கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் 63 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 33,545 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 76,094 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் ஒக்டோபர் 7 முதல் தெற்கு இஸ்ரேலிய எல்லை மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாரிஸில் இலக்கியச் சந்திப்பு மார்ச் 30 மற்றும் 31 தினங்களில் நடைபெற்றது. வழமை போன்று விமர்சனங்களுக்கு எவ்வித குறையும் இருக்கவில்லை. இலக்கியச் சந்திப்பு அதன் ஆரம்பம் முதலே ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும், சாதியத்துக்கு எதிரானதாகவும் மாற்றுக் கருத்துக்களுக்கான குரலாகவும் நீண்டகாலமாக ஒலித்து வருகின்றது. அதே சமயம் முரண்பாடுகளுக்கு எவ்வித பஞ்சமும் இலக்கியச் சந்திப்புக்களில் இருக்கவில்லை. இந்த இலக்கியச் சந்திப்பிலும் கூட.
“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” என்ற தலைப்பில் எழுத்தாளர் சேனன் தேசம்நெற் இல் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். இலக்கியச் சந்திப்பினைத் தொடர்ந்து எழுத்தாளர் மௌரூப் பௌசர், இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளரான உமா ஷானிகாவை நோக்கி சில பாரதூரமான குற்றம்சாட்டும் கேள்விகளை எழுப்பி உள்ளார். 01. இலக்கிய சந்திப்பில், உங்களுடன் சேர்ந்தியங்கும் நபர்கள் மீதும், அவர்களின் தோழமைகள் மீதும் பாலியல் குற்றாச்சாட்டுக்கள் உள்ளனவே?
02. இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் யாரால்? எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
03. இலக்கிய சந்திப்பினை வழி நடாத்தும் ஒரு பிரிவினர் பல கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்த கோதா கொலைக்குழுவின் பகுதியினராக உள்ளார்களே?
என்று இலக்கியச் சந்திப்புக்களில் நீண்டகாலம் தொடர்ந்து செயற்பட்ட எழுத்தாளர் பௌசர் கனதியான பல கேள்விகளை எழுப்பி உள்ளார். இலக்கியச் சந்திப்பு நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், கொலைகள் ஆட்கடத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மிகப் பாரதூரமானவை.
இக்குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் என்று அறியப்பட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தான் மீதான அரசியல் குற்றச்சாட்டுக்களின் வெளிப்பாடாகவே வைக்கப்படுகின்றது என்பதிலும் எவ்வித இரகசியமும் இல்லை. இக்குற்றச்சாட்டுகனை பௌசர் எழுப்பக் காரணம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஸ்ராலின் ஞானம் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் ஆலோசகராக ஆரம்பம் முதலே கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகின்றார். சந்தரகாந்தனின் இரு நூல்களுக்கும் பின்னணயில் இவரும் இருந்துள்ளார் என்றும் நம்பப்படுகின்றது. இவை எதனையுமே ஸ்ராலின் ஞானம் இரகசியமாகச் செய்யவில்லை. மிக வெளிப்படையாகவே சந்திரகாந்தனின் ஆலோசகராக செயற்படுகின்றார்.
இந்த இலக்கியச் சந்திப்பில் நிர்மலா ராஜசிங்கம் மற்றும் சின்னத்துரை ராஜேஸ்குமார் ஆகியோரும் மிக முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். பௌசருடைய சேனனுடைய குற்றச்சாட்டுகள் இவர்களை நோக்கியும் விரிந்துள்ளது. அதற்குள் செல்வதற்கு முன்,
31ம் நாள் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு சாதியப் பிரச்சினை தொடர்பான உரையாடல் களமாக அமைந்தது. தலித்மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் தலைமையில் இடம்பெற்றது. சாதியப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னனியையும் பல சம்பவங்களையும் தொகுத்து வழங்கினார் அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தேவதாசன்.
தேவதாசனின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் உரையாற்றிய சுவிஸிலிருந்து வந்து கலந்துகொண்ட பொதிகை ஜெயா “தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கு திருமணம் பேசிய போது 14 சம்பந்தங்கள் ‘உங்களுடைய சாதிக்குள் தாங்கள் திருமணம் செய்யத் தயாரில்லை’ என்று சொல்லி மறுத்ததைச் சுட்டிக்காட்டினார். “அப்படியானால் நீங்கள் உங்கள் சாதிய படிநிலையில் கீழுள்ள சமூகத்திற்குள் மணம் முடிப்பீர்களா?” என்று சபையிலிருந்து ஒரு கேள்வி எழும்பிய போது “நிச்சயமாக அதற்கு எந்தத் தடையும் இல்லை எனப் பொதிகை ஜெயா தெரிவித்தார்.
இந்தக் காலத்தில், இந்த நேரத்தில் இந்தக் கள ஆய்வு எதற்கு? என்ற உப்புச்சப்பற்ற கேள்வியை முன் வைத்த நெய்தல் நாடான், சாதியம் என்பது புரையோடிப் போயிருந்தாலும் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது இன ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் தன் கருத்தை முன்வைத்தார். சாதியமில்லை என்று அல்லது சாதியம் தணிந்து கொண்டிருக்கின்றது என்பதெல்லாம் ஒரு சாதிமான் அரசியல் அல்லது தங்களையும் உயர்சாதியினராக மேலுயர்த்தும் அரசியல் போக்கின் வெளிப்பாடே. இந்த உப்புச்சப்பற்ற கேள்விக்கே பதிலளித்து அவர்களை மௌனிக்க வைக்காமல் அவர்களை ஒரு பெரிய எதிரிகளாக கட்டமைக்கும் வகையில் சந்திப்பு திசை திரும்பியது.
இந்த இலக்கியச் சந்திப்பில் அங்கிள்ஸ் அன் அன்ரிகள் மதிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை அரசியல் குருவாக ஏற்ற யோகு அருணகிரி தலைமையில் தான் இந்த நெய்தல் நாடான், கார்வண்ணன் மற்றுமொரு நண்பர் என நால்வரும் அங்கு வந்திருந்தனர். இவர்களது கேள்வி ஆரம்பம் முதல் இறுதிவரை இலக்கியச் சந்திப்பில் இலக்கியம் பற்றி கதைக்காமல் ஏன் சாதியம் பற்றி மட்டும் கதைக்கிறீர்கள்? என்பது ஒன்றே.”நீங்கள் சாதிய அரசியல் செய்கிறீர்கள்” என்ற பதிலையும் அவர்கள் வைத்திருந்தனர். கேள்வியையும் கேட்டு உங்களை கஸ்டப்படுத்தக் கூடாது என்று அவர்களே பதிலும் சொல்லி விட்டார்கள். அதற்கு ஏன் இலக்கியச் சந்திப்பு அவ்வளவு குழப்பம் அடைந்தது என்பது தெரியவில்லை.
“சாதியம் புரையோடிப் போய் இருக்கிறது. அதனால் சாதிய அரசியலை முன்னெடுக்கிறோம். தமிழ் தேசியம் சாத்தியமாக வேண்டும் என்றால் சாதியம் இல்லாத பிரதேசவாதம் இல்லாத தமிழ் சமூகம் உருவாக்கப்பட வேண்டும்” தோழர்களே!!! என்று ஒரு ஸ்ரேற்றமன்றை விட்டுட்டு போக வேண்டியது தானே. அதைவிட்டு விட்டு தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசனுக்கு கூட்டம் எப்பிடி நடத்துவது என்று உயர்சாதி வெள்ளாள மேட்டுக்குடி ஆங்கிலீஸ் தெரிந்த நிர்மலாவும் ராகவுனும் கிளாஸ் எடுக்க வேண்டிய தேவையே இல்லையே. புலிகள் மிகப் பலமாக இருந்த காலத்திலேயே பல கூட்டங்களை நடத்திய தேவதாஸனுக்கு கூட்டம் நடத்த தெரியாதா? கூட்டத்தை நிர்மலா ராஜசிங்கம் குழப்பிய அளவுக்கு வேறு யாரும் குழப்பியதாகத் தெரியவில்லை. இலக்கியச் சந்திப்பில் கேள்வி கேட்பது எப்படி ஒரு பாரிய குற்றமானது?
அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அரசியல் விமர்சகர் கார்வண்ணா “அச்சுவேலி தன்னுடைய ஊர் என்றும் அங்கு இராணுவத்தைக் கூட்டி வந்து தேர் இழுக்க வைத்தது சாதியப் பிரச்சினையால் அல்ல” என்று சடைந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களிடையே உள்ள முரண்பாட்டால் லண்டனில் இருந்து நாடு திரும்பிய சகோதரர் அரசோடு தனக்குள்ள உறவை நிரூபிக்கவே ஜேபிசி இயந்திரத்தை கொண்டு வந்து தேர் இழுத்ததாகத் தெரிவித்தார். மேலும் ஆலயத்தின் பின்பக்கமாக உள்ள வெள்ளாளர் யுத்தகாதலத்தில் பள்ளர் சமூகத்தை அழைத்து அவர்களுக்கான உதவிகளை வழங்கியதாகவும் கார்வண்ணன் சுட்டிக்காட்டினார்.
இலக்கியச் சந்திப்பு என்பது ஜனநாயக மறுப்பு, சாதிய மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு செயல் வடிவம் எனத் தெரிவித்தார் எழுத்தாளர் சரவணன். இலங்கையில் சாதியம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சாதியப் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமைப்படுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார் சரவணன்.
பாஸ்கரன் “சாதிப்பிரச்சினை மெருகூட்டப்பட்டு வருகின்றது. சாதிப் பிரச்சினையை அழிக்க வேண்டும் என்றால் மதத்தை அழிக்க வேண்டும். மதத்தை அழிக்க நான் தாயர். நீங்கள் தயாரா?” என்றவர் சாதிய பிரச்சினை என்பது அரசியலுக்காகத் தூண்டப்படுவதாகத் தெரிவித்தார்.
விஜி கருத்துத் தெரிவிக்கையில் சாதியம் இருக்கு ஆனா இல்லை. இருக்கு ஆனா குறைய. இருக்கு ஆனா … புகலிடத்தில சாதியில்லை. நீங்க பதினொரு மாப்பிளையா பார்த்தீங்கள்? என்று நளினமாக தன் கருத்தை முன் வைத்தார்.
நீங்கள் என்ன சாதிய உணர்வை வைத்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் உரையாடல்களிலேயே வருகின்றது. எந்த சாதிக்கு எந்த சாதி உதவுகின்றது என்பதையெல்லாம் மிகத் தெளிவாகவே சொல்கின்றீர்கள் என்று சுட்டிக்காட்டினார் தலித் மேம்பாட்டு முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் அசுரா.
ஒடுக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்கள் பொதுவாக தங்களுடைய சாதியை தங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்வதில்லை. ஆனால் ஒடுக்குகின்ற சமூகம் தங்களுடைய பிள்ளைகளுக்கு தங்களுடைய சாதியைத் தெளிவாக ஊட்டி வளர்த்துள்ளனர் என உமா ஷானிகா தெரிவித்தாரர். அவர் மேலும் கூறுகையில் போராட்ட காலத்தில் சாதி இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த உமா தென்னியானின் ‘ஏதனங்கள்’ அதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த சமூகத்திலிருந்து அனுப்பப்படுகின்ற பணம் சாதியத்தை இன்னமும் வளர்க்கவே பயன்படுகின்றது. வட மராட்சியில் இன்னமும் பல ஆலயங்கள் அனைவருக்குமமாக திறந்துவிடப்படவில்லை. ஆலயங்கள் கட்டப்படுகின்றதேயல்லாமல் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதில்லை என்றார் இளங்கோவன்.
வடமராட்சியில் உள்ள பொலிகண்டிச் சுடலையில் மூன்று சாதிக்கும் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஒருவர் அதனை சுவிஸ் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அதற்கு அப்பாராளுமன்ற உறுப்பினர் அதுவொரு பாத்தி தான் போட்டு இருக்கின்றது என்று கூறியதை அங்கு சுட்டிக்காட்டினார்.
நிர்மலா ராஜசிங்கம் சாதியம் இன்னமும் ஆக்ரோசமாக இருக்கின்றது என்பதை வலுப்படுத்தும் வகையில் சுண்ணாகம் சூறாவத்தை, புத்தூர், அச்சுவேலிச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி பாஸ்கரனுக்கு பதிலளித்தார். ஆனால் பாஸ்கரனை நோக்கிப் பதிலளித்த நிர்மலா, பாஸ்கரன் பதிலளிக்க முன்வந்ததை சபைநாகரீகம் தெரியவில்லை என்று நையாண்டி பண்ணிணார். அதற்கு மீளவும் பதிலளித்த பாஸ்கரன் நீங்கள் அரசியல் நோக்கத்திற்காகவே சாதியத்தை முன்வைப்பதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.
சாதிப் பிரச்சினை என்பது குண்டியில் பச்சை மட்டை அடிபோட்டு தீர்க்கிற பிரச்சினையில்லை. இது ஒவ்வொருத்தருடைய மூளையில இருக்கிற பிரச்சினை என்றார் முத்துசிறி. இங்கு இருப்பது சாதிய சமூகங்கள். தங்களுக்குள் அகமணமுறையைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள். அங்கு போராட்டத் தேசியத்துக்குப் பதிலாக அங்கு இருப்பது சமரசத் தேசியம். அதற்கு சாதியம் அவசியமானது என்ற முத்து சிறி ஒடுக்குமுறை தீவிரமாகும் போது அணிசேர்தல்கள் இயற்கையாக நிகழும் என்று கூறிக்கொண்டு சாதிய அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டிய இளைஞர்களைப் பார்த்து ஏன் ரீ குடிக்கவில்லை என்று கேட்டு அமர்ந்தார்.
இது பற்றி அங்கு கருத்துத் தெரிவித்த இன்னுமொருவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சுதந்திரத்துக்குப் பின் ஒரு எழுபது ஆண்டுப் போராட்டம். ஆனால் சாதியம் என்பது நான்காயிரம் வருடங்களாக அடக்கி ஒடுக்கி இன்னமும் அவன், இவன் என்று இன்னமும் பேசிக்கொண்டு வெட்கக் கேடன நிலையில் தான் நாங்கள் உள்ளோம். இன்றைக்கும் கொல்லன்கலட்டி, வண்ணார்பண்ணை, அம்பட்டன் பாலம் என்ற சாதியப் பெயர்களோடு தான் ஊர்கள் உள்ளது. முதலில் நாங்கள் இதனை உடைக்க வேண்டும் என்றார் அவர்.
இறுதியாக தனது கருத்தை வெளியிட்ட ஸ்ராலின் ஞானம் இந்த யாழ்ப்பாணத்தோட மட்டக்களப்பை இணைக்கச் சொல்லியா கேட்கின்றீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரங்கை விட்டு வெளியேறினார்.
கூட்டத்தின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராகவன் இருவருமே கூட்டத்தை தமது அதிகாரப் பிடிக்குள் வைத்திருப்பதற்கான அத்தனை செயற்பாடுகளையும் மேற்கொண்டதுடன் சின்னத்துரை ராஜேஸ்குமார், யோகு அருணகிரியுடனும் அவரின் நண்பர்களுடனும் சண்டைக்குத் தயாராய் விறுக்கென்று எழுந்ததும் ஷோபாசக்தி அவரைத் தடுப்பதும் வீடியோக்களிலும் பதிவாகியுள்ளது.
எப்போதும் கொள்கை அடிப்படையில் இல்லாமல் குழவாத மனப்பான்மையோடு செயற்படும் நிர்மலா ராஜசிங்கம் சின்னத்துரை ராஜேஸ்குமார், இருவரதும் அரசியல் பயணம் தனிநபர் வழிபாடு மற்றும் குழவாத மனப்பான்மையோடு தான் இருந்தது. தொண்ணுறுக்களின் பின் அரசியல் பற்றி அறிய விளைந்த யோகு அருணகிரி போன்றவர்களுக்கு இருந்த ஒரே அரசியல் தெரிவு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் வேறெந்த அரசியல் இயக்கங்களும் இருக்கவில்லை.
ஆனால் 1980க்களில் நிர்மலா ராஜசிங்கம், சின்னத்துரை ராஜேஸ்குமார் போன்றோர் விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்ட போது அவர்களுக்கு இடதுசாரி அமைப்புகளில் இணைந்து அவ்வமைப்புகளை வலுப்படுத்தவும் முற்போக்கான பாத்திரம் வகிக்கவும் வாய்ப்புகள் இருந்தது. ஆயினும் அவர்கள் பிரபாகரனை வைத்துக்கொண்டு தாங்கள் அரசியல் நடத்தாலாம் என்ற குறுக்குச் சிந்தனையில் பிரபாகரனோடு தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் தங்களை முன்நிறுத்துவதற்கு அப்பால், ஒரு போதும் இடதுசாரிச் சிந்தனையையோ முற்போக்கான பாத்திரத்தையோ கொண்டிருக்கவில்லை.
இன்றும் இவர்களது அடையாளம் என்பது இவர்கள் புலிகளில் இருந்ததும், அதில் இருந்து வெளியேறியதும் வெளியேற்றப்பட்டதும் இவருடைய சகோதரி ராஜினி திரணகம புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் தான். இவர்கள் அமைப்பு ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ இதுவரை எதனையும் சாதிக்கத் தவறிவிட்டனர். காலத்துக்குக் காலம் தங்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை. ரிபிசி வானொலி நிலையம் உடைப்பு, தேசம்நெற் யை மூடும்படி கோரி கையெழுத்துப் போராட்டம், குழவாத செயற்பாடுகள் மற்றும் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தூண்டிவிடுவது, முதலாளித்துவத்தின் சார்பில் மார்க்ஸிய விரோதக் கருத்துக்களைப் பரப்புவுது என இவர்களுடைய சமூக விரோதச் செயற்பாடுகள் நீண்டுகொண்டே செல்கின்றது. நடந்து முடிந்த இலக்கியச் சந்திப்பிலும் இவர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தத் தயங்கவில்லை.
சின்னத்துரை ராஜேஸ்குமார் அரங்கம் இணையத்துக்கு இலக்கியச் சந்திப்பு பற்றி எழுதிய கட்டுரையில்: “டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸ் நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்” என்று புகழாரம் சூட்டி எழுதியுள்ளார். காரணம் அவர் தாங்கள் வைத்துள்ள கருத்தை ஆதரிக்கும் வகையில் ஆய்வை மேற்கொண்டு விட்டார் என்பதற்காக. ஆனால் உலகமே 21ம் நூற்றாண்டின்படி மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று மதிப்பவர் பற்றி நிர்மலா ராஜசிங்கம் வருமாறு கூறுகின்றார்: “கார்ள் மாக்ஸ் வந்து ஒரு பச்சைப் படுமோசமான ஒரு ஆணாதிக்கவாதி. குடிச்சுப் போட்டு கானுக்குள் விழுந்து கிடந்து, வந்து வேலைகாரப் பெண்மணியை… !”.
டெலோன் மாதவன் அறிஞன் கார்ல் மார்க்ஸ் …? இவருக்கு ஷோபா சக்தி வக்காலத்து வேறு.
ஒரு முதலாளித்துவ ஊடகம் கூட செய்யத்துணியாத அளவுக்கு 21ம் நூற்றாண்டின் ஒரு சிந்தனையாளனை இவ்வளவுக்கு நடத்தைப் படுகொலை செய்யும் நீங்கள் சாதாரண எழுத்தாளர்களை மனிதர்களை இவ்வாறு தானே அவமதித்து வருகின்றீர்கள். உங்களுக்கு யாரையும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள எந்தத் திராணியும் இல்லை. உடனடியாக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்குவதேயில்லை.
தற்போது மௌரூப் பௌசர் கேட்கின்றார், உங்கள் தோழமைகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது, கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று. கார்ள் மார்க்ஸ் (1818 – 1883) உடைய காலம் அவர் பிறந்து 200 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? முதலாளித்துவ ஊடகங்களின் பரப்புரையா என்பதே விவாதத்திற்குரியது. இப்போது உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? கார்ள் மாக்ஸின் தனிநபர் ஒழுக்கம் பற்றி கேள்வி எழுப்பும் உங்களதும் உங்கள் இணையரதும் உங்கள் சார்ந்த தோழமைகளதும் தனிநபர் ஒழுக்கம் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்? உங்கள் இணையரை கானிலிருந்து தூக்கிய பலர் ஐரோப்பாவில் குறிப்பாக லண்டனில் உள்ளனர்.
தயவு செய்து கருத்தியல் ரீதியாக மோதுங்கள். சுஜிகூலோடு இரவில் ரிக்ரொக்கில் சல்லாபித்துவிட்டு, மதியம் லாச்சப்பலில் அவரை தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டு அடித்தது போல் ரீல் விடுவதை ஒழுக்கசீலர்களான நிர்மலா – ராஜேஸ்குமார் நிறுத்த வேண்டும். புலம்பெயர் தேசத்தில் பா உ சுமந்திரனை துரோகி என்று தூசணங்களால் வசைபாடி தாக்க முற்பட்ட அதே புலிக்குட்டிகள் தான் சுஜிகூலையும் தாக்குகிறார்கள் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவர்கள் தான் யோகு அருணகிரி போன்ற அடிப்பொடிகள். நீங்கள் பழம் தின்று கொட்டைபோட்ட அன்ரி அங்கிள்ஸ் தான் அவர்களுக்கு நிலாச்சோறு ஊட்டி கதையளக்க வேண்டும். இதெல்லாம் அவர்களுக்குப் புரிய முதல் அவர்களுக்கோ உங்களுக்கோ டெமென்சியா வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கார்ள் மார்க்ஸ் மனித முரண்பாடுகளுக்கு பொருளாதாரப் பிரச்சினையே மிக முக்கியமானது என்ற கருதுகோலை முன்வைக்கின்றார். உபரியே அனைத்து அநியாயங்களுக்கும் அடிப்படை என்பதை மிகத் தெளிவாக அறுதியிட்டு கூறுகின்றார். இதனை அவர் முதலாளித்துவம் முழுமையடைய முன்னரேயே பல்தேசிய நிறுவனங்கள் என்ற கருத்தாக்கம் உருவாவதற்கு முன்னரே வரையறுத்துள்ளார். சாதியக் கட்டமைப்புகளை பொருளாதாரத்தால் மட்டும் தீர்த்துவிட முடியாது என்பது பின்நாட்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நிர்மலா ராஜசிங்கம் தனிமனித ஒழக்கம் பற்றி அண்ணாந்து படுத்துக்கொண்டு துப்பியதன் மூலம் தன்னையாரென்று மீண்டுமொருமுறை அம்பலப்படுத்தி உள்ளார்.
சாதிகள் இல்லாத தமிழ் தேசியத்தை கட்டமைத்துவிட்டோமென்று எந்த ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த கனவான்கள் ஓங்கிக் கத்தினாலும் கதறினாலும் அதற்கு எந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் தாங்களும் தாளம் போட்டாலும் ஜால்ரா போட்டாலும் கனன்றுகொண்டிருக்கும் சாதியம் நிச்சயம் இவர்களைச் சுடும். ஆனால் நிர்மலா – ராகவன் போன்ற உயர்சாதி மேட்டுக்குடிகளை வைத்துக்கொண்டு ஜனநாயகத்துக்கான சாதியத்துகு எதிரான எதையும் சாதித்துவிட முடியாது.
காசா விவகாரத்தை கையாள்வதில் இஸ்ரேலிய பிரதமர் தவறிழைக்கின்றார் என தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அவர் தவறுசெய்கின்றார் என நான் கருதுகின்றேன் அவரது அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.
காசாவிற்குள் மருந்துகள் உணவுப்பொருட்கள் முழுமையாக செல்வதற்கான அனுமதி அவசியம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலையில் மனிதாபிமான அமைப்புகளின் வாகனங்கள் தாக்கப்பட்டமை மூர்க்கத்தனமான விடயம் என பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்கள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும் அடுத்த ஆறுமுதல் எட்டு மாதங்களிற்கு அனைத்து விதமான மனிதாபிமான பொருட்களையும் அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பைடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார் எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கையிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்பே தனது வெளிவிவகார கொள்கையின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜேர்மனி தனது கடந்த கால வரலாறே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு உதவுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை ஜேர்மனி நிராகரித்துள்ளது.
ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தவேண்டும் என கோரும் வழக்கினை சர்வதேச நீதிமன்றில் நிக்கரகுவா தாக்கல் செய்துள்ளது.
இனப்படுகொலையை தடுப்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்படுவது தொடர்பான கடப்பாடுகளை ஜேர்மனி மீறிவிட்டது எனவும் நிக்கரகுவா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜேர்மனி சர்வதேசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
எங்கள் வெளிவிவகார கொள்கையில் இஸ்ரேலின் பாதுகாப்புமிக முக்கியமானதாக காணப்படுவதற்கு காரணம் எங்களின் வரலாறு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு ஜேர்மனி ஆயுதங்களையும் இராணுவதளபாடங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் நிக்கரகுவா அதன் அளவையும் நோக்கத்தையும் திரிபுபடுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி தனது கடந்தகாலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது அந்த கடந்தகாலம் மனித குலவரலாற்றில் மிகமோசமான குற்றங்களை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி ஒவ்வொரு நாளும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரியொருவர் சர்வதேச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
காஸா விவகாரத்தில் இந்தியா 4 முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் விளக்கியுள்ளார்.
காஸா விவகாரம் குறித்த விவாதம் இன்று (09) ஐ.நா. அவையில் நடைபெற்றது.
இதன்போது, காஸா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிய, ருச்சிரா காம்போஜ்,
1. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையால் மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதங்களை சந்தித்துவிட்டோம். ஏராளமான உயிர்களை அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை இழந்துவிட்டோம். பொதுமக்கள் உயிரிழந்ததை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
2. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது. அனைத்து பிணைக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் இந்தியா தரப்பில் கோரப்படுகிறது.
3. காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது. மேலும் சீரழிவை தவிர்க்க, காஸா மக்களுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும்.
4. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கான சுதந்திர நாட்டில் சுதந்திரமாக வாழ வழிசெய்யும் விதத்திலான நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்த அனைத்து உறுப்பு நாடுகளும் செயலாற்ற வேண்டும் என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறினார்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு ஒக்டோபா் மாதம் 7 ஆம் திகதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.
மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.
இதனைதொடர்ந்து, அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸா மீது இஸ்ரேலின் படையெடுப்பால் இதுவரை 32,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா்.
இஸ்ரேல் – காசா போர் ஆரம்பித்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளபோதிலும், உயிரிழக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், பசி பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காஸாவின் தென்பிராந்திய நகரான ரஃபாவில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு இஸ்ரேலிய படையினர் தயாராகின்றனர் என அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஸாவின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் தென்பிராந்திய நகரான ரஃபாவில் தங்கியியுள்ளனர்.
காஸா தென் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பேச்சாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
எனினும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் இது தொட்ரபாக கூறுகையில், ரஃபா உட்பட எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தயாராகுவற்காக கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார்.
இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார்.
ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.
காசா மீதான போர் தொடங்கி 6 மாதங்களான நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக சதுக்கம் என தற்போது அறியப்படும் பகுதியில் சுமார் 100,000 மக்கள் திரண்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் என்றே மக்கள் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர். மட்டுமின்றி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
காசாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரானது இன்றுடன் 7வது மாதத்தில் நுழைகிறது. தலைநகர் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெதன்யாகுவும் கூட்டத்தையும் வீட்டுக்கு அனுப்பாதவரை, இந்த நாடு வளர்ச்சி காண வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல் அவிவ் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும், எதிர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் டெல் அவிவ் போராட்டக்காரர்களுடன் காசா பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,170 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடிக்கு இதுவரை 33,137 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றேதெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் படைகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
காசாவில் இன்னும் 129 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று 7 ஆம் திகதி மீண்டும் களமிறங்க உள்ளனர், ஜெருசலேமில் ஒரு பேரணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாண்டில் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரி வருமானத்தை அதிகரித்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் – கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்புக்களிலேயே தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்னணியில் இவை அரசியல் களத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறியுள்ளது.
அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்டு எழுந்திருக்கும் குழப்பங்கள் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கிளை அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் மேற்கூறப்பட்ட விடயம் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் இலங்கையின் சமூக, பொருளாதார நிலைவரம், ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள், முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அடையப்பட்ட முன்னேற்றங்கள், இவ்வாண்டில் இலங்கை தொடர்பான இலக்குகள் போன்ற பல்வேறு விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தேசிய ரீதியில் முன்னுரிமைக்குரிய விடயங்களையும், நிலையான அபிவிருத்தி இலக்குகளையும் அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும், அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2023 – 2027 வரையான ஐ.நா நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்துக்கு அமைய அடையப்பட்ட முன்னேற்றங்களையும் இவ்வறிக்கை வெளிக்கொண்டுவந்திருப்பதாக இலங்கைக்காக ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரென்ச் தெரிவித்துள்ளார்.
‘2023 இல் இலங்கைக்கான எமது மனிதாபிமான உதவிகள் மீட்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி என்பவற்றை நோக்கி நிலைமாற்றமடைந்தன. அது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையையும், எமது முகவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வருடமாக அமைந்திருந்தது. சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், வறுமையைத் தணிப்பதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் வருடத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை நிலைபேறான அபிவிருத்திக்கான தேசிய இலக்கை அடைந்துகொள்வதற்கு நாம் உதவுவோம்’ எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை தொடர்பான ஐ.நாவின் வருடாந்த அறிக்கையின்படி 2023 இல் நாடளாவிய ரீதியில் சுமார் 2 இலட்சம் பேருக்கு நிதிசார் உதவிகளும், 2 மில்லியனுக்கு மேற்பட்டோருக்கு உணவுப்பொருள் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை ‘2022 இல் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த இலங்கையில் 2023 இல் மீட்சிக்கான குறிகாட்டிகள் தென்பட்டன. வெளிநாட்டுப்பணவனுப்பல்கள், சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பவற்றில் ஏற்பட்ட தொடர் அதிகரிப்பு எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியை இலகுபடுத்தியது. எவ்வாறிருப்பினும் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்தி நிலைவரம் தொடர்ந்தும் சவால் மிக்கதாகவே காணப்பட்டது’ என ஐ.நாவின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘2023 மார்ச் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நிதிநெருக்கடியைக் காரணங்காட்டி பிற்போடப்பட்டமை ஜனநாயக நிர்வாகம் தொடர்பில் கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. 2024 இல் தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து 2025 இல் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்தார். அதேபோன்று பிரதானமாக பொருளாதார கொள்கைத்தீர்மானங்களால் தூண்டப்பட்ட சில ஆர்ப்பாட்டங்கள் சட்ட அமுலாக்கப்பிரிவினரால் மிகக்கடுமையான முறையில் கையாளப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான அமைதியின்மை, குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் மக்களின் காணிகளை அடிப்படையாகக்கொண்ட குழப்பங்கள் என்பன சமூக ஒருமைப்பாடு தொடர்பில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன’ என்றும் ஐ.நா அதன் அறிக்கையில் விசனம் வெளியிட்டுள்ளது.
மேலும் ‘2023 இல் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான சட்டமூலம் என்பவற்றுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்ததுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ செயற்திட்டம் மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலுவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 இல் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் இயலுமையானது வரிவருமானத்தை விரிவுபடுத்தல், சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை வலுப்படுத்தல், நிதியியல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய செயற்திறன்மிக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இவ்வருடம் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் இவை அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான மீட்சிக்கு உதவுதல், நிலையான சமாதானத்தை உறுதிசெய்தல், ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வதற்கும், ஆட்சியியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கல், காலநிலைமாற்ற சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கே இவ்வாண்டு தாம் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக இவ்வருடாந்த அறிக்கை ஊடாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.