17

17

அபேக்க்ஷ வைத்தியசாலைக்கு நன்கொடையாக 5 இலட்சம் அமெரிக்க டொலர் – இலங்கை கிரிக்கெட் சங்கம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மற்றும் ஆசிய கிண்ணம் பெற்ற வீரர்கள், வலைப்பந்து சம்பியன்களான வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 2 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அத்துடன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு நிதியில் இருந்து 25 சதவீதத்தை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அபேக்க்ஷ வைத்தியசாலைக்கு நன்கொடையாக 5 இலட்சம் அமெரிக்க டொலர் காசோலையை இலங்கை கிரிக்கெட் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இலங்கை பெண் தொழிலாளர்கள் – ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அறிக்கையிட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகராகவே பெண்களும் சம்பளம் பெறுகின்றனர்.  அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையாகும். எனினும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் காரணமாக முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை விடயத்தையும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கையின் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளில் கூட ஜனநாயகம் இல்லை.”- மஹிந்த தேசப்பிரிய

“குடும்ப அரசியல் இருக்கும் வரை இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அமைப்பு மாற்றத்தை அடைய முடியாது.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வரை எதிலும் ஜனநாயகம் இல்லை. இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவாக தமது அரசியல் நோக்கங்களை அடைய முடியாதுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளது. கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் சலுகைகளை வழங்குகிறது. அவர்கள் ஏற்கனவே அரசியல் குடும்பங்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கவில்லை.  ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த போக்கு தொடரும் வரை, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அமைப்பு மாற்றத்தை அடைய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புலிகளின் புதையலை வடக்கில் தேடிக்கொண்டிருக்கும் அரசு – கொழும்பிலிருந்து வந்த கனரக வாகனங்கள் !

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் புலிகளின் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து புதையலை அகழ்வதற்கான அனுமதியினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரியிருந்தனர்.

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை புதையல் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்துள்ளதாகவும், அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.