இலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவித்தால் மத்திய அரசு மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு பாடல் வரி உண்டு. அதற்கு இன்று ஒட்டுமொத்த சான்றாக தமிழகத்திலே விளங்கி வருபவர் ஜெயலலிதா தான். அறிக்கைகள் என்ற பெயரால் தன்னால் முடிந்த அளவிற்கு மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ- எதையாவது எழுதி மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அன்றாடம் முயன்று வருகிறார்.
22.3.2009 தேதியிட்ட அறிக்கையில் ஜெயா `கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர் தான் தற்போது தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார்’ என்ற பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
கச்சத்தீவை இந்தியர் தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாக சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொன்னால், எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?
15.8.1991 அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடியபோது ஆற்றிய உரைக்கு அனைத்து பத்திரிகைகளும் கொடுத்த தலைப்பே, `கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா சபதம்’ என்பதுதான்.
ஆனால், 1991 முதல் 1996 வரையிலும், பிறகு 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலும் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை அவர் ஏன் மீட்கவில்லை?. 91ம் ஆண்டு சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் என்ன? அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன கிழித்தார்?.
`கச்சத்தீவு’ என்றால் கச்சேரிக்கு எடுத்து செல்லும் வீணை என்று நினைத்துக் கொண்டு அதை `மீட்டுவேன்’ என்று சபதம் செய்திருப்பார். பாவம். அவர் கோட்டை கொத்தளத்தில் சபதம் செய்து ஆட்சியிலே இருந்தபோது எதை மீட்டிக் கொண்டிருந்தார்? ஆனால் நேற்று எழுதியுள்ள அறிக்கையிலே தனது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று பொய்யாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழகம் ஏன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யக்கூடாது என்று வக்கணையாக அறிக்கைவிடும் ஜெயலலிதா அப்போது பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது கச்சத் தீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சி ராஜினாமா செய்யும் என்று அறிவித்தது உண்டா? ராஜினாமா செய்ததுதான் உண்டா?.
விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்துகொண்டு வாய் சவடாலாக முழங்கிவிட்டு, அந்த பேச்சு பத்திரிகைகளில் எல்லாம் கொட்டை எழுத்துகளில் வெளிவந்ததே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதிவிட்டு, ஒருமுறை பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி.
ஆனால் நான் ஏதோ ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக அறிக்கையிலே வாய்நீளம் காட்டியிருக்கிறார்.
மத்திய அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?
1974ம் ஆண்டிலேயே ஆகஸ்டு 21ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு பற்றி நான் முன்மொழிந்த தீர்மானம் இதோ. `இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.’
எனவே, திமுக அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை.
மேலும் அந்த தீர்மானத்தில் நான் பேசும்போது, `கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்து சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து திமுக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.’
கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதில் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்கு பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்த கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதற்கு எந்த வகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.
தமிழக அரசை இதுபோன்ற பெரிய பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை. ஆக்கபூர்வமான முறையில் பிரதமர், முதல்வர் இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட-எத்தனை முறை இதுபற்றி பிரதமரிடத்திலே தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்சத்தீவுப் பிரச்சினையில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை- கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில், `1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று கச்சத்தீவை இலங்கையிடம் தரும் அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இதுபற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27ம்ந் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்த காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்’.
17.8.1991 அன்றே `தினமணி’ பத்திரிகை எழுதிய தலையங்கத்தில், 1974ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, பண்டார நாயாகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், `1976ல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்தே, திமுக ஆட்சியிலே இருந்த காலத்தில் மீன்பிடிக்கும் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டதாக கூறுவது அசல் மோசடியும், பித்தலாட்டமும் ஆகும்.
ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் இலங்கை அமைச்சர் ஒருவர் கச்சத்தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் என்றும், அதற்கு மத்திய-மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், இதன்மூலம் இலங்கை அரசின் அறிவிப்புக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் ஜெயலலிதா எழுதியுள்ளார்.
இந்த பொருள் பற்றிய அறிக்கையை 22ம் தேதி காலையில் வைகோ விடுத்திருந்தார். அதே பொருள் பற்றி 22ம் தேதி மாலையில் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா அறிக்கை விட்டபிறகு, அதே பொருள் பற்றி அடுத்த நாள் வைகோ அறிக்கை விடுவார். இது இலங்கை பிரச்சினை என்பதால், வைகோ அறிக்கை விடுத்து, அதனை ஜெயலலிதா பின்பற்றியிருக்கிறார் போலும்.
`கச்சத்தீவை முழுவதுமாக தனித்த புனித இடமாக இலங்கை அரசு அறிவிக்கப் போகிறதாம்’ என்று தான் இவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
இதுபற்றி விசாரித்த அளவில்- இலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவிக்க இருப்பதாக எந்த நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா மொழியிலே சொல்வதென்றால் ‘வாய் தவறி’ சொல்லியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது.
எது எப்படியிருந்தபோதிலும், அது உண்மையாக இருந்து அப்படி அறிவித்துச் செயல்படத் தொடங்கினால் திமுக அரசு அதற்கான விளக்கம் கேட்டு பெற்று; அதை வன்மையாக கண்டிக்கவும்- மத்திய அரசுக்கு அறிவித்து-உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தயங்கப் போவதில்லை.
இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்- திடீரென்று ஜெயலலிதாவுக்கு இலங்கை மீது இவ்வளவு இன உணர்வு மிக்க அக்கறை எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பதுதான்.
சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைத்தான் வேட்டையாடுகிறார்கள்; அப்பாவித் தமிழர்களை அல்ல என்றும், யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது இயற்கை தான் என்றும் சிங்களத்துக் காளிகாதேவியாக நின்று முழங்கிய ஜெயலலிதாவுக்கு இப்போது திடீரென்று இலங்கை தமிழர் மீதும்- கச்சத்தீவு மீதும் இவ்வளவு அக்கறை வருவானேன்? எல்லாம் தேர்தல் தேதி நெருங்குகிறது என்பதால் தானே?.
ஆமாம்; `பிரபாகரனை இலங்கையில் கைது செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருக’ என்று ஜெயலலிதா; முதல்-அமைச்சராக இருந்தபோது 16.4.2002 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாரே; அந்த ஜெயலலிதா தானா இந்த ஜெயலலிதா?.
அய்யோ பாவம்; அவர் தான் இவர் என்று தெளிவடைய அவர் முகமூடியைத் திறந்து பாருங்கள் என்று தான் கூறவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அமாவாசைக்கு காத்திருக்கும் ஜெயலலிதா
தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வரும் 26ம் தேதி அறிவிக்கவுள்ளன. காரணம், அன்றைய தினம் நிறைந்த அமாவாசையாகும்.
வரும் வியாழக்கிழமை நிறைந்த அமாவாசை தினம் வருகிறது. வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும், அதுவும் அன்றைய தினம் சித்த யோகத்துடன் கூடிய நிறைந்த அமாவாசையும் கூடி வருகிறது.
அதன் பிறகு வளர்பிறை ஆரம்பிப்பதால், அன்றைய தினம் தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெல்லும் என்பது நம்பிக்கை.
இதில் பெரும் நம்பிக்கை கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்றைய தினம் தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.
பாஜகவும் அன்றைய தினமே வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்றுதான் கன்னியாகுமரியில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டமும் அன்றுதான் கூடுகிறது. கூட்டணி பற்றிய முக்கிய முடிவை அன்று தான் அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் எடுக்கிறார்.