உலகத் தமிழ் செம்மொழி மாநாடு; கோவை நகரம் விழாக்கோலம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை கோவையில் நடைபெறுகிறது. இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார்.  முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடுகள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் தொடக்க நாளன்று முக்கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது.

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாதனங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர்.

முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந்தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலைமையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *