04

04

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலை வரவேற்கும் அவுஸ்திரேலியா!

யேமனின் ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.

செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் பதற்றத்தை குறைப்பதும் அந்தபகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுமே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஹெளத்திகிளர்ச்சி குழுக்களின் தலைமைக்கு எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகமுக்கியமான கடல்பாதையில் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உயிர்களை நாங்கள் பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடியது மகிழ்வளிக்கிறது – சரத்வீரசேகர மகிழ்ச்சி!

தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று(4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என தெரிவித்தார்.

 

கொழும்பில் பதுங்கியிருந்த யாழ் வாள்வெட்டு ஆவா குழுவின் தலைவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 

வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம காவல்துறை பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மவுண்ட் யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் தங்கியிருந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் அந்தப் பகுதியில் தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்தறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகியிருந்த அவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 1 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்!

காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

 

சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.

 

இராணுவ அணிவகுப்புக்குப் பின்னரான வழமையான கலாசார அணிவகுப்பு இம்முறை இடம்பெறாததுடன், இலங்கையின் சகல கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய சுதந்திர விழாவில் குறுகிய கலாசார அணிவகுப்பு மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை பாரிய பேசுபொருளாகிய நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 76வது சுதந்திர தினதந்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி !

இலங்கையின் 76வது சுதந்திர தினமான இன்று (04) யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மக்களும் வெளி மாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

 

யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி வைத்தியசாலை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.

 

நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கரவண்டி பவனி முதலியனவும் இந்த பேரணியில் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிஸ் தாக்குதல்- நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடங்கி பலர் மீது தாக்குதல் – 5 பல்கலைக்கழக மாணவர்கள் கைது !

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

 

இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.

 

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமித்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். அத்துடன் பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தசாப்தங்களாக தொடரும் இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

 

தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.

 

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியிருந்தனர்.

 

இதனையடுத்து பொலிசாரால் தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகை என்பன போராட்டக் காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டக்காரர்கள் மீதும் பொலிசாரால் மிலேச்த்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

அத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது பொலிசாரல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனைதொடர்ந்து கைதுசெய்யபட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டமானது நான்கு மணிநேரமாக இடம்பெற்றதுடன் இருதரப்புக்களின் இணக்கப்பாட்டையடுத்து

 

பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.