March

March

100 நாட்களில் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு – அத்வானி

_atvany_.jpgஇலங்கைத் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தமது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு காணும் எனத் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் (07.03.2009) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்னில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழர் வாழ்விற்கு முன்னுரிமை அழிக்கப்படும் முதல்வரும் 100 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையைக் கண்டு கவலையுறும் தமிழக மக்களை பாராட்டுவதாக தெரிவி;த்துள்ள அவர் இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

உணவுக் கப்பல் மீது புலிகள் ஷெல் தாக்குதல்

ltte_attack.pngமுல்லைத் தீவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்மீது புலிகள் இன்று காலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய எம்.வி பிந்தன் சரக்குக் கப்பல் கடந்த 07 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கோதுமை மா 399 தொன், பருப்பு 61 தொன், மண்எண்ணெய் 1400 தொன், சீனி 20 தொன், மரக்கறி எண்ணெய் 21 தொன்,பெற்றோல் 200 தொன் மற்றும் குளோரின் 90 கிலோ ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இக்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் புதுமாத்தளன் பிரதேசம் சென்றடைந்த இக்கப்பல் பொருட்களை இறக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டது. எனினும் 142 மெற்றிக் தொன் பொருட்கள் இறக்கப்பட்ட வேளையில் திடீரென புலிகள் ஷெல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் என கப்பல் கெப்டன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக இக்கப்பல் ஆழ்கடல் நோக்கிச் செலுத்தப்பட்டதாகவும் எனினும் கொந்தளிப்பான நிலையில் கடல் காணப்படுவதாகவும் கெப்டன் தெரிவித்துள்ளார்.

முல்லையில் தொடர்கிறது சமர் இரு தரப்பிலும் பெரும் இழப்பு

sl-army.jpgமுல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடுஞ்சமர் இடம் பெற்று வருகின்றது என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரை விடுதலைப் புலிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 50 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடுப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் 57ஆவது படைப்பிரிவின் மீது விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும் பிற்பகல் 2.30 மணியளவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகளில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் கூறியுள்ளது.அதேவேளை, 58 ஆவது படைப் பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் (சனியன்று) அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கடுஞ் சண்டை இடம்பெற்றிருக்கிறது
இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது விடுதலைப் புலிகளின் 19 சடலங்கள் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது.அதேசமயம், சாளைப் பகுதியிலும் கடுஞ் சண்டை இடம்பெற்று வருகின்றது என படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் பலி புதுக்குடியிருப்பில் மும்முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் நான்கு டிவிசன்கள் மீது தாம் நடத்திய தாக்குதலில் சுமார் 450 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படையினரின் 53 ஆம், 58 ஆம் படைப்பிரிவுககளின் மூன்றாம் எட்டாம் விசேட படையணிகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இதன்போது படையினரின் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களையும் சடலங்களையும் புலிகள் கைப்பற்றினர் என அச்செய்திகள் தெரிவித்தன.

தேர்தல் வந்தது.. உண்ணாவிரதமும் வந்தது- கருணாநிதி

karunanithy.jpgமக்கள வைத்து தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும்- பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான ராஜா பேசியிருக்கிறார். என் செய்வது; திமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்!.

மத்திய அரசுக்கு திமுகவும், பாமகவும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்- கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா?. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே!.

உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதி உதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்-ஜெயலலிதா அறிக்கை. தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நிதிக்காக என்று உண்டியல் மூலமாக அல்ல- காசோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறி- ஒவ்வொரு காசோலையை வழங்கியவரின் பெயரும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு- அந்தத் தொகை முழுவதும் அரசின் நிதித்துறை மூலமாக வரவு வைக்கப்பட்டு- ரசீதுகளும் வழங்கப்பட்டபோது- அந்த நிதியை நான் என் குடும்பத்திற்குச் சொந்தமாக்கி விட்டதாக அறிக்கை விடுத்தது இதே ஜெயலலிதாதான்.

அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது நான் அவ்வாறு கூறவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று தன் வழக்கறிஞர் மூலமாக ஜகா வாங்கியதும் இதே ஜெயலலிதாதான்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று சுட்டிக் காட்டுகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை- உண்ணாவிரதத்திற்கு முன் ஜெயலலிதா விடுத்த அறிக்கை.

15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார்.

ஆனால் அப்போது தேர்தல் ஒன்றுமில்லை; அதனால் பாண்டியன் பக்க மேளம் வாசிக்க- நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர; இப்போது இலங்கை மீது ஜெயா பாய்வதற்குக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்ற அறிவிப்பு அல்லவா!.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசை வழி நடத்தும் சோனியா காந்தியே காரணம். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தை- நாஞ்சில் சம்பத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை- இது வைகோ.

உலகில் எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் என்றெல்லாம் பேசியிருப்பவர், சோனியா காந்தி மீதும் என் மீதும் குற்றம் சாட்டுவதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன். காங்கிரசுக்கு அழைப்பே விடவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய கூட்டணியிலே உள்ள நண்பர் பரதனோ மறைமுக அழைப்பு விடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த அறிக்கையால் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொல்வதுதான் தவறு.

எங்களுக்கொன்றும் அவரது அழைப்பால் கலக்கம் இல்லை. உண்மையான கலக்கம் பரதனுக்குத்தான். காங்கிரசுக்கு எதிராக அவர்கள்தான் ஜெயலலிதா பக்கம் சென்றார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். எனவே கலக்கம் அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல.

கார்கில் போரில் உயிரிழந்த 11 தமிழர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழ் தலைவராக உள்ளேன்- இது வைகோ.

கார்கில் போர் நடைபெற்றபோது தமிழகத்தின் சார்பில் 50 கோடி ரூபாயை வசூலித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கையில் ஒப்படைத்தது திமுக அரசுதான். அந்தப் போராட்டத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியும், அது தவிர அவர்களுக்கு வீடும் வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெருமையாக கருதி திமுக சொல்லிக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு தமிழ் அமைப்புக்களிடம் கிழக்கு முதல்வர் வேண்டுகோள்.

pullayaan.jpgகிழக்கு மாகாணத்தில் ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் தம்மிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

விடுதலைப் புலிகளும் உடனடியாக ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுதம் வைத்துள்ள சகல தமிழ் அமைப்புக்களும் அவற்றிடமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும என மேலும் கேட்டுக்கொண்டார். 

ரி.எம்.வி.பி. யின் ஆயுதங்களை கைவிடுவது மிகச் சிறந்த செயல் – ஆனந்தசங்கரி பாராட்டு

anada_sangari.jpgபல ஆண்டுகள் தம்வசம் இருந்த ஆயுதங்களை கைவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது என அதன் தலைவர் வீ.ஆனந்தசஙகரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஓரு முடிவை எடுக்க வழி வகுத்த கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கே இப்பெருமை உரியதாகும். இம்முடிவு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொடுக்கும.; உண்மையில் ரி.எம்.வி.பி. யினருக்கு புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் அன்று அவர்கள் தம் ஆயுதங்களை கைவிட்டிருக்க முடியாது. எனினும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடியது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதும் உண்மையே.  இப்போதுதான் கிழக்கிழங்கையில் ஜனநாயகம் உதித்துள்ளது. 

இக்கட்சி தனது பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லை கைவிடுவதோடு தம்மிடம் சிறுவர்கள் போராளியாக யாரேனும் இருப்பின் அவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும்.  அவர்கள் இனி மக்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கி சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள ; சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களா என்பதை கவனிப்பதோடு, வேறு எவரேனும் அவர்களின் உரிமைகளில் தலையிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.  வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களை வற்புறுத்தி ஆயுதங்களை கைவிடவைப்பதோடு,  தேவை ஏற்படின் அவர்கள் அரச பாதுகாப்பை நாடவைக்கவும் வேண்டும் என அவர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

வன்னியில் இருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டம் – ஒபாமா நிர்வாகம் இன்று சிவ்சங்கர் மேனனுக்கு விளக்கும்

Wanni_Warவன்னியில் மோதல் பகுதியில் அகப்பட்டிருக்கும் சுமார் 2 இலட்சம் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அமெரிக்கா தலைமையில் இலங்கையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் ஒபாமாவின் நிர்வாகம் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துமென தெரிவிக்கப்படுகிறது.

உணவு, மருந்துப்பொருட்கள் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் மேனனுடன் ஒபாமா நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவிருப்பதாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று முன்தினம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

“சாத்தியப்பாடுகளை அடையாளம் கண்டு நிலைமையை கவனிப்பதற்காக எமது (அமெரிக்க) ஆட்கள் அங்கிருக்கின்றனர். இந்த மக்களுக்கு என்ன உதவியை செய்ய முடியுமோ அதனை மேற்கொள்வோம், என்று அமெரிக்காவின் தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் தெற்காசியப் பத்திரிகையாளர் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மேனன் இன்று திங்கட்கிழமை தொடக்கம் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். அச்சமயம் இத்திட்டம் (பொதுமக்களை வெளியேற்றுவது) தொடர்பாக மேனனுடன் ஆராயப்படவுள்ளது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த கடற்படைப் பிரிவானது அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் இலங்கைக்கு செல்வதே இத்திட்டமாகும். அமெரிக்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இத்திட்டத்தை “ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பசுபிக் கட்டளைத்தலைமையகத்தைச் சேர்ந்த குழுவொன்று இருவாரங்களுக்கு முன்பு கொழும்புக்கு வந்திருந்ததாகவும் உத்தேச திட்டம் தொடர்பாக இலங்கை இராணுவத்துடன் கலந்தாராய இக்குழு வருகை தந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் “ரெலிகிராப்’ பத்திரிகைக்கு கூறியுள்ளன.

பசுபிக் கட்டளைத்தலைமையக குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்த சமயம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜேம்ஸ் மூரை யாழ்.குடாநாட்டுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் (வெளிவிவகார அமைச்சு) அனுப்பியுள்ளது. அங்குள்ள நிலைமையை சுயாதீனமான முறையில் மதிப்பிடவே மூர் அனுப்பப்பட்டுள்ளார். அமெரிக்கா தலைமையில் தமிழ் மக்களை வெளிக்கொணர்வதற்கான திட்டத்தை ஹிலாரி கிளின்டனின் இராஜாங்கத்திணைக்களம் முன்னெடுக்கக் கூடிய வகையில் மூரின் அறிக்கை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் சக்தியை ஒபாமாவின் நிர்வாகம் வெளிநாடுகளில் வெளிப்படுத்தும் முதலாவது காட்சியாக அமையும். இந்த முன்முயற்சி தொடர்பாக அமெரிக்காவில் இரு வேறுபட்ட கருத்துகள் வெளிக்கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான குழுக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் வெளிக்கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுக்கள் 2008 ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவளித்தவர்களாகும்.

ஆனால், ஒபாமாவின் நிர்வாகத்தைத் சேர்ந்த சாதகமான முறையில் செயற்படும் தலைவர்கள் இத்தகையதொரு ஏதாவது இராணுவ நடவடிக்கையானது “கூட்டணியைச் சேர்ந்த மனிதாபிமான செயலணிப்படை’யாகவே இருக்கும் என்று விபரிக்கும் வேலையை அமைதியான முறையில் தொடங்கி விட்டனர்.

விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறு கொழும்பு புலிகளை வலியுறுத்துகின்றது. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு முன்னராக அல்லது புலிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் இலங்கையில் மனிதாபிமான செயலணிப்படை தரையிறங்குமானால் புலிகள் செயலணிப் படைமீது தாக்குதல் நடத்தக்கூடும். அதேசமயம், மனிதாபிமான செயலணிப்படையின் நோக்கமானது, மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கும் நடவடிக்கையை ஒத்ததாக அமையும். அத்துடன் அமெரிக்காவுக்கு இழப்புகள் ஏற்படும் சாத்தியத்தையும் ஏற்படுத்தும்.

இது இவ்வாறிருக்க, ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் சிறிய நிலப்பரப்பிற்குள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக பௌச்சர் தெரிவித்திருந்த கவலை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கொழும்பில் சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியாவின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பாக அமெரிக்கர்களிடம் இருந்து ஏதாவது கோரிக்கை விடுக்கப்படுமாயின் அது மேனனிடம் முன்வைக்கப்படும் சாத்தியம் உள்ளது.

தனது தென்பகுதியில் அதிகரித்துவரும் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்குள் அதிகளவிலான வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. இராணுவ நடவடிக்கை தொடர்பான எந்தவொரு ஆதரவையும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் எதிர்த்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அனுமதி இல்லாமல் பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தமிழ் மக்கள் இரத்தம் சிந்தும் ஏதாவது விளைவும், பாராளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்ததே என்பது நாராயணனின் பிரதான கரிசனையாகும்.

அத்துடன் வெறும் அவதானியென்ற பாத்திரத்திற்கு அப்பால் இந்தியா ஏதாவது பங்களிப்பு வழங்காமல் தமிழ்ப் பொதுமக்களை அமெரிக்கா தலைமையில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றால் புதுடில்லிக்கு அது பாரிய இழப்பு என்பது இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நன்கு தெரியும். இதனால் பிராந்தியத்தில் வல்லமையுடைய நாடு மற்றும் உலகளாவிய ரீதியில் பலம் பொருந்திய நாடாக வளர்ந்து வருகின்றதென்ற புகழ் என்பவற்றை இந்தியா இழந்து விடும் என்பதை முகர்ஜி அறிவார்.

வடக்கை முழுமையாகக் கைப்பற்றியதும் அரசியல் தீர்வை முன்வைக்க அரசு தயார் : – போகொல்லாகம

rohitha-bogollagama.jpg“வடக்கை முழுமையாகக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அரசியல் தீர்வைத் தயாரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நலன்கருதி கூட்டமைப்பு இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்” என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் சில தமிழ் கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார் ஜெயலலிதா.

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். மேடையி்ல வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியையும் அவர் போட்டார்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மாலை 5 மணி வரை ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.

உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இலங்கை-இது ஜெவின் 2வது உண்ணாவிரதம்:

இலங்கைப் பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2வது முறையாகும். கடந்த 1985ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனைக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். காவிரிப் பிரச்சனைக்காகவும் அவர் மெரீனா கடற்கரையில் திடீர் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எமது கடற்படை வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி

president_at_trinco_navy.jpgஇலங் கைக்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் கடற் படை வலுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோருக்கான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருமலை கடற்படை பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறப்பிட்டார். ஜனாதிபதியின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உட்பட்டோர் கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கனவு கண்ட ஈழ ராஜ்யத்தின் தலைநகராகக் கருதிய திருகோணமலையிலிருந்து உங்கள் முன்பாக உரையாற்றுகிறேன். இந்த உரையின் ஊடாக, பிரிவினைவாதத்தை அந்தக் கன விலிருந்து நாம் துரத்தியடித்துவிட்டோம் என்பதை உலகிற்கு சொல்லிக்கொள் ளுகிறோம். இந்த பதிலையே இந்நாட்டு மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்தார்கள். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் இருந்தது. இதற்காக கடற் படையினர் ஆற்றியுள்ள சேவை அளப்பரியது.

எமது நாடு கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இப்படியான நாட்டைப் பாதுகாப்பதற்கு மிகவும் வலுவான கடற்படை அத்தியாவசியமாகும். கடலின் ஆதிக்கம் எம்மால் தளர்த்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமது தாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. கள்ளக் கடத்தலில் முன்னர் ஈடுபட்ட குழுவொன்று தனியான ராஜ்ஜியமொன்றுக்கான உரிமையாளர்களாக கற்பனை செய்வதற்கு நாம் அன்று எமது கடற்படை குறித்து அதிக கவனம் செலுத்தாததே காரணமாகும்.

நாட்டின் மீது அன்பு இல்லாததன் காரணமாக எமது தாயகத்திற்குச் சொந்தமான கடற் பகுதியின் சுமார் மூன்றிலிரண்டு பகுதி திருமலை உட்பட சமாதான உயிலில் எழுதிக் கொடுக்கப்பட்டது. இதனால் எமது கடற்படை பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தது. எமது கடற்படையினரின் பலம் சரியான முறையில் மேம்படுத்தப்படாததால் தான் பயங்கரவாதிகள் கடலில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டது. என்றாலும் எமது கடற்படையினர் கடந்த மூன்று தசாப்தங்களாக உலகிலுள்ள மிக மோசமான பயங்கரவாதிகளுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். எமது கடற்படையினரின் பயிற்சி மேம்படுத்தப்பட்டதன் பயனாக பயங்கரவாதிகளின் கடல் ஆதிக்கம் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான படகுகளை விடவும் அர்ப்பணிப்பும், தைரியமும்மிக்க கடற்படை அதிகாரிகள் நாட்டுக்குப் பெறுமதியானவர்கள். இதன் பயனாகத்தான் எமது கடற்படையினர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து எமது தாயகத்தைப் பாதுகாத்தனர்.

புலிகளிடமிருந்த சகல கப்பல்களையும் எமது கடற்படையினர் அழித்துவிட்டனர். பயங்கரவாதிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைகள் பத்தை கடலின் தூரப்பகுதியில் வைத்து தாக்கி அழித்தார்கள்.

இவ்வாறான பாரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆயுத தளபாட ரீதியாக வலுவடைந்துள்ள நாடுகள் கூட எமது கடற்படைத் தளபதியை விஷேட பேச்சாளராக அழைத்திருக்கின்றன. உலகில் அதிக கடலாதிக்கத்தை இலங்கைப் பயங்கரவாதிகள் கொண்டிருந்தனர். நாம் இராணுவ ரீதியாக வெற்றிபெற்ற போதிலும் கடற்புலிகளின் தற்கொலைப் படையினருடன் போராடி வெற்றிபெற முடியாதென சிலர் எதிர்வு கூறினர். அந்தப் புலிகள் இப்போது எங்கே? இவ்வாறு தான் புலி மாயை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை எமது கடற்படையினர் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களையும், மற்றும் உபாயங்களையும் பயன்படுத்தித் தான் எமது படையினருடன் சண்டையிட்டனர். இறுதியில் அவர்கள் நீர்மூழ்கிகளைக் கூட நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். இச்சூழலில் எமது கடற்படையினர் பாரிய முன்னனு பவங்களைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள் ஆயுத ரீதியாகவும் வலுப்படுத்தப்படுகின்றனர். இதன் பயனாக எமது கடற்படையினர் பாரிய வெற்றிகள் பலவற்றை அடைந்திருக்கிறார்கள். இதன் பயனாக இனிமேல் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது எமது கடற்படையினரே, கடற்புலிகள் அல்லர்.

புலிகள் பாடசாலை மாணவர்களை கடத்திச் சென்று தமது படையில் சேர்த்து அவர்களை தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாற்றி சிறிய படகுகளை பாவித்து எமது கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இப்படியான தற்கொலை படகுகளுக்கு முகம்கொடுக்கும் யுத்த பிராந்தியம் உலகில் எங்கும் இல்லை. இருந்தும் எமது கடற்படையினர் புலிகளின் தற்கொலை பிரிவுக்கு முகம் கொடுக்கும் உபாயத்தை கண்டு பிடித்தனர். இதற்காக கடற்படையினர் படகுகளை உற்பத்தி செய்தனர். இதற்கு கடற்படை கப்பல்களை விடவும் பாரிய வரவேற்பு உலகில் கிடைத்திருக்கிறது. இப்போது எம்மிடமிருப்பது வலுவானதும், கெளரவமானதுமான கடற்படை, கடற்படையினருக்குத் தேவையான சகல உபகரண கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.