![]()
திருகோணமலை மாணவி வர்ஷாவின் (வயது 6) படுகொலைச் சந்தேகநபரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்தவருமான ஜனார்த்தனனின் சடலத்தை கடந்த சனிக்கிழமை இரவு புதைகுழியிலிருந்து தோண்டி எடுத்த சிலர் தலையை துண்டித்து முகத்தை மிகமோசமாகச் சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமலை சென்.மேரிஸ் கல்லூரி மாணவியான வர்ஷாவை பாடசாலையிலிருந்து ஆட்டோவில் கடத்திய சிலர் அவரது தாயிடம் பெருந்தொகை பணத்தை கப்பமாகக் கோரியதுடன், பின்னர் அந்த மாணவியை படுகொலை செய்தனர்.
இந்தக் கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர் மறுநாள் கைது செய்யப்பட்ட அதேநேரம், அவரை மாணவியின் உடல் கிடந்த இடத்திற்கு பொலிஸார் கொண்டு சென்றபோது பொலிஸாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பியோடமுற்பட்டதாகக் கூறி பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றனர்.
அதேநேரம், இவருடன் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரும் அங்குள்ள தமிழ் அமைப்பொன்றின் பொறுப்பாளருமான ஜனார்த்தனன் எனப்படும் வரதராஜன் ஜனார்த்தனன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸாருடன் தடயப் பொருட்களை காட்டுவதாகக் கூறிக் கூட்டிச் சென்றபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு புதை குழியிலிருந்து இவரது சடலத்தை தோண்டியெடுத்த இனந்தெரியாத சிலர் கழுத்தை துண்டித்ததுடன், முகத்தை மிக மோசமாகச் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை இது பற்றி அறிந்த பொலிஸார், அங்கு சென்று சடலத்தை மீண்டும் அதே குழியில் புதைத்துள்ளதுடன், அந்தப் பகுதியை கண்காணித்தும் வருகின்றனர். மாணவியின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணை தொடந்தும் நடைபெற்று வருகிறது.