முல்லைத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடுஞ்சமர் இடம் பெற்று வருகின்றது என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரை விடுதலைப் புலிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விடுதலைப் புலிகளின் 50 சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடுப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் 57ஆவது படைப்பிரிவின் மீது விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவிலும் பிற்பகல் 2.30 மணியளவிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் விடுதலைப் புலிகளில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் கூறியுள்ளது.அதேவேளை, 58 ஆவது படைப் பிரிவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் (சனியன்று) அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை கடுஞ் சண்டை இடம்பெற்றிருக்கிறது
இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது விடுதலைப் புலிகளின் 19 சடலங்கள் மீட்கப்பட்டன என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று தெரிவித்தது.அதேசமயம், சாளைப் பகுதியிலும் கடுஞ் சண்டை இடம்பெற்று வருகின்றது என படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் பலி புதுக்குடியிருப்பில் மும்முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தின் நான்கு டிவிசன்கள் மீது தாம் நடத்திய தாக்குதலில் சுமார் 450 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அதிக எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படையினரின் 53 ஆம், 58 ஆம் படைப்பிரிவுககளின் மூன்றாம் எட்டாம் விசேட படையணிகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இதன்போது படையினரின் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களையும் சடலங்களையும் புலிகள் கைப்பற்றினர் என அச்செய்திகள் தெரிவித்தன.