June

June

சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு ஈரானில் மரண தண்டனை

ஈரானில் கைது செய்யப்பட்ட சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சுன்னி ஆயுதக் குழுத் தலைவர் அப்டொல்மாலிக் ரெஜி கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்டொல்மாலிக் ரெஜி, ஜூன்டல்லாஹ் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக கடமை யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் ரெஜிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பலுகிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் ரெஜிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முகவராக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக ரெஜியின் சகோதரருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. எவ்வாறெனினும், ஜூன்டல்லாஹ் அமைப்புடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஊடகவியல்: ரூபன் மரியாம்பிள்ளையின் ஊடகவியல் நூல்கள் ஒரு அறிமுகம் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Rubanmariam_Pillai இக்கட்டுரை ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965,ல் தன் ஆரம்பக் கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972ல் தன் உயர் கல்வியையும் பெற்றவர்.

கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியில் 1982லும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984லும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். 1979ஆம் ஆண்டு மௌன ஊர்வலம் என்ற பாதுகாவலன் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை மூலம் பத்திரிகைத்துறைக்கு அறிமுகமானவர் இவர். அன்றிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார், யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட வரலாறு கொண்ட பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் பாதுகாவலன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோதே அப்பத்திரிகை 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்புக்கொண்ட தமிழ்ப் பத்திரிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈழநாடு, முரசொலி, போன்ற பத்திரிகைகளில் தவக்காலச் சிந்தனைகள் என்ற பகுதியின் வழியாக அறிமுகமான இவர் ஈழநாடு பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். நான் என்ற உளவியல் சஞ்சிகை, இறையியல் கோலங்கள், புதிய உலகம், மற்றும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தொண்டன் போன்றவற்றிலும் இவரது பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உதயன் பத்திரிகையில் ஏறக்குறைய 30க்கும் அதிகமான சமயக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் சான்றிதழ் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், பின்னர் தன் பத்திரிகைத் துறைக்கான பட்டப்பின் படிப்பையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர்.

தற்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் ஊடகத்துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான உயர் ஆய்வினை இங்கிலாந்தின் Sheffield ஹாலம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கல்விசார் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகக் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்.

யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் நினைவாக, Bishop Savundram Media Centre என்ற பத்திரிகையியல் கல்வி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் 2000ம் ஆண்டில் உருவாக்கி இன்றுவரை இயக்கியும் வருகின்றார். இத்தகைய ஊடகவியல் பின்னணியில் இவர் எமக்கு வழங்கியுள்ள கனதியான நூல்களைப் பற்றிய தகவல்களை உள்ளே காணலாம். Pirasurakalam_5June2010

இவ்விதழில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக விற்பனை செய்ய அதன் ஆசிரியர் முன்வந்துள்ளார். எட்டு நூல்களையும் பெற விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: செல்வராஜா (0044) 07817402704 selvan@ntlworld.com Single copy £ 10.00 Set Price £ 60.00 (Postage included).

யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா.தலையிடக் கூடாது – யசூஸி அகாஸி

ya.jpgஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க உத்தேசித்துள்ள குழுவானது இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும். எனினும் உள்நாட்டு விவகாரங்களில் அது (ஐ.நா) தலையிடக்கூடாதென இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஸி அகாஸி தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள இத்தகைய குழு பிரயோசனம் உள்ளதாக இருக்க முடியுமெனக் குறிப்பிட்ட அவர், அக்குழு இலங்கையின் அபிவிருத்தி மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைக்க முடியுமெனவும் தெரிவித்தார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர். இம்முறை நாம் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயத்தின்போது பல சாதகமான மாறுதல்களை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்த தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் சில நாடுகள் அதனை நேரில் கண்டு உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று நாடுதிரும்ப முன்னர் அவர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி இங்கு மேலும் குறிப்பிடுகையில்; ஐ.நா செயலாளர் நாயகத்திற்கென நியமிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான குழு இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு தமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும். எனினும் அந்த நல்லிணக்கக் குழுவின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. இம்முறை விஜயத்தின்போது நான் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன். தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வொன்று சம்பந்த மாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கில் மீள்குடியேற்றம் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர்கள் தெளிவுபடுத்தினர். குறிப்பாக வடக்கில் பெருமளவு இராணுவத்தினர் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் சகல இன, மத மக்களும் சுபீட்சமாகவும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் இலங்கையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையில் தற்போது பல சாதகமான மாற்றங்களைக் காணமுடிகிறது. அபிவிருத்தி உட்பட பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் அதற்கான உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஜப்பானும் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமது பூரண ஆதரவினையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கும்.

ஜப்பானிய அரசாங்கம் இவ்வருடத்திற்கென 39 பில்லியன் யென்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்குகிறது. நாட்டின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு முக்கிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மத்திய மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களின் குடிநீர்த்திட்டங்கள், யாழ். போதனா வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் மேல் கொத்மலை திட்டங்களின் புனரமைப்புக்கும் இந்நிதி செலவிடப்படவுள்ளன.

இலங்கை பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு தற்போது முன்னேற்றகரமானதும் சாத்தியமானதுமான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை வெறுமனே விமர்சிப்பது முறையல்ல. இடம்பெற்று வரும் மாறுதல்களை நேரில் கண்டு அவை பற்றி பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது நிலவும் சிறந்த சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் ஜப்பான் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அகாஸி; இவ்விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்படுகிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதனால் அதனூடாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். நிலைமைகள் சீரடைந்து வருவதால் அரசாங்கம் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள்

உலகின் பிரதான நகரங்கள் பலவற்றில் நடத்தப்பட்டுவரும் ‘புத்த பா’ என்ற உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள் தொடர்பாக கவனம் செலுத்த புத்த சாசன அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தி. மு. ஜயரத்ன தீர்மானித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட உணவு விடுதிகள் தொடர்பாக அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகருக்கு அறிவுறுத்துவதுடன் அது பற்றிய அறிக்கையொன்றை அனுப்புமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. ‘புத்த பா’ உணவு விடுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதுடன் அந்த சிலைகளுக்கு அருகில் மதுபாவனை இடம்பெறுகிறது.

இவ்வாறான விடுதிகளில் புத்தர் சிலைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும், அந்த இடங்களில் உள்ள புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்ட நாடுகளுக்கு ஆலோசனை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கோவையில் நடைபெறுகிறது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.  முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடுகள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளன்று முக்கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாதனங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர்.

முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந்தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலைமையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துச் செல்கின்றன – கொபி அனான்

இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார். அவர் இனப்படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.

வன்னி மாவட்ட அரச அதிபர்களுக்கு அகாஸி பாராட்டு

acasi.jpgமீள் குடியேற்றம் உட்பட வன்னிப் பகுதியில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அம்மாவட்டங்களிலுள்ள பெண் அரச அதிபர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜப்பானிய விசேட தூதுவர் யசூகி அகாஸி பாராட்டினார்.

3 வயது, 5 வயது, 8 வயது: ஒரே குடும்பம் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகள் கண்டுபிடிப்பு

குடும்பஸ்தர்களினால் கைவிடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளை ரங்கலை பொலிஸாரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெல்தெனிய பொலிஸ் பிரிவிலுள்ள தெல்தெனிய – தங்கபுவ எனும் பிரதேசத்தில் வைத்து இக்குழந்தைகள் மூவரும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளும் ஒற்றரை நாட்களாக பசியுடன் இருந்த நிலையிலே பொலிஸார் கண்டெடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3, 5, 8 வயதுகளைக் கொண்டு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளுமே தமது பெற்றோரினால் கைவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மலையக மக்கள் முன்னணியின் புதிய தலைவராக இராதாகிருஷ்ணன்?

rada.gifஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர்  வி.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை உறுதிப்படுத்திய வி.எஸ். இராதாகிருஷ்ணன், இது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான பி.சந்திரசேகரனின் மறைவை அடுத்து அவரின் மனைவி சாந்தி சந்திரசேகரன் தலைமை பதவியை பொறுப்பேற்றார். எனினும், மலையக மக்கள் முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு தற்போது சாந்தி சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.