March

March

கொழும்பின் கொள்கை இலக்குக்கு ஆதரவாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி

imf.jpgஇலங்கையின் வட பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இருந்து இரு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள அதேசமயம், இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடன் தொகைக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமென கடந்த வியாழக்கிழமை ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் டேவிட் ஹோவ்லே; கடன் தொகையானது “அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளுக்கு’ பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. விசேடமாக வட இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்டது.

கடன் வழங்குவது தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் நிபந்தனைகள் எத்தகையதாக அமையுமென பொறுத்திருந்து பார்க்குமாறும் பேச்சாளர் ஹோவ்லே பதிலளித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் மார்ச் 12 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்தித்திருந்தார். அச்சமயம் வெள்ளை மாளிகைக்கு சில கட்டிடங்களுக்கு அப்பாலிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் அடித்தளத்திலுள்ள மண்டபத்தில் சர்வதேச நாணய நிதியம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி இன்னர்சிற்றி பிரஸ் அங்கு சென்றபோது ஹோவ்லே செய்தியாளர் மாநாட்டை முடித்துவைக்கும் தறுவாயில் இருந்தார். இலங்கை தொடர்பான கேள்வியை கடைசியாகவே அவர் எடுத்தார். அன்றைய தினம் வேலைப்பளு கூடிய நாள் என்று சிலர் கூறினர். இணையத்தளத்தினூடாகவே சில கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பற்றாக்குறையானது சுமார் 1/2 மணிநேர கேள்விகள், பதில்களை ஏப்பம் விட்டிருப்பதாக தென்படுகிறது.

இது இவ்வாறிருக்க ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வாஷிங்டன் பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் பேசப்படவில்லை. இதனை ஐ.நா. அமைதி காக்கும் படைத் தலைவர் அலெய்ன் லீ ரோய் இன்னர்சிற்றி பிரஸுக்கு புதன்கிழமை தெரிவித்திருந்தார். பான் கீ மூன் இருதடவை சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பதாக அவரின் அலுவலக பேச்சாளர் கூறியிருந்தார். இத்தகைய நிலையிலேயே அமெரிக்க விஜயத்தின்போது பான் கீ மூன் இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கான கடனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என்று சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

இலங்கை ரூபாவுக்கு (பெறுமதியை தக்கவைக்க) ஆதரவாக இக்கடன் தொகையை பயன்படுத்தக்கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மனிதப் பேரவலம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்படும் என்று ஐ.நா. தரப்பிலுள்ளவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் உருவாக்கியுள்ள முகாம்கள் தொடர்பாக அந்த நிபந்தனைகள் இருக்குமென சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ராடாரில் காணவில்லையெனவும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனை என்ன? – வெளிப்படுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

unp_logo_1.jpgஅரசிடம் உறுதியான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததால் வங்குரோத்து ஏற்பட்டிருப்பதுடன் நிபந்தனையடிப் படையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  இலங்கை நாணயமும் பங்குச்சந்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்பார்த்திருக்கும் நிலைமையில் இதுதொடர்பாக அரசு உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும் என்று ஐ.தே.க. வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;  அரசாங்கம் செலவீனம் மற்றும் வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுக்கேற்ப வருமானத்தை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த இரண்டுக்குமிடையிலான இடைவெளி எதிர்வரும் ஏப்ரல், மேயில் அதிகரிக்குமென்பதால் பாரிய சிக்கல் தோன்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே அரசாங்கம் இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனையின் அடிப்படையில் கடன்பெற முன்வந்துள்ளது. 2007 மற்றும் 2008 இல் பணத்தை அச்சடித்தும் டொலருக்கு எதிராக நாணய பெறுமதி இறக்கத்தை மேற்கொண்டும் சமாளித்ததனால் பணவீக்கம் நாட்டில் அதிகரித்தது.

தற்போதைய சூழ்நிலையில் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலேயே உதவி கோரியுள்ளது. இந்நிலையில், எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் உதவி பெறப்படுகின்றதென்பதை இலங்கையின் நாணயமும் பங்குச் சந்தையும் எதிர்பார்க்கின்றன. கடன் பெறப்பட்டால், பண நிரம்பல் அதிகரித்து பணவீக்கம் மேலும் மோசமாக அதிகரிக்கும் அதேநேரம் எதிர்காலத்தில் அரசாங்கம் கடனைச் செலுத்தும் போது மேலும் சுமையை ஏற்படுத்தும்.

இதனால், எதிர்காலத்தில் மக்களே பணவீக்கத்தால் பாதிக்கப்படுவர். அதேநேரம் அவர்களது கடனும் வட்டியும் மேலும் அதிகரிக்கும். எனவே எந்த நிபந்தனையின் அடிப்படையில் கடன் பெறப்படுகின்றதென்பதை வெளிப்படுத்த வேண்டும். இதை வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும்.

அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாது யுத்த வெற்றி குறித்து பிரஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மட்டுமன்றி கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசுகளும் போரை முன்னெடுத்தன. அதேநேரம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

பயங்கரவாதிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யவே குரும்பட்டி விமானத்தில் வந்து இறைவரி திணைக்களத்தைத் தாக்கினர். சிலர் இலக்குத் தவறியுள்ளதென கூறுகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் புலிகள் மத்திய வங்கி, விமான நிலையம், துறைமுகம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களையே குறிவைத்துத் தாக்கினர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

2001 இல் சுதந்திரக் கட்சி எம்மிடம் ஆட்சியைத் தரும்போது அரச திறைசேரி வங்குரோத்திலிருந்தது. அதேநேரம் விமானங்கள் அழிக்கப்பட்டும் வெளிநாட்டு கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமலும் பெரும் பொருளாதார பின்னடைவும் ஏற்பட்டது. எனினும் நாம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக 2004 இல் கையளிக்கும் போது பொருளாதார வளர்ச்சி 6.5% இருந்தது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இனி புல்மோட்டையிலேயே சிகிச்சை -ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgமுல்லைத் தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக அழைத்து வரப்படும் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இனிமேல் நேரடியாக் புல்மோட்டை மற்றும் பதவியாவில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்தியசாலைகளுக்கே அழைத்துச் செல்லப்படுவர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்திய மருத்துவர்களைக் கொண்ட தள வைத்தியசாலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதையடுத்து திருமலை ஆதார வைத்தியசாலையில் முல்லைத்தீவின் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை மற்றும் பதவியா வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அழைத்து வருவதற்கு 2 – 3 மணித்தியாலங்கள் போதுமானது. இதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது வரை 9 தொகுதிகளாக கடல்வழியாக அழைத்து வரப்பட்ட 3195 நோயாளர்களில் 1512 பேர் தமது சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை – 732 பேர், பொலன்னறுவை வைத்தியசாலை – 171 பேர், கந்தளாய் வைத்தியசாலை – 160 பேர், தம்பலகாமம் வைத்தியசாலை – 75 பேர், கொழும்பு மற்றும் கண்டி போதனா வைத்தியசாலை – 93 பேர் என வெளியிடங்களிலும் 1231 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய 425 பேர் தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 24 பிரசவங்கள் இது வரை இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

புதிய உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதி விருது!

mahinda.jpgகடந்த வருடம் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்த உற்பத்தியாளர்களை விருது வழங்கி கௌரவிக்க புதிய உற்பத்தியாளர்களின் ஆணைக்குழு தீர்மாணித்துள்ளது. ஜனாதிபதி விருது மற்றும் தேசிய விருது என இரண்டு கட்டங்களாக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு புதிய உற்பத்தியாளர்களின் ஆணைக்குழு கேட்டுள்ளது.கடந்த வருடம் அறிமுக உற்பத்திகளை சமர்பித்து பேடன்ட் சான்றிழ்களைப்; பெற்றவர்கள் இம்முறை ஜனாதிபதி விருதுக்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பேட்டன்ட் சான்றிதழ் கிடைக்காத பாடசலை, தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய விருதுக்காக விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 0112 424 964 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்க விரும்புவதாகவும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.  மாணவர்கள் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்த பின்னரே அதனை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

அண்மையில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து பல்கலைக்கழக மண்டபம், விஞ்ஞான கூடங்கள் போன்ற பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு 7 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனைத் திருத்துவதற்கு காலம் எடுப்பது மீண்டும் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கமுடியாதிருப்பதற்கு ஒரு காரணமாகும்.

இந்த சேதங்களை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து இந்த நஷ்டத்தைப் பெறுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில் மாணவர்கள் நடந்து கொண்டமை, அவர்களின் நடத்தைகள் குறித்து பெற்றோருக்கு தெளிவு படுத்தியுள்ளோம். மாணவர்களின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்களே பொறுப்பு எனவும் கூறியுள்ளோம்.

மாணவர்களிடையேயான மோதல்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் துணைவேந்தர் கூறினார். எனவே மாணவர்கள் மீண்டும் மோதல்களில் ஈடுபடாதிருக்கவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புகலிடம் தேடி பிரான்ஸ் வந்தவர்களுக்கு வதிவிட உரிமையை வழங்கு! – பாரிஸ் ஊர்வலம் : த ஜெயபாலன்

Paris_Protest_14Mar09வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் (Comité de Défense Social) சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்கள் சார்ந்த நலன்களே இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பிரதான கோசமாகவும் கோரிக்கையாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக யுத்த்தாலும் படுகொலைகளாலும் வன்முறை அரசியலாலும் பாதிப்புற்று புகலிடம் தேடி பிரான்ஸ் வந்த இலங்கை மக்களுக்கு வதிவிட அனுமதி வழங்கு என்ற கோசம் கொண்ட பதாகையே பிரதானமாக முன்னெடுக்க்பட்டது.

பிரான்ஸ் அரசு ‘வதிவிட அனுமதியற்ற மக்களை அவமானப்படுத்தும் முறையில் சோதனை இடுவது, அவர்கள் வாழும் குடியிருப்புக்களை சுற்றிவளைத்து குற்றவாளிகள் போல் கைது செய்வது, சிறையில் அடைப்பது, நாட்டைவிட்டு பலாக்காரமாக அனுப்புவது, போன்ற மனித உரிமை விழுமியங்களை மீறும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்’ என்ற கோரிக்கை வலுவாகவும் தீவிரமாகவும் ஆர்ப்பாட்டக்காறர்களால் முன்வைக்கப்ட்டது. ‘பிரான்ஸ் அரசு வதிவிட அனுமதியற்றவர்களை ஆபத்தானவர்களாக நோக்குகின்ற போக்கை கைவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் முப்பதாயிரம் வதிவிட அனுமதியற்றவர்களை கைது செய்து சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைத்து நாட்டைவிட்டு வெளியேற்றும் அரசின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டுமென்றும், இந்த சிறப்பு முகாம் என்ற சிறைகள் மூடப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்ட்டது.
 
சமூகப்பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தோழர்கள் கிறீஸ்தோபர், மேரிகிறீஸ்ரியன், தோமா, கிறீஸ்ரி, செபஸ்த்தியான், ரமணன், வரதன், கஸ்ரோ, அசோக் முதலானோர் ஊர்வலத்தை நெறிப்படுத்தினார்கள்.  இவ் ஊர்வலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வதிவிட உரிமை மறுக்கப்ட்ட மக்களும் தங்கள் தங்கள் கோரிக்கைகளோடு பதாகைகளை தாங்கி வந்தனர். பிரான்சில் உள்ள பல்வேறு இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர்களும் சமூக அக்கறையாளர்களும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

Paris_Protest_14Mar09இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்வர்களில் ஒரு பிரிவினர் ‘மாக்கற்றிப் போர்சனி’ பிரதான வீதியில் உள்ள தேவாலயத்தினுள் நுழைந்து அங்கேயே தங்கி உள்ளனர். தேவாலய பரிபாலனசபையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் வெளியேற மறுத்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தங்குமிட வசதியற்றவர்கள் தருப்பி அனுப்பப்பட தீர்மானிக்கப்பட்டவர்கள் தேவாலயத்தில் அடைக்கலம் பெறுவது இது முதற்தடவையல்ல. இவ்வாறான சம்பவங்கள் பிரான்ஸில் ஏற்கனவே இடம்பெற்று உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேற மறுத்து தங்கள் கோரிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்து உள்ளனர்.

பிரான்ஸின் பிரித்தானியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதியான கலை என்ற பகுதியில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காகப் பலர் தினமும் முயற்சித்துக் கொண்டு உள்ளனர். பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கொன்ரைனர் லொறிகளில் தாவி தங்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு சேர்க்க அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் சிலர் கலை ப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியும் உள்ளனர். இந்தப் பகுதி ஐரோப்பாவின் சேரியாக வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடுமையான குளிரிலும் அடிப்படை வசதிகளற்ற வாழ்நிலைக்கு உதவாத தரத்தில் உள்ள இக்கூடாரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியா தனது எல்லைப் பாதுகாப்பை மிகவும் இறுக்கமாக்கி உள்ள நிலையில் பிரித்தானியக் கனவுடன் பலர் பிரித்தானியாவின் அக்கரையில் காத்திருக்கின்றனர்.
 
சமூகப் பாதுகாப்பு அமைப்பினர் கடந்த வாரமும் யுத்த நிறுத்தத்தைக் கோரி ஒரு ஊர்வலத்தை நடாத்தி இருந்தனர். அதனை புலி அதரவாளர்கள் எனக் காட்டிக்கொண்ட சிலர் குழப்ப முயற்சித்த போதும் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால் இந்த ஊர்வலம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சமூக பாதுகாப்பு அமைப்பு எதிர்வரும் காலங்களில் இலங்கை மக்கள் நலன் சார்ந்த அரசியல் சமூக கலாச்சார விடயங்களில் கவனம் செலுத்தி செயற்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக அசோக் தேசம்நெற்றிக்கு தெரிவித்தார்.

ஐ.பி.எல்: புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு

i-p-l-logo.jpgஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.

இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.

ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதப் பேரவலத்தை நோக்கி மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் இருதரப்பும் தீர்மானிக்காவிடின் 30 ஆயிரம் பேர் மடியக்கூடும் – குமார் ரூபசிங்க

army-s-l.jpgவன்னியில் மோதல்பகுதியில் அகப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மனிதப் பேரவலத்தை நோக்கிச் செல்வதாக கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்ததுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் “பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான யோசனைகளை’ முன்வைக்குமாறு நடத்திய மகாநாட்டில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்; இன்றுள்ள யுத்தப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கெரில்லா பாணியிலான பயங்கரவாதம் வெளிப்படலாம். இக் கருத்தை ஏனைய சிவில் சமூக அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.

அங்குள்ள மக்கள் படும் இன்னல் குறித்து அதிர்ச்சியடைந்தேன். அதேபோல அவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்குகின்ற முகாம்களும் திருப்தியாக இல்லையென நினைக்கிறேன். அங்கு சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும். இம்முகாம்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச அமைப்பிடம் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்படாது.

இதேவேளை; முல்லைத்தீவில் சிக்கியுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் என்ன செய்யமுடியும்? சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அரசையும் புலிகளையும் ஒத்துழைக்குமாறு கோருகின்றது. புலிகள் அம்மக்களை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அரசு யுத்தத்தை முன்னெடுக்கின்றது. இதற்கு இரு தரப்புமே பொறுப்பானவர்கள். மக்களை விடுதலைசெய்யுமாறு புலிகளுக்கு என்ன அழுத்தம் வந்ததெனக் கேட்கின்றேன். சென்னை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் சமூகத்திலிருந்து இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் மக்களை தமது கேடயமாக வைத்துள்ளனர்.

துப்பாக்கியை ஏந்திய படி புலிகள் உள்ளனர். இதனால் மக்கள் வெளியேறுவது எவ்வாறு சாத்தியம். அவர்கள் எறிகணைகள் மற்றும் பீரங்கியினால் கொல்லப்படுகின்றனர். மனித நேய அடிப்படையில் அவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்களை அனுமதித்தால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மனித நேய பணியை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரமுடியும்.

வெளியேறுபவர்களில் ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறும் அதனை சட்ட ரீதியாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதியை நாம் கேட்கமுடியும். 1971 ஆம் ஆண்டு நடந்தது போன்று 78 ஆயிரம் பேருக்கு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பொதுமன்னிப்பளித்தார்.

இந்நிலையில் ஆயுதங்களை கைவிட்டு வந்தவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. இதேபோல பொது மன்னிப்பின் மூலம் போராளிகளும் ஏனையோரும் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள எமது அமைப்பின் மூலம் கோரலாம். எனவே அகப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். நாம் எல்லோரும் இணைந்து குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதற்காக இணைந்து நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமென்றார்.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இங்கு பேசும் போது; போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது. கிளர்ச்சி இலங்கையில் முதல் முறையல்ல 1971,1989 ஆகிய காலப்பகுதியில் இரு தடவை நிகழ்ந்தன. 1987 முதல் 1989 வரையான காலப்பகுதி மிகப் பயங்கரமானது. தற்போது போல இது தென்னிலங்கையிலும் சமனாகக் காணப்பட்டது.

நாட்டின் எல்லா இடங்களிலும் சோதனைகள் இடம்பெற்றன. தமிழர், முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டனர். சிங்களவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதை மறந்து விடமுடியாது. அக்கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டது. நான் அப்போது கைது செய்யப்பட்டேன். புலிகள் ஆயுதம் மூலம் அழிக்கப்படுவது இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையாகும். 89 இரத்தக் களரியின் பின் இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டது. புரட்சியை மேற்கொண்டவர்கள் ஜனநாயகத்துக்கு வந்து கூட்டங்களை நடத்தினர், நிலைமை வழமைக்குத் திரும்பியது.

இரு சர்வாதிகாரங்கள் உள்ளதைவிட ஒன்று இருப்பது நல்லது. இரண்டு இருப்பது பயங்கரமானது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை ஏற்கின்றேன். புலிகள் தமிழ் தலைவர்களை, மக்களை கொலை செய்துள்ளனர்.சக போராட்ட இயக்கத்தையும் அழித்தனர். நாம் தர்க்க ரீதியாக சிந்திக்க வேண்டும். பாதிக்கப்படும் இதயம் ஆறுதலடையவே போர் இடம்பெறுகின்றதென்றார்.

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எவ்வித திட்டங்களையும் முழுமையாக செய்யவில்லை -மகிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எதுவிதமான திட்டங்களையும் முழுமையாக மேற்கொள்ளவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே இவ்வாறு கூறிய அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்;

மோதல் நடைபெறும் பகுதிகளில் பணியாற்றிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை விளக்கும் படங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு விளம்பரப் படங்களை காட்சிப்படுத்துவதை மட்டுமே இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் பணியாகக் கொண்டிருந்தனவே தவிர, செயல்திட்டங்கள் எதனையும் பூரணப்படுத்தவில்லை.

ஆனால் மனிதநேயப் பணிகள், விளையாட்டு மைதானப் புனரமைப்புகள், சனசமூக நிலையப் புனர்நிர்மாணம் என்பனவற்றிற்காகப் பெருந்தொகைப் பணத்தினை இவ்வமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கையில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடும். அதேவேளை, பொதுமக்களின் பாவனைக்காக ஏ9 வீதியைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் வீதியைத் திறப்பதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படுமெனவும் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அங்குள்ள வாவிப்பகுதி கைப்பற்றப்பட்டால் 20 சதுர கிலோமீற்றருக்கும் கூடுதலான பிரதேசம் மட்டுமே அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மிகுதியாக உள்ள பிரதேசம் கைப்பற்றப்படவுள்ளதோடு நாட்டின் முழுப் பிரதேசமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொது சன முன்னணியின் கீழ் போட்டியிடும் மத்திய சூழல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உதயகமன்பிலவின் இணையத்தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளுக்கு நாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் சுருங்கிவருவதாக தெரிவித்த கோதாபய ராஜபக்ஷ மேலும் தனது உரையில்; இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகள் இரு இராணுவப்பிரிவுகளை நிறுவுவதற்கு போதுமான பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். முன்னைய புலனாய்வு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் , விடுதலைப்புலிகளின் ஆளணி வசதிகள் மிகக்கூடுதலாக இருக்குமென நாம் எதிர்பார்த்தோம்.

அவர்களின் அவ்வாறான ஒழுங்கமைப்புகளை நாம் முறியடித்துள்ளதோடு , மிக விரைவில் அவர்களது பகுதிக்கு மூச்சுவிட முடியாத நிலைக்கு அவர்களை கொண்டு வந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு கமன்பிலவைப் போன்றவர்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக அமைந்ததாக கோதாபய குறிப்பிட்டார்.

புற்றுநோய் பரவுவது போன்ற பாதிப்பை இந்த யுத்தம் கொண்டிருப்பதோடு , இந்த பிரச்சினையை குறைந்தபட்சம் அடுத்த 10 பரம்பரைகளுக்கு நாம் விட்டுவைக்கப்போவதில்லை. இப் பயங்கரவாத பிரச்சினை 30 வருடங்களை நிறைவு செய்துள்ளநிலையில் இதனை அடுத்த தொடர்பு அத்தியாயத்திற்காக நாம் விட்டுவைக்கப் போவதில்லை. இந்த யுத்தம் ஒரு புற்றுநோயை போன்றது.

ஒரு கட்டத்தில் கதிரியக்க சிகிச்சை மூலமாக மேலும் புற்றுநோயை குணப்படுத்தலாம் . அவ்வாறே பயங்கரவாதத்தின் மூலமான யுத்தத்தையும் வெற்றி கொள்ள முடியும் . பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அக்குரஸ்ஸவியில் நடைபெற்ற சம்பவம் போன்ற நிலைமைகள் இனிமேல் ஏற்படாது. குறைந்த பட்சம் 10 தலைமுறைகளுக்கு பயங்கரவாதத்தின் கெடுபிடி இல்லாத நாட்டையே நாம் எதிர்பார்க்க விரும்புகிறோம்