Multiple Page/Post

வடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் இன்று

basil-raja.jpgவடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல முக்கியஸ்தர்கள்  கலந்து கொள்வர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பயணப்பாதுகாப்பு அனுமதி வழங்கும் நடைமுறையை இலகுபடுத்துவது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதையல் தோண்ட சென்ற 10 பேர் கைது

ரிடிகல காட்டுப்பகுதியிலுள்ள கீரியகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற பத்துப் பேரை நேற்று முன்தினம் இரவு ஹபரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :-

ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸ் குழு புதையல் தோண்டியோரையும் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் தீ. ஜி. றி. வி. 5808 இலக்கக் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொழும்பு, மாத்தறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

musharap.jpgபாகிஸ் தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை அமுல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இவ்விதம் இரண்டு வாரகாலம் நீதிபதிகளை சிறையில் அடைத்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு பாகிஸ்தான்  நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்லம் குமான் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்மல் ரஸா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

வெற்றி பெற்றோர் விபரம்: வர்த்தமானி அறிவிப்பு இவ்வாரம்

ஊவா மாகாண சபை மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா அரச அதிபர்களிடம் கோரியுள்ளதாகவும், அதேவேளை, போனஸ் ஆசனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளி யிடப்படவுள்ளது.

கே.பி.விவகாரம்; விசாரணை நடத்த மலேசியாவிடம் வலியுறுத்தல்

pathmanathan.jpg
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு கொண்டு சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். செல்வராஜா பத்மநாதன் தொடர்பான விபரத்தை மலேசியா வெளியிட வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு பாங்கொக் ஊடாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த விடயம் குறித்து மலேசியரசு எந்தத் தகவலையும் கொண்டிருக்காவிடின் முழு விடயம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம் என்று ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

‘மொராக்கோ’ சூறாவளியால் மலைக் கிராமம் மண்ணில் புதைந்தது

பிலிப்பைன்ஸ், தாய்வான், சீனா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வீசிய மொராக்கோ என்ற சூறாவளி காரணமாக தாய்வானில் உள்ள ஷியோலின் என்ற மலைக் கிராமம் முழுவதும்  மண்ணில் புதைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை அங்கு மக்கள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்த போது திடீரென அக்கிராமமே மண்ணில் புதைந்துள்ளது.

இக்கிராமத்தில்  200 வீடுகளில் தங்கியிருந்த 600 பேரும் பலியானார்கள். தகவல் அறிந்ததும் அதிகாரிகளும்,  மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று சடலங்களை மீட்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசா தெரிவு

jaffna_mayor-2009-08-11.pngயாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசாவும்,  துணை மேயராக துரைராஜா இளங்கோவும் (றீகன்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகிய இந்த இருவரும் வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த கல்விமானாகிய யோகேஸ்வரி பற்குணராஜா சுமார் 28 வருட காலமாக கிளிநொச்சி யாழ்ப்பாணம் கொழும்பு மாவட்டங்களிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் அமைச்சுக்களில் உயரிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார். சர்வதேச லயன்ஸ் கழகம் இவருக்கு சிறந்த ஆலோசகர் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராஜா இளங்கோ (றீகன்) சிறந்த சமூக சேவையாளர். சகல சமூக மக்கள் மத்தியிலும் தனது சேவையால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அந்தமான் நில நடுக்கத்தால் இலங்கையில் சுனாமி ஆபத்தில்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு

tsunami111.jpgஅந்த மானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லையென இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீண் பதற்றம் இன்றி அமைதியாக இருக்குமாறும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் நாகை,  கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ஜப்பானிலும் ‘சுகுரு’ என்ற தீவுக்கு அருகே நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் நேற்று  5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நலன்புரிநிலைய தரம் 05 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி நிவாரண செயற்றிட்ட உதவி நிறைவுபெற்றது. – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

kathir-camp.gifவடக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள தரம் 05 மாணவர்களின் கல்விநிலையை மேம்படுத்த தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் மேற்கொண்டுவந்த முதல்கட்ட கல்வி நிவாரண செயற்றிட்டம் நிறைவுபெற்றுள்ளது.

இந்த கல்வி நிவாரண திட்டத்தின் கீழ் வவுனியா நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவனுக்கு  30 மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரி வினாத்தாள்களும், 04 வழிகாட்டிப் புத்தகங்களும் நலன்புரி நிலைய பாடசாலைகளின் இணைப்பதிகாரியும்,  கல்வி அதிகாரியுமான திருவாளர் த. மேகநாதன் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நலன்புரி நிலையத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு நலன்புரி நிலைய ஆசியர்களின் ஊடாக மாணவர்கள் வழிகாட்டப்பட்டு வருகின்றனர். தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அரசாங்கப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்துக்கு லண்டனில் தேசம்நெற் இணையத்தளம், அகிலன் பவுண்டேஷன் மற்றும் லிட்டில் எய்ட் போன்ற அமைப்புகளினதும், சில பரோபகாரிகளினதும் உதவி பெறப்பட்டது. இலங்கையில் சிந்தனைவட்டம் இத்திட்டத்தை நேரடிப் பராமரிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தியது. மேலும் மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியமும் இதற்கான நிதியுதவிகளை வழங்கியது. இந்த கல்வி நிவாரண செயற்றிட்டத்தின்போது ஒவ்வொரு மாணவனுக்கும் 570ரூபாய் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களும்,  4 வழிகாட்டி புத்தகங்களும் கிடைக்க வழி செய்யப்பட்டன.

இத்திட்டத்தில் மொத்தப் பணப் பெறுமதி 27இலட்சத்து 77ஆயிரத்து 40 ரூபாவாகும். இச்செலவில் மூன்றிலொரு பங்கான 9 இலட்சத்து 25ஆயிரத்து 680 ரூபாவை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றதுடன்,  மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல், அச்சிடல்,  பொதியிடல்,  நலன்புரிநிலையத்தில் ஒப்படைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் 7இலட்சம் ரூபாவை வழங்கியது.

மீதமான 11 இலட்சத்து 51ஆயிரத்து 360 ரூபாவை தேசம்நெற் பொறுப்பேற்றது. இத்தொகையில் இரண்டு இலட்சம் ரூபாவினை நேரடியாக தேசம்நெற் வழங்கியது. மீதமான தொகையில் 3000 பவுண்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினரும்,  1000 பவுண்களை லிட்டில் எய்ட் நிறுவனத்தினரும் மீதித் தொகையான 1000 பவுண்களை சில பரோபகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்குமான விரிவான கணக்கறிக்கைகளும்,  செயற்பாட்டறிக்கைகளும் நலன்புரிநிலையத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்பாட்டுக் கடிதங்களும் தனித்தனியாக விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும்,  அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,  துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய்,   ஒட்டிசுட்டான்,   மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இடம்பெயர்ந்து  நலன்புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகளில் இம்மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிந்தனைவட்டம் தேசம்நெற் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் வலயம் 0, வலயம் 1,  வலயம் 2 , வலயம் 3, வலயம் 4, வலயம் 5 நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் மேலும் சுமதிபுரம்,  தரம்புரம், வீரபுரம் நலன்புரி நிலைய மாணவர்களுக்கும் நகர்ப்புறங்களிலுள்ள 07 பாடசாலையில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

llll.jpg

கே.பி.யை நாடு கடத்துமாறு இந்தியா உடனடியாகக் கோரும் சாத்தியம் இல்லை – விசாரணை விபரத்தைக் கடிதம் மூலம் கோரும்

kp00.jpgகைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை நாடு கடத்துமாறு உத்தியோகபூர்வமாக இலங்கையைக் கோருவதற்கு காலம் எடுக்கக்கூடும் என்பதால் அவர் மீதான விசாரணை தொடர்பான விபரங்களைக் கடிதம் மூலம் கொழும்பிடம் இந்தியா விரைவில் கோரக்கூடும் என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கே.பி.யின் கைது தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக பதிலளித்துள்ள வட்டாரங்களே இதனைக் கூறியுள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தருணத்தில் நாடு கடத்தும் கோரிக்கை உடனடியாக விடுக்கப்படுமெனத் தோன்றவில்லை. முதலாவதாக கே.பி. விவகாரத்தை இலங்கை கையாள்வதற்கே சர்வதேச சாசனங்கள் இடமளிக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு கே.பி.யை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்தியா உடனடியாக விடுக்காது. சென்னையில் கே.பி.யை கைது செய்வதற்கான ஆணையை இந்தியா விடுத்திருந்தது. ராஜீவ்காந்தி படுகொலை சதியின் பின்னணி தொடர்பாக அதிகளவு விபரங்களைப் பெற்றுக்கொள்ள கடிதம் மூலம் விபரங்களை இந்தியா பெற்றுக்கொள்ளும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடிதத்தில் கேட்டல் (Letter Rogatory) என்பது உள்ளூர் நீதிமன்றத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும் விடயமாகும். இது சட்ட ரீதியான வழிமுறையாகும். வெளிநாட்டில் சில தொடர்புகள் இருந்தால் வழக்கு விசாரணைக்கு உதவியாக ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து உதவி பெறுவதற்கு இது இடமளிக்கிறது.

கே.பி.யை நாடு கடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு முன்பாக பூர்வாங்க விசாரணைகளை நடத்த வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை தெரிவித்திருந்தது.  இந்தியா கே.பி.யை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தால் இலங்கை தனது விசாரணைகளை நிறைவு செய்த பின் சர்வதேச விதிமுறைகளுக்கு அமையச் செயற்படும் என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.

இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்புக்கு கே.பி. தேவைப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்பே ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னாலுள்ள பாரிய சதியில் கே.பி.யின் பங்களிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி.க்கு தெரியுமென்ற சந்தேகம் விசாரணை முகவரமைப்புகளிடம் உள்ளன.