April

April

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுகிறது – ஐ.நா சுட்டிக்காட்டு !

காசாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பலஸ்தீன குழந்தை பாதிக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund) மற்றும் ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ( United Nations Office for the Coordination of Humanitarian Affairs) ஆகியவை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளன.

 

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் கூற்றுப்படி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு பலஸ்தீன குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது காசா சுகாதார அமைச்சகத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏப்ரல் ஒன்று முதல் வடக்கு காசா மற்றும் தெற்கு காசாவின் சில பகுதிகளுக்கு மனிதாபிமான உதவி பணிகளில் 15% இஸ்ரேலிய அதிகாரிகளால் மறுக்கப்பட்டுள்ளன அல்லது தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த புள்ளிவிவரங்கள் காசாவில் ஏற்பட்டு வரும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை குறிப்பிட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபரின் இலங்கை வருகை ஒத்திவைப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் அதிபர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கொழும்பில் உள்ள ஈரான் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் அதிபர் இலங்கைக்கு வராவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The World Press Photo of the Year – உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது !

2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர்.

 

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

 

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த படத்துக்கான விருதை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் யுத்தம், மோதல் போன்ற பகுதிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அங்கீகரிப்பது அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் சுமார் 99 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தமது இன்னுயிரை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முகமது சலேம், 39 வயதான பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர். புகைப்பட பத்திரிகையாளர். 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி திட்ட நகரத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் – மேலும் பதற்றமடையும் நிலவரம் !

இஸ்ரேல் ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

 

அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தாக்குதலை மேற்கொள்வோம் என இஸ்ரேல் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் அணுஉலைகளை தாக்கமாட்டோம் எனவும் இஸ்ரேல் அமெரிக்காவிற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தது.என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இதேவேளை; இஸ்ரேல் ஈரானில் தாக்குதலிற்கு தெரிவு செய்த இஸ்ஃபஹான் நகரம் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என முன்னாள் அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ஃபஹான்ம் நகரம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன் இஸ்ரேல் அந்த நகரத்தை தெரிவு செய்தது என்பது குறித்து அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் மார்க் கிமிட் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இஷ்பஹான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையம் என குறிப்பிட்டுள்ள அவர் பயிற்சி ஆராயச்சி மற்றும் ஈரானின் அணுசக்திதிறமையை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இந்த நகரமே பிரதானமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் – எச்சரிக்கிறது ஐ.நா !

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.

 

சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொடரும் கத்திக்குத்து பிரச்சினைகளால் பதற்றம் !

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

 

தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

 

அதன்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவமானது, தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தி குத்தியதில் 6 பேர் வரை உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்பு – இஸ்ரேலை பொறுமையை கடைப்பிடிக்க கோரும் அமெரிக்கா!

ஈரானின் தாக்குதலை தொடர்ந்து எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பபை இஸ்ரேலிய போர் அமைச்சரவையிடம் இஸ்ரேலிய அமைச்சரவை கையளித்துள்ள அதேவேளை மத்திய கிழக்கில் பாரிய யுத்தமொன்றிற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

 

நள்ளிரவில் கூடிய இஸ்ரேலிய அமைச்சரவை அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இஸ்ரேலிய பிரதமர் உட்பட மூவர் அடங்கிய போர் அமைச்சரவையிடம் ஒப்படைத்துள்ளது.

 

மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ள நிலையில் பிராந்தியத்தின் தலைவிதி அவர்களின் கரங்களில் தற்போது தங்கியுள்ளது.

யுத்த அமைச்சரவையின் கூட்டத்திற்கு முன்னரான பதற்றமான நிமிடங்களில் அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேலிய பிரதமரும் 25 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர்.

 

இந்த உரையாடலில் இஸ்ரேல் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் என பைடன் வலியுறுத்தினார் என இஸ்ரேலிய ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

 

இந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பைடன் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிவிக்கவில்லை எனினும் ஈரான் செலுத்திய ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்கள் அனைத்தும் அமெரிக்காவின் உதவியுடன் வீழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

 

மிகச்சிறந்த தற்பாதுகாப்பு திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற தெளிவான செய்தி எதிரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தாக்குதல் காரணமாக பத்துவயது சிறுவன் ஒருவன் மாத்திரமே காயமடைந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இஸ்ரேலின் பாலைவனத்தில் அந்த நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பெடோனியஸ் சமூகத்தை சேர்ந்த சிறுவன் காயமடைந்துள்ளான்.

 

தென்பகுதி இராணுவதளமொன்றும் சிறிய சேதங்களை சந்தித்துள்ளது.

 

இந்த தாக்குதலிற்கு முன்பாக ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அதன் ஏவுகணைகளால் இஸ்ரேலை நெருங்க முடியாது அவை பாலைவனத்தில் விழுந்து வெடிக்கலாம் உயிரிழப்பு ஏற்படாது என அமெரிக்க அதிகாரிகள்சரியாக கணித்திருந்தனர்.

 

அவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேல் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் இறங்ககூடாது என அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என ஊகங்கள் வெளியாகியிருந்தன.

 

ஈரான் கடுமையான பதிலடியை எதிர்பார்க்கவில்லை என்பது அது வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் புலனாகியுள்ளது-தனது பதில் தாக்குதலை தொடர்ந்து இந்த விடயம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவதாக ஈரான் ஐநாவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

எனினும் இஸ்ரேலிய பிரதமர் ஈரானின் அணுஉலைகளை அழிக்க விரும்புவார் என்பது ஈரானிற்கும் அமெரிக்காவுக்கும் நன்கு தெரிந்துள்ளது.

 

இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் என அதனை பல காலமாக கருதிவருகின்றார்.

 

எனினும் அமெரிக்காவின் உதவியின்றி அவற்றை அழிப்பது மிகவும் கடினம்.

 

எனினும் இந்த தருணத்தை பயன்படுத்தி அவரும் போர்க்குணம் மிக்க சகாக்களும் ஈரானின் அணுஉலைகளை தாக்க முயலக்கூடும்.

 

எதிர்விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ஈரானின் தாக்குதலிற்கு இஸ்ரேல் பதில்நடவடிக்கை எடுக்கலாம் என ஜோ பைடனின் அதிகாரிகள் கரிசனை கொண்டுள்ளனர் என என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல் – ஈரானிய மக்கள் கொண்டாட்டம்!

இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் முன்னொருபோதும் இல்லாத பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களிற்கு ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

 

ஆண்டவனின் வெற்றி நெருங்கிவிட்டது போன்ற பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவரும் ஈரானிய மக்கள் ஈரான் பாலஸ்தீன கொடிகளுடன் காணப்படுகின்றனர்.

டெஹ்ரானின் பாலஸதீன சதுக்கத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிற்கு மரணம் அமெரிக்காவிற்கு மரணம் என கோசம் எழுப்புகின்றனர்.

 

அடுத்த அடி மிகமோசமானதாக காணப்படும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையொன்றை டெஹ்ரான் பாலஸ்தீன சதுக்கத்தில் காணமுடிகின்றது.

ஈரான் தலைநகரில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்தின் முன்னாலும் அமெரிக்காவின் தாக்குதல் உயிரிழந்த ஈரானின் இராணுவதளபதி காசிம் சுலைமானியின் கல்லறைக்கு முன்னாலும் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.

இஸ்ரேலின் கப்பலை கைப்பற்றிய ஈரான் – தொடரும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன.

 

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் கொடியுடன் கூடிய எம்எஸ்சி ஏரீஸ் (MSC Aries) என்ற கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இது இஸ்ரேலிய பில்லியனர் இயல் ஒபர் (Eyal Ofer) மற்றும் அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் சோடியாக் குழுவின் ஒரு பகுதியான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மரைடைமுடன் தொடர்புடையது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைராவிலிருந்து வடகிழக்கே 50 கடல் மைல் (92 கிமீ) தொலைவில் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான நீர்வழிப்பாதையில் “பிராந்திய அதிகாரிகளால்” ஒரு கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) கூறியது.

நவம்பர் பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடலில் மற்றொரு இஸ்ரேலிய கொள்கலன் கப்பல் ஆளில்லா விமான தாக்குதலில் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இந்த தாக்குதலை ஈரான்நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

 

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் – அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

 

ஈரானில் இருந்தும் ஈரானுக்குள்ளும் சனிக்கிழமை வரையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில்லை என்றே லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13ம் திகதி சனிக்கிழமை வரையில் ஈரானுக்கு அல்லது ஈரானில் இருந்து எந்த முன்னெடுக்கப்படாது எனவும், விரிவான ஆய்வுக்கு பின்னரே இந்த முடிவெடுத்துள்ளதாகவும் லுஃப்தான்சா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கா உளவுத்துறை அந்த நாட்டை எச்சரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஈரான் பதிலடி அளிக்கும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அது நேரடியாகவோ ஹவுதிகள் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புகளாலோ ஈரான் முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.