27

27

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்படுவதாக சந்தேகம்!

LTTE LOGOபோரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றவர்கள் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின்ர் விசாரணைகளை நடத்தியும் வருகின்றனர்.

அண்மையில் மாத்தறைப் பகுதியில் பிச்சைக்காரர் தோற்றத்தில் நடமாடிய  விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நபரான ஈஸ்வரன் சந்திரகுமாரன் என்பவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், முல்லைத்தீவில்  கடும் பயிற்சி பெற்றவர் எனவும், விடுதலைப் புலிகளின் தலைவர் சார்ள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் தலைமையிலானதல்ல. சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகளின் கணனி தொழில் நுட்பப்பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

kp.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 26 பேர் நேற்று கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் சிபார்சின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். குமரன் பத்மநாதன் வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என வெளியான தகவல்களையடுத்து அவரைக்கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதி வவுனியா தடுப்பு முகாம்களுக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கபட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பார்வையிட்டு தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆதரவைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் விடுவிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்கு மேற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரரான மூர்த்தி எனபவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. மூர்த்தி தனது சகோதரனான தமிழ்செல்வனின் அரசியல் நடவடிக்கைகளில் முரண்பாடுடையவராக இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

”வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் குடியேற்றங்கள் அமைக்கப்படும்” ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதி!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படும் எனவும் இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொஸன் தினமான நேற்று கண்டி மல்வத்த அஸ்கிரிய பிடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்ற இராணுவத்தளபதி இத்தகவலை அவர்களிடம் தெரிவித்துள்ளார். படையினருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும்,  அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு தொகுதி மக்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

போரினால் இடம் பெயர்ந்து வவனியா மாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் முல்லை மாவட்டதைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நாளை (28-06-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவுள்ளனர். 195 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேர் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை!

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு மக்களின் பயன்தரு மரங்களை இக்காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகின்றன.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பொதுமக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்த வந்ததாகவும் தற்போது மீண்டும் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘யார் இந்த கே.பி?’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி

Anandasangaree Vஅரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?

யுத்தம் முடிந்த பின் நாட்டின் புனர்நிர்மாணம், மீளக்கட்டியெழுப்புதல் போன்றவகைகளுக்கு அரசுக்கு உதவ முன்னைநாள் போராளிகளின் அனுதாபிகள் புத்திஜீவிகள் முன்வந்துள்ளதாகிய செய்தி வெறும் கேலிக் கூத்தாகும். யார் இந்த கே.பி என அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர்? அவருக்குரிய நன்மதிப்பு தராதரம் என்ன? பிற நாடுகளில் இருந்து தூது குழுவாக வருகை தந்து அரச உயர் அதிகாரிகளுடன் பேசி நாட்டின் புனர்வாழ்வு மீள் கட்டுமானப் பணிகளுக்கு உதவ வந்துள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்?. சர்வதேச அரங்கில் பிரசித்தி பெற்ற பெயர் போன பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட கே.பி.யின் தலைமையில் இக் குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் வெளிவிகார அமைச்சரையும் சந்தித்துள்ளது என்ற செய்தி எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அனேகமாக முழு இலங்கையருக்கு அதிர்ச்சியும் தந்துள்ளது.

திரு.பிரபாகரன் மரணித்த உடன் அவரின் வாரிசாக உரிமை கோரிக்கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொண்ட திரு. கே.பி அவர்கள் அதிகாரிகளிடம் தானாக சரணடையவில்லை. மிக்க தந்திரமான முறையில் அவர்கள் கைது செய்யப்படாதிருந்தால் இன்று அவர் கடந்த காலத்தில் திரு. பிரபாகரன் யார் யாருக்கு அச்சுறுத்தலாக இருந்தாரோ அத்தனைபேருக்கும் இவர் அச்சுறுத்தலாக இருந்திருப்பர். இப்போது கூட அவர் எதிர் காலத்தில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. அரசுக்கு அதன் புனர்நிர்மாண மீள் கட்டுமாண பணிகளுக்கு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து உதவ முன்வந்துள்ள தூது குழுவில் இடம் பெற்றுள்ள புத்திஜீவிகளாக வர்ணிக்கப்படும் இவர்கள் யார்? சரிபிழைகளை ஆராய்ந்து அறிவை வளர்ப்பவரே புத்திஜீவியாவார். ஆனால் இந்த புத்திஜீவிகள் என்ன செய்தார்கள். சரிபிழைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கிறதா?

சிறிய அபிப்பிராய பேதங்களுக்கு நாம் இடம் கொடுக்கப்படாது. பல கஸ்டங்களுக்கு மத்தியில் வென்றெடுத்த சமாதானத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திரு கேபியோ அன்றி அவரின் அணியில் உள்ள வேறுயாருமோ எமக்கு கூறுவது கேலிக்கிடமாகும். இலங்கையராகிய நாங்கள் இந்த புத்திஜீவிகள் யார் என்பதனையும் வெளிநாட்டில் வாழும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைக்கு உதவுபவர்கள் நாட்டின் கள நிலையை விளங்கிக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று உத்தரவாதம் தருவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

இவர்களுக்கு இதுவரை காலமும் களநிலை பற்றி விளங்காமல் போனது கவலைக்குரியதே. மீண்டும் ஒரு தடவை எவரேனும் எம் மீது சவாரி செய்ய அனுமதிக்கக்கூடாது.  இத்தகைய எவருடனும் அரசு எத்தகைய தொடர்பு வைத்திருப்பதை ஆட்சேபிக்கும் உரிமை எனக்குண்டு. இவர்களுடன் நாம் உறவு வைத்திருப்பதை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் என்பதோடு இந்நாட்டு மக்கள் ஒருவர் இருவருக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே துரோகம் செய்ததாக கருதப்படும். நம் நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நாம் ஏறக்குறைய இரண்டு லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். அவற்றில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் பலாத்காரமாக விடுதலைப்புலிகளுடன் இணைக்கப்பட்ட போராளிகள் பலர் அடங்குவர். ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விதவைகளாக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் அனாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும்  ஆக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 42000 பேர் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ போர் தமது பார்வைகளையும் கால் கைகளையும் இழந்துள்ளனர். இரு கால்களையும் இரு கைகளையும் இழந்தவர்கள் ஒரு காலால் நடப்பவர்கள் தவழ்ந்து திரிகின்றவர்கள் இவ்வாறு பலர். இந்த அப்பாவிகள் அனைவரும் எஞ்சியுள்ள நாட்களை இப்படித்தான் செலவிட வேண்டும் என்பது விதி. எத்தனை ஆயிரம் மாணவர்கள் தம் கல்வியை இழந்துள்ளனர். இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு உயிரற்ற சடலங்களாக கண்டபோது அனுபவித்த கவலைகள் பற்றி இப் புத்திஜீவிகள் அறிவார்களா? ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு அல்லது தமக்கு மிகவும் விருப்புடைய ஒரு உறவை இழந்திருந்தால் மட்டும்தான் இந்த வேதனையை உணர முடியும். எத்தனை குடும்பங்கள் முழு உறவினரையும் சில குடும்பங்கள் உறவுகள் சிலரையும் இழந்துள்ளனர். பல கோடி பெறுமதியான தனியார் பொது சொத்துக்கள் அழிக்ககப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு பகுயில் முழுமையான ஒரு வீடும் இல்லை. வவுனியா மன்னார் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கும் இதே கதிதான். கிழக்கு மாகாணத்தில் இடம் பெயர்ந்து இரண்டு ஆண்டுகளின் பின்பும் எமது மக்கள் கூடாரங்களில் தான் வாழுகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்குள் சென்று அக்கிராமங்கள் எவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகளையும் அரசு பார்வையிட வேண்டும். முல்லைத்தீவு கிளிநெச்சி மக்கள் முற்றாகவும் மன்னார் வவுனியா பகுதியில் உள்ள மக்களில் பெரும் பகுதியும் வீட்டுக்கூரை யன்னல் கதவு உட்பட எதுவும் இல்லை. உண்மையாக நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை உணருகின்றேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏமாற்றம் எனக்கு ஏற்பட்டதை விட அதிகமாகும். இப்புத்திஜீவிகள் எங்கிருந்து வந்தார்களோ சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இவர்களை நாடுகடத்தி தரும்படி இலங்கையரசு கோரிக்கை விடவேண்டும். இதுவரை எநத் ஒரு நாடும் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் தடைகளை நீடீத்துள்ளன.

இத்தகைய நபர்களே நாம் இழந்த அத்தனை இழப்புக்கும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்களை உபசரிப்பது மறைமுகமாக அவர்களின் தடைகளை நீக்குவதற்குச் சமமாகும். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விடுதலைப்புலிகளின் கடும் போக்காளர்களை இராணுவம் உபசரிக்கும் போது தடுப்புக்காவலில் உள்ள 10000 பேரில் பெரும் பகுதியினர் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக சேர்க்கப்பட்டிருப்பதனால் அவாகளை ஏன் தொடர்ந்தும் தடுப்புக்காவலிலும் சிறையிலும் ஏன் அரசு வைத்திருக்கின்றது என்று கேட்கின்றார்கள். இத்தகைய நபர்கள் தான் பின்னனியில் இருந்து எமக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் பொருள் இழப்புகளுக்கும் பொறுப்பாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே அரசு வீடு முற்றாகவும் பகுதியாகவும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டாவதாக உயிர் இழப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஏனைய இழப்புகளுக்கும் முழு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அரசு மேலும் தாமதிக்காது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புகளின் பெறுமதியை கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்ககுதல் கண்ணிவெடி போன்றவற்றிற்கு பலியாகிய நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் சேர்ந்தவர்களுக்கு  முழு நட்ட ஈடு வழங்க வேண்டும். நாட்டின் பிற பகுதியில் இருந்து 500 ரூபாயுடன் வெளியேற்றப்பட் இஸ்லாமிய மக்கள் முழு சொத்தையும் இழந்தமையால் முழு நட்ட ஈட்டுடன் மீள குடியமர்த்தப்பட வேண்டும். அன்று தொட்டு இன்று வரையும் இவர்களில் அனேகர் மிக வறுமைப்பட்டு வாழ்கின்றார்கள்.

இந்த நபர்களின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் இலட்சியத்துடன் செயறட்படாது சுயநலத்துடன் செயற்படுகிறார்கள் என்பது தெரியாமல் கண்மூடிதனமாக விடுதலைப் புலிகளை ஆதரித்த நபர்களின் தற்போதய கருத்து இதுவாகும். பல ஆண்டுகள் அமைதியான தூக்கம் இன்றி சுகந்திரமான முறையில் வீதியில் நடமாட முடியாது கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு சிலரைப் போல் வாழ்ந்தவன் நான்.

இது பலவிதத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் உணர்ச்சிமிக்க உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகும். கிளிநொச்சியில் வாழுகின்ற உரிமை மறுக்கப்பட்டது உட்பட. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் குறிப்பாக வட-கிழக்கு வாழ் மக்களின் கருத்துக்களினைத்தான் நான் பிரதிபலிக்கின்றேன். நான் செய்வது தவறு என யாரும் கருதினால் நான் அவர்களிடம் அதற்கு மன்னிப்புக் கோரி ஒத்த கருத்துள்ளவர்களை எனது பணி தொடர ஆதரவு நலகுமாறு வேண்டுகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

கைத்தொலைபேசியில் புலிகளின் பாடல்களை வைத்திருந்த மூவர் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் பாடல்களை கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாhரின் திடீர் பரிசோதனைகளின் போதே இவ்விளைஞர்கள் தங்கள் கைத்தோலைபேசியில் இப்பாடல்களை வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வாகரை, நாவற்குடா, ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் மட்டக்களப்பில் சில இளைஞர்கள் கைத்தொலைபேசியில் புலிகளின் படங்கள், பாடல்களை போன்றவற்றை வைத்திருந்த காரணத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் சில பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வன்னியில் இறுதிப் போரின் போது பொது மக்களால் கைவிடப்பட்ட சைக்கிள்களைத் திருத்தியமைக்க 10 மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவாகியுள்ளதாக வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்று கைவிடப்பட்ட வாகனங்கள் சில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கையிடப்பட்ட இவ்வாகனங்களை ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்ததென்றும் அவர் தெரிவித்தார். நேற்று (June 24 2010) வாகனங்களை சட்டபூர்வமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமத.p ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது கையளிப்பட்ட மோட்டார் வாகனங்கள் திருத்தப்பாடாமலேயே கையளிக்கப்பட்டன. சைக்கிள்கள் சில திருத்தப்பட்டு கையளிக்கப்பட்டன.

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களும். 7ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சியில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் பல உதிரிப்பாகங்கள்  அகற்றப்பட்ட நிலையில் உள்ளதை அங்கு நேரில் சென்று பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

வடமாகாணசபை அலுவலகம் கிளிநொச்சியில் இயங்கவுள்ளது.

இதுவரை காலமும் திருகோணமலையில் இயங்கி வந்த வடமாகாண நிர்வாக அலகுகள் இனி கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய இம்மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வடமாகாண சபையின் நிர்வாக அலகுகள் அனைத்தும் கிளிநொச்சியில் இயங்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கும் முறிகண்டிப் பகுதிக்குமிடையில் ஏ-9 வீதியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் நகரில் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்ட தமிழ்மொழிப் பல்கலைக்கழக கட்டடத்தில் வடமாகாண சபையை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். எனினும், மூன்று வருடங்களுக்குள் மாங்குளத்தில் மகாணசபைக்கான நிரந்தக்கட்டடம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை வங்கியின் வட மாகாண அலுவலகம் எதிர்வரும் 4ம் திகதி யாழ்ப்பணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இதனைத்திறந்து வைக்கவுள்ளார்.