13

13

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒரே ஆண்டில் 47 குழந்தைகள் மரணம்!

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில்   47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 10 52 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் , அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் – இந்திய மத்திய அரசு அறிவிப்பு!

ராஜீவ்காந்தி கொலைதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சிசிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது இலங்கை அரசாங்கம் அனுப்பியஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி !

8 ஆம் வகுப்பு முதல் முன்னோடி திட்டமாக பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஒக்டோபர் 2 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளில் AI இன் அறிமுகத்திற்கான முன்மொழிவு கல்வி முறையில் ஒரு தீவிர மாற்றமாக இருக்கும், மேலும் குழந்தைகளை எதிர்காலத்தில் விடுவிக்க உதவும்.

AI தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி முன்மொழியப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது பொருத்தமானது.

மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுக் கல்வியில் AI படிப்புகளை அறிமுகப்படுத்த ஒரு பைலட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைக்ரோசாப்டின் ஆதரவுடன் மேற்படி முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் சர்வதேச பாடத்திட்டத்தை திருத்தியமைத்து, தேவையான அடிப்படை மனித வளங்கள் உள்ள பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பிலிருந்து முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. .

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளின் கீழ் முன்னோடி திட்டத்திற்கு பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தெரிவு செய்யப்பட்டால், 100 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர்களை பயிற்றுவிப்பாளர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தினமும் 400 பேர் சிறைக்கு செல்கின்றனர் !

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிர்வகித்து கைதிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

500 ஏக்கரை சுவீகரிக்க விமான போக்குவரத்து அதிகார சபை முயற்சி – போராட்டத்தில் இறங்கிய மக்கள் !

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களிலிருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி திங்கட்கிழமை (12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது.

இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் வாய்மூடி மௌனியாக இருக்கின்றார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெறுகின்றது என அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தையடுத்து நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. – ஜீ.எல்.பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது, செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானதொரு செயற்பாடு.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகங்களினதும்,ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சட்டவிரோதமானது.இந்த சட்டத்தை சாதாண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமாயின் பெரும்பாலான ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும்,அவ்வாறு இல்லையெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மிக தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் ஐந்து முக்கிய திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கும்,சபாநாயகருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

இலங்கையிக் புகழ்பெற்ற நீதியரசரான மார்க் பெர்னான்டோ, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘சபாநாயகரால் சான்றுரைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு அமைவானதாக அமையாவிடின்  அவ்வாறான சட்டங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காது’ என தெளிவாக வாதிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது,செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல ந்டவடிக்கைகளும் சட்டவிரோதமானது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படு;த்துவேன்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கையின் மனித உரிமைகளை சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு மத்தியில்  சிறந்த மாற்றத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றார்.