![]()
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பெருமளவு பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்டதூரம் நடந்து வந்து இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். பலர் தாடியுடன் நீண்ட நாட்கள் குளிக்காதவர்கள் போல் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இடைத்தங்கல் முகாம்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயும் இந்தக் கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உயர் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், முகாம் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர் , படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. குறிப்பாக நீர் வழங்கல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லையென முகாம் பொறுப்பதிகாரிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். வவுனியாவிற்குள் சுமார் 40 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.