05

05

மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி லடாக் மக்கள் போராட்டம் !

இந்தியாவின்  லடாக் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். சனிக்கிழமை அன்று அங்கு முழு அடைப்பு காரணமாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகவும் சென்றனர்.

அரசியலமைப்பு பாதுகாப்பு கலாச்சார சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மீண்டும் மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் லே நகரில் கூடி போராட்டம் மேற்கொண்டனர். லே அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

சீனாவை ஒட்டிய பகுதியில் வசித்து வரும் லடாக் பகுதியை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். லடாக் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான இந்தக் குழுஇ தனது முதல் கூட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நடத்தியது. அடுத்த கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் மேற்கொள்வது வருவது வழக்கமாக உள்ளது.

கடந்த 2019இ ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370-ம் பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி நள்ளிரவில் அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனை !

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த எழுத்தாளர் யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அவுஸ்ரேலியர்களும் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர்.

எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யாங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டதனால் அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன.

2019ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்து இவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளதாகவும் 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

2023இல் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் கைதானவர்கள் பொலிஸ் அதிகாரிகளே..!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த வருடம் இலஞ்சம்,  ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸ் அதிகாரிகள் என்றும்   தெரிவித்துள்ளது.

இந்த  முறைப்பாடுகளில் 2,789 முறைப்பாடுகள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த  அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கொழும்பு ஐ.நா அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம் !

காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (05) பதாதைகளை ஏந்திக்கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் தமது பதாதைகளில் ஏந்தியிருந்தனர்.

ஜக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும் கடமைப்பட்டுள்ளது  எனக்குறிப்பிட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கொழும்பு நகரசபை முன்னாள் உறுப்பினர்களான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான், எஸ்.எம். முஸம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டு மகஜர்களையும் கையளித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவனை இரகசிய அறையில் வைத்து தலைகீழாக தூக்கி ஆணுறுப்பை இலக்குவைத்து அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய பொலிஸார்- தொடரும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாக தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் , பல்கலைக்கழக மாணவனான கருணாகரன் நிதர்சன் எனும் மாணவன் இன்று திங்கட்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை வழிமறித்து , தான் மறிக்கும் போது ஏன் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என என்னுடன் முரண்பட்டார்.

அதற்கு நான் நீங்கள் மறித்ததை கவனிக்கவில்லை. என கூறி, ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன, என அவற்றை எடுத்து கொடுத்த போது, அதனை வாங்காது, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைத்தார்.

அதன் போது, சிவில் உடையில் வந்த 7க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் , எவ்வித விசாரணைகளும் இன்றி, என்னை வீதியில் வைத்து, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கடுமையாக தாக்கினார்கள். என்னை தாக்கும் சம்பவம் அருகில் உள்ள கடையில் கண்காணிப்பு கமராக்களில் கூட பதிவாகியுள்ளது. அத்துடன் நானும் எனது கைபேசியில் என்னை தாக்குவதனை காணொளி எடுத்தேன்.

பின்னர் என்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றி சென்று, பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறைக்குள் என்னை அழைத்து சென்று என்னுடைய ஆவணங்கள் , மற்றும் கைபேசி என்பவற்றை பறித்தார்கள்.

கைபேசியின் இரகசிய குறியீட்டை கேட்ட போது , அதனை தர முடியாது என மறுத்த போது, என் கால்களை பிடித்து தலைகீழாக தூக்கி கடுமையாக தாக்கினார்கள்.

என் ஆணுறுப்பை குறிவைத்தும் கடுமையாக தாக்கினார்கள். இதனால் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வியர்க்க தொடங்கியது.

அதனை அடுத்து என்னை அறையில் இருந்து, வெளியே அழைத்து வந்து, கதிரையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள்.

பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி வந்தேன். என்னை பொலிஸாரின் இரகசிய அறைக்குள் அழைத்து சென்றதனை, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் நேற்றைய தினம் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவர் கண்கள் கண்டார்கள்.

அறைக்குள் வைத்து, அடிக்கும் போது, நான் எழுப்பிய அவலக்குரல் அவர்களுக்கும் கேட்டு இருக்கும். அடித்த பின்னர் என்னை கைத்தாங்கலாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அழைத்து வந்து கதிரையில் அமர வைத்ததையும் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மூவரும் நேரில் கண்டார்கள்.

எவ்வித குற்றமும் இழைக்காத என்னை சிவில் உடை தரித்த பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். என்னை கொலை செய்யும் நோக்குடன் என் ஆணுறுப்பை குறித்து வைத்தும் தாக்கினார்கள்.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளமையால் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாரினால், கடுமையான சித்திரவதைக்கு உள்ளான நகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த உயிரிழப்பானது ஆட்கொலையே என யாழ்.நீதவான் நீதிமன்றம் மரண விசாரணை கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

இளைஞனின் கொலை தொடர்பில் நேரடி சாட்சியான, இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன், சித்திரவதைக்கு தம்மை உள்ளாக்கியவர்கள் ஐவர் என அடையாளம் கூறிய போதிலும், பொலிஸார் நால்வரையே கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம், சுன்னாகம் பொலிஸாரினால் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகிய நிலையில், கைதான இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

அச்சுவேலி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, விசாரணைக்கு செல்லாத இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வீதியில் வழிமறித்து கடுமையாக தாக்கியமையால், இளைஞன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் பொலிஸார் மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் டக்ளஸ் !

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.