24

24

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின், புளொட்டின் கடைசித்தூண் சாய்ந்தது! நியாயங்களும் அநியாயங்களும் கலந்த போராளியின் வாழ்வு!!

 

நாற்பத்தைந்தாண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் பின்னான 15 ஆண்டுகளுமாக ஒரு மூன்று தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய வரலாறு. இப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, பல்வேறு சூழ்நிலைகளில் இருந்தும் உயிர் தப்பியவர்கள் தற்போது தங்களுடைய இயற்கையான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளனர். அவர்களின் உடல்போல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று சாட்சியங்களும் எம் கண் முன்னே சாம்பலாகின்றது அல்லது மண்ணோடு மண்ணாகிப் போகின்றது. இவ்வாறு தனது இயற்கையான முடிவை இன்று சந்தித்தவர் ஆர் ஆர் எனப் பரவலாக அறியப்பட்ட ஆர் ராகவன் என்ற வேலாயுதம் நல்லநாதர். இவர் புளொட் என அறியப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர். இக்கட்சியின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவருமான இவர், இக்கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எல்லாமே ஆர் ஆர் தான். இவர் புளொட் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாவார். இவர் தன்னுடைய அறுபதுகளில் உயிரிழந்துள்ளார்.

 

இது தொடர்பான முழுமையான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…!

இந்தியா மிருகாட்சி சாலையில் சீதா மற்றும் அக்பர் என பெயருடைய ஜோடி சிங்கங்கள் – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

இந்தியாவில் சிலிகுரி மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மிருகக்காட்சி சாலையில் ஒரே பகுதியில் சீதா, அக்பர் என்ற இரு சிங்கங்களை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் விஹெச்பி தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா மிருகக்காட்சி சாலையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் மிருகக்காட்சி சாலைக்கு பெப்ரவரி 12-ம் திகதி இரண்டு சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

 

இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது.

 

மனுவில், “சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்த விஸ்வ ஹிந்து பரிஷத், “மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் இராமாயணத்தில் ஒரு பாத்திரம்.

 

மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, ‘அக்பர்’ உடன் ‘சீதா’வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது” என்று கோரியது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, “உங்களது செல்லப் பிராணிக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா?” என்று மேற்கு வங்க மாநில அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

தொடர்ந்து சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 

சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல, நானும் ஆதரிக்கவில்லை. அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடை !

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

நவால்னியின் மரணத்திற்கு பின்னர் அந்த அதிகாரிக்கு விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உக்ரைனிற்கு எதிராக ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் ரஸ்யாவிற்கு எதிராக பரந்துபட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு – தலைமறைவான தாய் கைது !

ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்ட வட்டவளை பொலிஸார் துணி ஒன்றில் சுத்தி புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

சிசுவை பெற்ற தாய் தலைமறையாகிருந்த நிலையில் அவரை கொழும்பில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அந்த பெண்ணின் கணவர், மகள் ஒருவர் மற்றும் குழி பறிக்க உதவிய பக்கத்து வீட்டுக்காரரையும் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த தாய் டயகம பிரதேசத்தை சேர்ந்த (37) வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது.

 

இந்நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சிசு முறைக்கேடாக பெற்றெடுக்கப்பட்ட சிசுவா? சிசு பிறந்தவுடன் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பகுதியில் குழி பறித்து புதைக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.

 

அதேநேரத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சிசு புதைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், மீட்கப்பட்ட சிசுவின் உடல் பாகங்கள் உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் 62 வயதுடைய சந்தேகநபர் தற்கொலை !

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவராவார்.

பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி குறித்த சந்தேக நபரின் அயல் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. சம்பவத்தின் போது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் , சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் சிறுமியிடம் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்த நிலையில் தாய் அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் உயிரிழந்த சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சாகோதரியையும் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை தமிழர்களை நாடு கடத்தியது சீனா !

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெற்று கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்த இவர்கள் இருவரும் மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

 

கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி மலேஷியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” என்ற கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் குறித்த இருவரும் இரகசியமாக நுழைந்துள்ளனர்.

 

ஆனால் குறித்த கப்பல் மலேஷியாவை சென்றடைந்தபோது, அந்த கொள்கலனில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களையும் ஏற்றுக்கொள்ள மலேஷியா மறுத்த நிலையில் சந்தேக நபர்களுடன் குறித்த கப்பல் சீனாவை சென்றடைந்தபோது சீன அதிகாரிகள் இவர்களை் இருவரையும் கைது செய்தனர்.

 

26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தர்மராசா ஆகிய இரு இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர்.

கஞ்சா பாவித்த பொலிஸ் அதிகாரிக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணை!

புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்தார்.

 

கல்பிட்டி – அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

 

கடந்த 22 ஆம் திகதி மாலை ஏத்தாலை – ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக நுரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

 

அந்த தகவலின் பிரகாரம் 7 சந்தேகநபர்கள் நுரச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.

 

பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 7 சந்தேக நபர்களும் 23 ஆம் திகதி மாலை கல்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

இதனை அடுத்து சந்தேகநபர்கள் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஒரே ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

 

கடந்த வருடம் 10,69,000 மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக தலைவர் வலேபொட தெரிவித்தார்.

 

இணைப்பு துண்டிக்கப்பட்ட நுகர்வோருக்கு, மறு இணைப்பு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து, நிலுவையில் உள்ள பில் தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு, அந்தந்த அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

 

மேலும் கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB), நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.