28

28

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

பொது இணக்கப்பாட்டிற்கு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஈ.பி.டி.பி அழைப்பு!

TamilPartys_Meeting_24thJune10தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்று (June 27 2010) தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் பொது இணக்கப்பாட்டிற்கான சந்திப்பு ஒன்றை கொழம்பில்  மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related News:  இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.

வாள்வெட்டில் கணவன் மனைவி படுகாயம். யாழ். கொக்குவில் பகுதியில் சம்பவம்!

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு (June 27 2010) 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர்  வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை வாளால் வெட்டிவிட்டு சென்றுள்ளனர்.

மண்கும்பானைச் சேர்ந்த ப.சாந்தலிங்கம், (வயது60) அவரது மனைவி (வயது 44) ஆகியோரே வாள்வெட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை, நேற்றிரவு மது போதையினால் ஏற்பட்ட வாகன  விபத்து மற்றும், குழு மோதல்களினால் காயமடைந்த  7பேர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகலில் இடம்பெற்ற விபத்தில் யாழ். சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர்.

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வந்து திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்று குருநாகல் கிரியேல்ல பகுதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலியானவர்கள் காயப்பட்டவர்கள் அனைவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (June 27 2010) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருநாகலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியவர்களுக்கே வழியில் இக்கதி ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து வடபகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களை ஏ-9 வீதியில் தற்போது அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். நாடகக் கலைஞர்கள் கௌரவிப்பு!

நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தமைக்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு செம்மணி வீதியுள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்றது.

எஸ்.திருநாவுக்கரசு, பிரான்சிஸ் யூல்ஸ் கொலின், மரியாம்பிள்ளை, பொனிபஸ், தைரியநாதன், கேசுறி பிலிப் பேர்மினஸ், கந்தையா நாகப்பு, நவாலியூர் என். செல்லத்துரை, சரவணமுத்து சந்திரா, முருகேசு சிவப்பிரகாசம் அகியோரும், திருமறைக்கலாமன்றம், செயற்திறன் அரங்க இயக்கம், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் வெறுவெளி அரங்கக் குழு ஆகிய அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டன.

கிளிநொச்சி சீனித் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முயற்சி!

SugarCaneகிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் கிராமத்தில் இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் காரணமாக இத்தொழிற்சாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இத்தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. முன்னர் இத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை அண்டிய 100 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இவையும் தற்போது அழிக்கப்பட்டு விட்டன. இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்கினால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிட்டக்கூடிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழிற்சாலை கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.