![]()
யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் நடத்துவதற்காக வடக்கின் நண்பன் எனும் நிதியத்தை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள் இந்நிதியத்துக்கு ஒரு கோடி 14 இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான யாழ். தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதற்காக வடக்கின் நண்பன் எனும் பெயரில் நிதியம் ஒன்றும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தனது ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்கி இந்த நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறே ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை இந்நிதியத்துக்கு வழங்கினர். இது ஒரு பாரிய வேலைத் திட்டமாகும். கடந்த 30 வருடங்களாக பயங்கரவாத அமைப்புடன் போராடிய எம்மைப்போன்ற ஒரு நாட்டுக்கு இது சமாளிக்க முடியாத ஒரு பொருளாதாரச் சுமையாகும்.
இது எமது நாடு, இது எமது கடமை என்பதை உணர்ந்து இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு இன, மத, கட்சி பேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வேலைத் திட்டத்துக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கு தமது கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் மே மாதத்துக்கான சம்பளத்தை வழங்குவதென நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.