ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவலடையும் கத்தி குத்து கலாச்சாரம் – பாரிஸில் அதிகாலையில் நடந்த துயரம் !
பிரான்ஸின் பாரிஸில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தின் போது ஒருவர் வயிற்றில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இத்தாலிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்ததாகவும் மாலி நாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பாரிஸில் பல இடங்களில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. டிசம்பரில், ஈபிள் டவர் அருகே சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தலைநகர் கரே டு நோர்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
இதேவேளை இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கத்தி குத்து கலாச்சாரம் மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிவதுடன் இந்த வருடம் 2024 ஜனவரி 8ஆம் திகதி ஞானேஸ்வரன் அனோஜன் என்ற தமிழ் இளைஞன் லண்டனில் ஸாரோபரி கில் புகையிரத நிலையத்தில் வைத்து கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.