15

15

தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த யாழ். மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு !

எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம், தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த பீட்டர் இளஞ்செழியன் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தேசிய மாநாடு நடத்துவதாயின், 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாடு 21 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படாததால், குறித்த மாநாட்டுக்கு தடை கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு மீதான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதேவேளை, திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மா. கணேசராஜா இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

05 பேர் கொண்ட நிர்வாக சபையின் தெரிவுகள், யாப்பின் படி இடம்பெறவில்லை என்பதால், மாநாட்டை நடத்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரால் கோரப்பட்டிருந்தது.

குறுகிய கால இடைவெளியில் சுமார் விவாகரத்து வழக்குகள்!

சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்திக்கு பதிலளிக்காத பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது !

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட  பிரதேச   பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவருக்கு  தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில்  அதே பாடசாலையின்  ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு கற்கும்  மூன்று மாணவிகள் மீது தொல்லைகளைப் பிரயோகிக் முயற்சித்ததாகவும் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்காததால், வகுப்பறையில் அமர்ந்திருந்த அந்த  மாணவிகள் மீது தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகித்தால் சம்பந்தப்பட்ட மாணவிகள் வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சந்தன கமகேவின் உத்தரவில்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் இலங்கை விமானப்படை!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள 73 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவு தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

 

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நட்புறவின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் பல விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

குறிப்பாக களனி ரஜமகா விகாரையில் விசேட பூஜைகள் மற்றும் சர்வ சமய சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, 73வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

இந்த வருடமும் விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படையின் மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க, தரமான கல்வி மற்றும் சுற்றாடல் பேண்தகைமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வடக்கு மாகாணத்தில் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ள 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன.

 

குறித்த பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக 100 மில்லியன் ரூபா நிதி மதிப்பிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் மார்ச் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் தொழில்நுட்ப, கல்வி கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கை விமானப்படையின் விமானங்கள், வளங்களின் கண்காட்சி மற்றும் விமானப்படையின் பணிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி பற்றிய விழிப்புணர்வும் இடம்பெறவுள்ளது.

 

இந்த கண்காட்சியில் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களின் புத்தாக்க உபகரணங்களை காட்சிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பாடசாலை மாணவர்களுக்காக இக்கண்காட்சி முற்றாக இலவசமாக இடம்பெறுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மூன்று சர்வதேச பல்கலைக்கழகங்கள்!

கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும்.

கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம்.

விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு தற்காலிக கடவுச்சீட்டு !

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகரகத்தினால் குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர், சாந்தன் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் எகிறும் முறைப்பாடுகள் – பாதுகாப்பற்ற நிலையில் இலங்கை சிறார்கள்!

2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் துஷ்பிரயோகம் தொடர்பில் 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக முறைபாடுகளை விட 2023 ஆம் ஆண்டு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற சாரதிகளும் விதிமுறைகளை பின்பற்ற தவறும் மக்களும் – வடக்கில் அதிகரிக்கும் வீதி விபத்து உயிரிழப்புகள் !

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இப் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினம் அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறித்த விபத்து நேற்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சமிக்கை விளக்கை ஒளிரவிட்டு திரும்புகையில், அதே திசையில் பயணித்த பேருந்து மோதியுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பகுதியில் நெல் காயப்போட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வந்த வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தொடரும் பேருந்து மற்றும் வாகன விபத்துக்களில் மக்களின் அவதானமின்மையும் – சாரதிகளின் பொறுப்பற்ற தன்மையுமே காரணம் என பொலிஸார் தெரிவிப்பதுடன் யாழ்ப்பாணத்தில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டதற்காக தினசரி நூறு தொடங்கி இருநூறு முறைப்பாடுகள் பதிவாவதாக கடந்த வருடம் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.