வன்னியில் மோதல் பகுதியில் அகப்பட்டிருக்கும் சுமார் 2 இலட்சம் தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அமெரிக்கா தலைமையில் இலங்கையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் ஒபாமாவின் நிர்வாகம் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துமென தெரிவிக்கப்படுகிறது.
உணவு, மருந்துப்பொருட்கள் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் கருத்தை அறிந்து கொள்ளும் விதத்தில் மேனனுடன் ஒபாமா நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவிருப்பதாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று முன்தினம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
“சாத்தியப்பாடுகளை அடையாளம் கண்டு நிலைமையை கவனிப்பதற்காக எமது (அமெரிக்க) ஆட்கள் அங்கிருக்கின்றனர். இந்த மக்களுக்கு என்ன உதவியை செய்ய முடியுமோ அதனை மேற்கொள்வோம், என்று அமெரிக்காவின் தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் தெற்காசியப் பத்திரிகையாளர் குழுவினரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் மேனன் இன்று திங்கட்கிழமை தொடக்கம் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தவிருக்கிறார். அச்சமயம் இத்திட்டம் (பொதுமக்களை வெளியேற்றுவது) தொடர்பாக மேனனுடன் ஆராயப்படவுள்ளது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த கடற்படைப் பிரிவானது அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் இலங்கைக்கு செல்வதே இத்திட்டமாகும். அமெரிக்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இத்திட்டத்தை “ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
பசுபிக் கட்டளைத்தலைமையகத்தைச் சேர்ந்த குழுவொன்று இருவாரங்களுக்கு முன்பு கொழும்புக்கு வந்திருந்ததாகவும் உத்தேச திட்டம் தொடர்பாக இலங்கை இராணுவத்துடன் கலந்தாராய இக்குழு வருகை தந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் “ரெலிகிராப்’ பத்திரிகைக்கு கூறியுள்ளன.
பசுபிக் கட்டளைத்தலைமையக குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்த சமயம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தலைவர் ஜேம்ஸ் மூரை யாழ்.குடாநாட்டுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் (வெளிவிவகார அமைச்சு) அனுப்பியுள்ளது. அங்குள்ள நிலைமையை சுயாதீனமான முறையில் மதிப்பிடவே மூர் அனுப்பப்பட்டுள்ளார். அமெரிக்கா தலைமையில் தமிழ் மக்களை வெளிக்கொணர்வதற்கான திட்டத்தை ஹிலாரி கிளின்டனின் இராஜாங்கத்திணைக்களம் முன்னெடுக்கக் கூடிய வகையில் மூரின் அறிக்கை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் சக்தியை ஒபாமாவின் நிர்வாகம் வெளிநாடுகளில் வெளிப்படுத்தும் முதலாவது காட்சியாக அமையும். இந்த முன்முயற்சி தொடர்பாக அமெரிக்காவில் இரு வேறுபட்ட கருத்துகள் வெளிக்கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான குழுக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் வெளிக்கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுக்கள் 2008 ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவளித்தவர்களாகும்.
ஆனால், ஒபாமாவின் நிர்வாகத்தைத் சேர்ந்த சாதகமான முறையில் செயற்படும் தலைவர்கள் இத்தகையதொரு ஏதாவது இராணுவ நடவடிக்கையானது “கூட்டணியைச் சேர்ந்த மனிதாபிமான செயலணிப்படை’யாகவே இருக்கும் என்று விபரிக்கும் வேலையை அமைதியான முறையில் தொடங்கி விட்டனர்.
விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே வைக்குமாறு கொழும்பு புலிகளை வலியுறுத்துகின்றது. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பதற்கு முன்னராக அல்லது புலிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளாமல் இலங்கையில் மனிதாபிமான செயலணிப்படை தரையிறங்குமானால் புலிகள் செயலணிப் படைமீது தாக்குதல் நடத்தக்கூடும். அதேசமயம், மனிதாபிமான செயலணிப்படையின் நோக்கமானது, மற்றொரு நாட்டின் மீது படையெடுக்கும் நடவடிக்கையை ஒத்ததாக அமையும். அத்துடன் அமெரிக்காவுக்கு இழப்புகள் ஏற்படும் சாத்தியத்தையும் ஏற்படுத்தும்.
இது இவ்வாறிருக்க, ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் சிறிய நிலப்பரப்பிற்குள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக பௌச்சர் தெரிவித்திருந்த கவலை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கொழும்பில் சனிக்கிழமை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியாவின் ஆதரவை பெற்றுக் கொள்வது தொடர்பாக அமெரிக்கர்களிடம் இருந்து ஏதாவது கோரிக்கை விடுக்கப்படுமாயின் அது மேனனிடம் முன்வைக்கப்படும் சாத்தியம் உள்ளது.
தனது தென்பகுதியில் அதிகரித்துவரும் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்குள் அதிகளவிலான வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. இராணுவ நடவடிக்கை தொடர்பான எந்தவொரு ஆதரவையும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் எதிர்த்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அனுமதி இல்லாமல் பொதுமக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தமிழ் மக்கள் இரத்தம் சிந்தும் ஏதாவது விளைவும், பாராளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்ததே என்பது நாராயணனின் பிரதான கரிசனையாகும்.
அத்துடன் வெறும் அவதானியென்ற பாத்திரத்திற்கு அப்பால் இந்தியா ஏதாவது பங்களிப்பு வழங்காமல் தமிழ்ப் பொதுமக்களை அமெரிக்கா தலைமையில் அப்புறப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றால் புதுடில்லிக்கு அது பாரிய இழப்பு என்பது இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நன்கு தெரியும். இதனால் பிராந்தியத்தில் வல்லமையுடைய நாடு மற்றும் உலகளாவிய ரீதியில் பலம் பொருந்திய நாடாக வளர்ந்து வருகின்றதென்ற புகழ் என்பவற்றை இந்தியா இழந்து விடும் என்பதை முகர்ஜி அறிவார்.