18

18

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்று ஏன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடாது..? – கஜேந்திரகுமாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ” நான் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன். சிலர் அதனை மறுக்கின்றனர்.” என்றார்

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ”நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள். உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள்” என்றார்.

இதன் போது பதில் அளித்த டக்ளஸ் , ”இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும்.

நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சினை தீரப்போவதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன்.” என்றார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் !

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.

எனினும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதிக படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.”என்றார்.

வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் திறன்மிக்க இலங்கையர்கள் – இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை !

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கணிக்கப்பட்ட அளவை விட குறையும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பதனால் இந்த நிலை ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.

தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி, குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பொருளாதாரம் படிப்படியாக அதிக வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடுமை – இந்தியாவில் சம்பவம் !

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துஇ அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான தேர்தலை மீண்டும் நடாத்த தயாராக உள்ளேன் – சிவஞானம் சிறீதரன்

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி உட்பட கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கான புதிய தெரிவுகள் அனைத்தையும் மீள நடத்துவதற்கு தயாராக உள்ளேன் என்று அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு உள்ளிட்ட தெரிவுகளுக்கு எதிராகவும், நாளை 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 17ஆவது தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அடுத்து இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தகட்டமாக எவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள என்பது தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

75வருட கால அரசியல் பாரம்பரியத்தினைக் கொண்ட தமிழரசுக்கட்சிக்கு எதிராக தற்போது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக கட்சி அதனை முறையாக கையாளுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ன.

அதேநேரம், கட்சியின் நிருவாகம் தொடர்பில் புதிய தெரிவுகள் இடம்பெற்றுள்ளமையானது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.  என்னைப்பொறுத்தவரையில், எனது தலைமைத்தெரிவு உட்பட கட்சியின் அனைத்து பதவி நிலைகளுக்கான புதிய தெரிவுகளையும் மீளவும் செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

விசேடமாக கட்சியின் மூலக்கிளை தெரிவுகளில் இருந்து அனைத்தும் மீள நடைபெறுவதாக இருந்தால் கூட அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

மேலும், தற்போது புதிய தெரிவுகள் சம்பந்தமான விடயங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளன. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானித்தினைப் பின்பற்றுவதற்கும் நான் தயாராக உள்ளேன்.  விசேடமாக, நீதிமன்றம் தெரிவுகள் தவறாக இருக்கின்றன என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுமாக இருந்தால் நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் அதனை மீளச் செய்வதில் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.

எவ்வாறானினும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், எதிராகவும் பல சூழ்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த சூழ்ச்சிகள் பற்றி புரிதல்களும் எமக்கு தெளிவாக உள்ளன.

எனவே, அனைத்து தடைகளையும் முறையாக கையாண்டு அவற்றை கடந்து எமது பாரம்பரிய அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

யாழில் இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பாக சுமார் 250 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை, கடத்திச் சென்றமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் !

தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 5 ஏகே 47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். . இதையடுத்து இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும் இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மேலும்  விசாரணையில் இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதுதெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது

குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும் ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்ததாக என்ஐ ஏ தெரிவித்திருந்தது.

இதையடுத்து 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார்.

போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது இலங்கையை சேர்ந்த குணசேகரன் அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். என என்ஐஏ தெரிவித்துள்ளது

வலிகாமம் வடக்கில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலத்தை விடுவிக்கமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு, இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ப்பட்டபோதே ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிலையில், 300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.