’s announcement on 12 April of a pause in the Sri Lankan government’s military offensive as a first step towards the protection of civilian life. But we are deeply concerned that there was no large scale movement of civilians away from the conflict area to safety as we had hoped to see, in the short period allowed for the pause. It is clear that the LTTE have been forcefully preventing civilians from leaving the conflict area and we deplore their determination to use civilians as a human shield. We do of course continue to call on the LTTE to renounce terrorism and lay down their arms as a necessary element for a long-term solution.
We urge President Rajapakse to announce a new pause . Democratic governments are rightly held to higher standards for civilian protection than terrorist organisations. We also urge the LTTE to allow civilians to move to safety. It is vital that a pause in the fighting should be long enough to give civilians the opportunity to leave the conflict area, and for the UN to build confidence amongst the population that they will be safe if they leave. Both sides must abide by their obligations under international humanitarian law and do all they can to protect civilians. This includes giving international humanitarian agencies unimpeded access to those affected by the fighting so that they can deliver adequate supplies of assistance. France and Britain, as two members of the Security Council, continue to support the active engagement by the UN and by other members of the international community on this urgent issue.’
._._._._._.
யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்டுள்ள மக்கள் எவ்வாறானதொரு சூழலுக்குள் வாழ்கிறார்கள் என்பதை எந்தவொரு இலங்கைத் தமிழருக்கும் எடுத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மரண வாயிலில் தள்ளப்பட்டுள்ள மக்களை எவ்வாறாயினும் மீட்டெடுக்க வேண்டும் என்பதிலும் பார்க்க அவர்களுடைய இந்நிலைக்கு இலங்கை அரசா அல்லது புலிகளா காரணம் என்ற விவாதமும் அதையொட்டிய போராட்டங்களும் பரவலாக நடைபெறுகிறது. பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வாருங்கள் என்று அழைத்துவிட்டு அப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்னி மக்களை இனப்படுகொலை செய்யும் இந்த அரசு தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று புலி ஆதரவு அணி புலம்பெயர் நாடுகள் எங்கும் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது. மறு முனையில் புலிகள் தங்களைப் பாதுகாக்க மக்களை மனிதக் கேடயங்களாக்கி வன்னி மக்களைப் பலியிடுவதால் புலிகளே வன்னி மக்களின் இந்நிலைக்கு முழுப் பொறுப்பும் என அரச அதரவாளர்களும் வாதிடுகின்றனர். இவர்களில் சிலர் அதனையும் தாண்டுகின்றனர். அண்மையில் கொழும்பு சென்ற புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற ஒருவர் தன்னை வானொலி அறிவிப்பாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘சில ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை புலிகள் அழிக்கப்பட வேண்டும்’ என்று இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இவர்கள் தான் புலம்பெயர் ‘ஜனநாயக்கார்களுக்கு’ ‘மாற்றுக் கருத்தாளர்களுக்கு’ குரல்கொடுப்பவர்கள்.
புலிகளின் தலைவர் உள்ளே – வெளியே என்று உறுதிப்படுத்த முடியாத பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசித்துண்டு நிலத்தை நோக்கி நகர்கின்றனர். புலிகளைப் பொறுத்தவரை இன்று மக்களே அவர்களது மண்மூட்டைகள். இலங்கை அரசு புலிகளை புலிகளின் தலைமையை (அதன் தலைமை அப்பிரதேசத்தில் இருந்தால்) அழிப்பதாக இருந்தால் அந்த மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்தே தனது இலக்கை அடைய முடியும். அதற்கு தாங்கள் தயார் என்பதை அரசு அறிவித்து உள்ளது. செச்சினிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட ஆயிரம் வரையான மாணவர்களை விடுவிக்க ரஸ்ய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை இலங்கை அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. அந்த இராணுவ நடவடிக்கையில் பணயக் கைதிகள் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவ்வாறான ஒரு நடவடிக்கை 150000 பொது மக்கள் அகப்பட்டுள்ள முல்லைத்திவில் மேற்கொள்ள இலங்கை இராணுவம் முயல்கிறது. ஆனால் இவ்விரு நிலமையும் முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அரசபடைகளின் ஒரே நோக்கம் புலிகளையும் அதன் தலைமையையும் அழிப்பதே. வன்னி மக்களின் பாதுகாப்பு இரண்டாம் பட்சமானதே. இப்போது புலிகளுக்கு உள்ள கடைசி ஆயுதம் வன்னி மக்களே.
இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பல்வேறு வகைப்பட்ட போராட்டங்களில் குதித்து உள்ளனர். அவர்களது போராட்ட வடிவங்கள் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் புலிக் கொடியும் பிரபாகரனின் படங்களும் மேலோங்கி நிற்பது இப்போராட்டங்களின் நியாயத்தன்மையை மழுங்கடிக்கின்றன. வன்னி மக்களின் நியாயமான உரிமைகளுக்கான போராட்டத்தின் மீது சேறடிக்கின்றன. புலிக்கொடியும் வே பிரபாகரனின் படங்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்துவனவாக இல்லை. சிங்கக் கொடிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இருக்கும் அதே சமன்பாடு தான் புலிக்கொடிக்கும் வே பிரபாகரனுக்கும் உரியது. இவற்றைக் காவிக்கொண்டு போராட்டம் நடத்த இவையொன்றும் மனிதத்தையும் மனித உரிமையையும் வெளிப்படுத்தவில்லை.
நாங்கள் தீவிரமான தகவல்கள் பரிமாற்ற யுகத்தில் வாழ்கின்றோம். புதினம் படித்து, ஐபிசி கேட்டு, ஜிரிவி பார்த்து விட்டுத்தான் டேவிட் மில்லிபான்ட்டும் பெர்னாட் கொச்னரும் கூட்டறிக்கை விடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
புலிகளின் தலைமைக்கு தமிழ் மக்கள் தங்களுடைய முழுமையான ஆதரவை மட்டுமல்ல தங்கள் 25000ற்கும் மேற்பட்ட உறவுகளைப் போராட்டத்திற்காக கொடுத்தனர். புலிகளுடன் தோளோடு தோள் நின்றனர். அப்படி இருந்தும் புலிகளின் தலைமையால் தமிழ் மக்களுடைய எவ்வித உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. மாறாக தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் மீது சவாரி செய்தது தான் மிஞ்சியது. இன்று அந்த மக்கள் மிகவும் களைத்து நொந்து போயிருக்க புலிகளின் பெயரில் புலம்பெயர் புலியாதரவுச் சமூகமும் ஒரு தடவை சவாரி செய்ய முனைகிறது.
பாதுகாப்பிற்கு பதுங்கும் குழிகளே புதைகுழிகளாகும் அந்த மண்ணை அவர்களின் பூர்வீக மண் என்று சொல்லி அவர்களுக்கு வாய்கரிசி போட புலம்பெயர் மண்ணில் போராட்டம் அவசியமில்லை. இன்றைய அவசர தேவை அம்மக்களிற்கான உயிர்ப் பாதுகாப்பு.
புலிகளுக்கு தண்ணி காட்டி பொய்சொல்லி பாஸ் எடுத்துவிட்டு பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாடு வந்தவர்கள் தான் பெரும்பாலான புலம்பெயர்மக்கள். ஆனால் இங்கு வெளிநாடுகளில் இருந்தகொண்டு தாங்கள் விட்டுவந்த பூர்வீக மண்ணை வன்னி மக்களின் தலையில் கட்டும் அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதும் முதல் எதிரி ஒடுக்குமுறை அரசு. அந்த அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் மிகப்பெரும் தடையாக உள்ளனர். ஏனைய ஆயுதக் குழுக்கள் அரசுடன் செயற்பட புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிகின்றனர். ஆனால் அது தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு அல்ல. அதனால் புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடித்து உள்ளனர். இன்று புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்கள் சொந்த மக்களுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. ஆயுதங்கள் மீது அதீத காதல் கொண்ட புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பதம் கைவிடுவதும் நீண்டகாலத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனைப் பாதிக்கும் என்றில்லை.
புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை இணைத்தலைமை நாடுகளால் பெப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியாவும் தற்போது மீண்டும் இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்ற பிரான்ஸ்ம் பிரித்தானியாவும் அக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளன. இந்நாடுகளின் அரசுகள் தங்களுக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ள அரசுகள். இந்நாடுகளில் பல நேட்டோ அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இன்றும் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உள்ளன. இந்நாடுகள் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று கோருவதன் நோக்கம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
அதே சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வது பொருத்தமாக இருக்கும் என்று தேசம்நெற்ற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அவர் நேபாளில் மாஓ இஸ்ற்றுக்களின் தந்திரோபாயத்தை புலிகளும் பின்பற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரான ரவி சுந்தரலிங்கமும் இதே கருத்தைத் தெரிவித்து இருந்தார். மக்களின் பெயரால் ஆயுதம் தூக்கியவர்கள் மக்களுக்காக அவற்றை கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
புலிகளுடைய ஆயுத பலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பேச்சவார்த்தைகளில் பேரம் பேசுவதற்கு உதவும் என்ற வாதம் பொதுவாக உள்ள ஒன்று. ஆனால் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தில் புலிகள் பலத்த இராணுவ வெற்றிகளைச் சாதித்திருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கும் சென்றனர். ஆயினும் இந்த இராணுவ பலத்தை அரசியல் வெற்றியாகவோ தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் கருவியாகவோ மாற்றுகின்ற அரசியல் வல்லமை புலிகளின் தலைமையிடம் இருக்கவில்லை. புலிகளின் கைகளில் இருந்த ஆயுதம் குரங்கின் கையில் இருந்த பூமாலைக்கு ஒப்பானது என்பதனை தற்போதைய வன்னி நிலவரம் நிரூபித்து உள்ளது.
எந்த மக்களைக் காப்பாற்றுவோம் என்று புலிகள் உறுதியளித்தார்களோ இன்று அவர்களே இலங்கை இராணுவத்திற்கு எதிராக புலிகளின் அரணாக மாற்றப்பட்டு உள்ளனர். அரணாக இருக்க மறுத்து தப்பிச் செல்பவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகளின் கையில் இருக்கும் ஆயுதம் தமிழ் மக்களுக்கோ தமிழ் மக்களின் போராட்டத்திற்கோ உதவபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைய நிலையில் அந்த ஆயுதங்களைக் கைவிடுவது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும். நூற்றுக் கணக்காண போராளிகளை வீணாகப் பலிகொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
யுத்தப் பிராந்தியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 150000 வரையான மக்களில் பெரும்பாலான இளையவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உட்படத்தப்பட்டு யுத்தத்தின் முன்னரங்க நிலைகளில் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப் பிரதேசங்களில் உள்ள நாற்பதினாயிரம் வரையான மாணவர்கள் இந்த யுத்த பிராந்தியத்திற்குள் சிக்குண்டு உள்ளனர். மறத்தமிழன் வீரத்தமிழன் அடங்கா மண்ணில் பிறந்த தமிழன் என்று சொல்லி அந்த மாணவ மாணவிகளை விதைக்கின்றோம் என்று சொல்லி முளையிலேயே கருக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதற்காக இந்தக் கொல் கருவிகளை தூக்கியெறிவதில் எந்தத் தயக்கமும் அவசியமில்லை.
மதிமுக பொதுச்செயலாளர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியி தான் போட்டியிடும் விருதுநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘’என்னை தேர்ந்தெடுத்தால் இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து, இலங்கை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பேன். இதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்தால் மக்கள் எனக்காக ஓட்டுக்கேட்க வேண்டும். இலங்கை தமிழருக்காக என் மீது தொடங்கப்பட்ட வழக்கு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வைகோ ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது அவர் பேசியதில் தவறில்லை” என்று எனக்காக குரல் கொடுத்துள்ளார். இதுதான் நட்பு; தோழமை. மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கோபத்தில் உள்ளனர். அதனால் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எனவே வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்று பேசினார்.
இந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக நான்கு எம்.பிக்கள் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் நேற்று டில்லிக்கு சென்றனர்.
இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக் களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.
இருப்பினும் சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா. சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்கள் நேற்று டில்லிக்கு சென்றனர். அவர்கள் நான்கு பேரும் வெளியுறவுத் துறைச் செய லாளர் சிவசங்கர மேனனை இன்று சந்தித்துப் பேசுவார்கள்
தமிழ் நாட்டு கடற் பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நேற்று முதல் 45 நாட்களுக்கு தடைவிதித்துள்ளதாக மீன் பிடி அமைச்சு தெரிவித்தது. இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவர் எனவும், இதனால் இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் மீன்பிடி அமைச்சு இலங்கை மீனவர்களை கோரியுள்ளது.
மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கம் 45 நாள் மீன் பிடித் தடையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டு அரசாங்கம் மீன்பிடி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
மீன்பிடித் தடை தொடர்பாக இலங்கை மீனவர்களை அறிவூட்டியுள்ளதாகவும் இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதிக்குள் இந்தியக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்களுக்கு இலங்கை அரசும் தண்டனை வழங்கும் எனவும் அமைச்சு கூறியது. கடந்த காலங்களில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பல இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எனவே இந்த 45 நாள் தடை அமுலிலுள்ள நாட்களிலாவது இந்திய கடல் எல்லைக்குச் செல்வதை தவிர்க்குமாறு அமைச்சு கோரியுள்ளது.
இதுபற்றி தமிழ்நாட்டு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 45 தினங்களுக்கு தமிழ்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தினுள் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். கடந்த காலங்களில் பல இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்து வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆலைத் தொழில் உற்பத்தி அளவு, கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மிகவும் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அமெரிக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் உபயோகிப்பாளர்கள் செலுத்திய விலைகளும் தொடர்ந்து சரிவைக் கண்டன. கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு அதிகமாக சரிவைக் கண்ட விலைகள், கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத முதலாவது வருடாந்திர விலை வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் ஆழ்ந்த மந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட நம்பிக்கைச் சுடர் மிகவும் பரீட்சார்த்த நிலையிலேயே இருக்கிறது என்பதனையே இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.
13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.
பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.
நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.
முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
யாழ். குடாநாட்டுக்கு கிழக்கே சுமார் 1200 கிலோ மீற்றர் தொலைவில் சூறாவளியாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தமிழக கரையோரங்களை நோக் கியே நகர்கிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்தின் பின்னர் வடக்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமே தவிர சூறாவளி தாக்கம் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உட்பட தென்மா நிலங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழகத்திலுள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரித்துள்ளது.
இக்காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் ஏற்பட்டதைவிட வலுவடைந்து காணப்படுவதாகவும் கரையோரத்தை அணுகும்போது புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது இத்தாழமுக்கம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது இலங்கையில் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இக் காலங்களில் இலங்கையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெப்ப நிலை அதிகரித்திருப்பதுடன் பூமியின் உஷ்ண நிலையும் அதிகரிக்கிறது.
இரவு நேரங்களில் காற்று வீசினாலும் உஷ்ணமடைந்த காற்றாகவே வீசுகிறது. கடற்பரப்பிலிருந்து தரைப் பகுதியை நோக்கி காற்று வீசினாலும் கடற்பகுதியும் உஷ்ண நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
கிழக்கு, மலையகம், மற்றும் தென் பகுதிப் பிரதேசங்களில் நேற்றுக் காலை உணரப்பட்ட நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டத்தின் நிலப்பகுதியாகவோ அல்லது அதனை அண்மித்த கடல் பகுதியாகவோ இருக்கலாம் என்று பேராதனைப் பல்கலைக் கழக பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா நேற்றுத் தெரி வித்தார்.
நில அதிர்வு காரணமான பாதிப்புக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக ளவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வதிர்வு இம் மாவட்டத்தின் நிலத்திலோ அல்லது இம் மாவட்டத்தை அண்டிய கடலிலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த அதிர்வு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும், கட்டடங்க ளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இவ்வாறான பாதிப்புக்கள் இவ்வதிர்வு காரணமாக ஏனைய பிரதேசங்களில் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான நில அதிர்வுகளை பல பிரதேசங்களில் ஏற்கனவே உணர முடிந்தது. அதனால் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்வதும், அது குறித்து விசேட கவனம் செலுத்துவதும் மிக அவசியம் எனவும் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் பாரிய பூகம்பத்தின் முன்னறிகுறியாகக்கூட இருக்க முடியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை பூகற்பவியல் பணியக உதவிப் பணிப்பாளர் டப்ளியு. கே. பிரேம், நேற்று காலை 8.50 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் சில வினாடிகள் நாட்டின் பல பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளன.
கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு 4 ரிச்டர் அளவுக்குக் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறது. இது கிழக்கு மாகாணத்தின் நிலப் பகுதியிலோ அல்லது அம்மாகாணத்தை அண்டிய கடல் பகுதியிலோ தான் முதலில் தோற்றம் பெற்றிருக்க முடியும்.