June

June

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

9chnpika.jpgயாழ். நூலகத்தை முப்பது வருடங்களுக்கு முன்னால் தனது சமூகத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் எரித்து அழித்ததற்காக மன்னிப்புக் கோரினார் அமைச்சரும் ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க. யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு ஜாதிக ஹெலஉறுமயவினால் ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திங்கட்கிழமை அங்கு இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றிய தருணத்திலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க நூலக எரிப்புச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கோரினார்.

அவர் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது;

எமது வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். தமிழ்க் கலாசாரத்தின் உண்மையான உணர்வை மீளப்பெறுவதற்கு உதவி வழங்க நாம் விரும்புகிறோம். அதனாலேயே சில புத்தகங்களுடன் நாம் இங்கு வந்திருக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னர் துரதிர்ஷ்டவசமாக எனது சமூகத்தைச் சேர்ந்த சில தீய ஆட்கள் யாழ்.நூலகத்தை எரித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்த பெறுமதிமிக்க புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்தத் தினத்தில் இடம்பெற்றவை தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்தோம். துரதிர்ஷ்டவசமாக வரலாற்றை மாற்ற முடியாது. எவ்வாறாயினும் சிறிய வழியிலாவது அந்தக் காயங்களை ஆற்றுவதற்கு எமது பங்களிப்பை வழங்க விரும்புகிறோம். அதனாலேயே நாம் இங்கு வந்துள்ளோம். கடந்த காலத்தைப் பற்றி நாங்கள் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாம் எதனையும் வென்றெடுக்கப்போவதில்லை. நாங்கள் சகோதரர்களாக,சகோதரிகளாக எதிர்காலத்தை அணுகுவோமானால் அற்புதமான விடயங்களை வென்றெடுக்க முடியும்.

அரசியல் பிளவுகள் சில இருந்தாலும் 1983 இற்கு முன்னர் நாங்கள் சமாதானமாக வாழ்ந்தோம். யுத்தத்தின்போது கூட இன மோதல்களை நாம் கொண்டிருக்கவில்லை. வட அயர்லாந்தில் சமாதான கோடுகளென அழைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் இடப்பட்டிருந்தன. அங்கு கத்தோலிக்கரும் புரட்டஸ்தாந்து மதத்தினரும் சண்டையிட்டனர். இந்தியாவில் இன மோதல்கள் பொதுவாக இடம்பெற்று வருகின்றன. நாங்கள் இராணுவ அரசியல் மோதலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை சமூக மோதலாக உருமாறிச்செல்லவில்லை. அடிமட்டத்தில் நாங்கள் சமாதானமாகவே வாழ்ந்தோம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கலாசாரப் பாரம்பரியமே இதற்குக் காரணமென நான் நினைக்கின்றேன்.

ஆதலால் நல்லிணக்கத்துக்கான அத்திபாரமானது எமது சமூகத்திற்குள்ளேயே இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தக் கலாசார அரசியல் பிணைப்புகளை விரிவுபடுத்துவதாக அரசியல் ரீதியான இணக்கப்பாடு அமையும். எமது வரலாற்றில் துன்பகரமான அத்தியாயத்தை இப்போது முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். புதிய எதிர்பார்ப்புகள்,புதிய சிந்தனைகள், புதிய உணர்வுகளுடன் புதியதை ஆரம்பிக்க விரும்புகிறோம். இனிமேலும் கடந்தவையைப் பற்றிக் கதைக்கக்கூடாது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென நாங்கள் உறுதியாக நம்பினோம். அதனை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமெனக் கருதினோம்.  ஆயினும் எமது போராட்டம் சமாதான வழியிலும் ஜனநாயக ரீதியிலுமாகவுமே அமைந்தது. இப்போது புலிகள் இல்லை. ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைக்குத் தடையில்லை. எமது வேறுபாடுகளைப் பேணி கடைப்பிடிக்க வேண்டிய தேவையில்லை. இப்போது ஒற்றுமைத் தன்மையை தேடிக்கண்டுபிடிக்கவே விரும்புகிறோம்.

கோட்பாட்டுக்கு மாறான மாற்ற தடைச் சட்டமூலத்திற்கு தமிழ் எம்.பி.க்கள் சிலர் எம்முடன் ஒத்துழைத்துச் செயற்பட்டனர். எமது கலாசாரத்தைப் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். சிங்களவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நாம் விரும்புகிறோம். ஆயினும் ஏனைய சமூகங்களை நாங்கள் அழிக்க விரும்புகிறோம் என இது அர்த்தப்படாது. பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியினராக நாம் உள்ளோம். நாங்கள் எப்போதுமே கலாசார மற்றும் பன்முகத்தன்மை தொடர்பாக நட்புறவுடனேயே உள்ளோம். சகல சமூகங்களின் மத்தியிலும் சிங்களவர்களின் சிறந்த நண்பர்களாக தமிழர்கள் வருவதற்கு முடியும். நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

பிரிவினைவாதத்தை நம்புபவர்களை ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதிக்கு எதிராக தெற்கின் பிரிவினைவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரொபேர்ட் இ லீ குறித்து அறிந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். யுத்தத்தின் பின்னர் ஐக்கிய தேசத்தை ஒன்றுபட்டுக் கட்டியெழுப்புவதற்கு அவர் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய மாளிகை கூட மயானமாக அழிக்கப்பட்டிருந்தது. அவர் இறந்து 13 வருடங்களின் பின்னரே அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. நூறு வருடங்களுக்குப் பின்னரே அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. நல்லிணக்கம் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் எதனையும் செய்திருக்கவில்லை. ஆயினும் அவர் ஒன்றுபட்ட அமெரிக்காவுக்கு அவர் ஆதரவு வழங்கினார். இந்த மாபெரும் இராணுவ ஜெனரலில் வரலாறானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல உதாரணமாக அமையுமென நான் நம்புகிறேன்

செம்மொழி மாநாடு கோவையில் இன்று கோலாகலமாக ஆரம்பம்

semmoli.jpgஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் கோவை நகரில் இன்று 23ம் திகதி காலை கோலாகலமாக ஆரம்பமாகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனாதிபதி பிரதீபாபட்டேல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார்.

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இன்று ஆரம்பமாகும் செம்மொழி மாநாடு தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் நடைபெற்று எதிர்வரும் 27ம் திகதி நிறைவு பெறுகிறது.

இதேவேளை செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் சுமார் ஐம்பது நாடுகளிலிருந்து ஐயாயிரம் பேர் வரையான தமிழறிஞர்கள் கோவைக்கு வந்து சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழறிஞரான பேராசிரியர் கா. சிவத்தம்பியும் இவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். இன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக பேரணியொன்று நடைபெறுகிறது. ‘இனியவை நாற்பது’ என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் இன்று மாலை கோவையில் பேரணி நடைபெறுகிறது.

செம்மொழி மாநாட்டில் ஆயிரத்து இருபது தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடைபெறும் நவீன உள்ளரங்கம், பிரமாண்டமான விழாப் பந்தல், மேடை, கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கங்கள் ஆகியன கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளன.

வடக்கில் சேதமடைந்த அரச அலுவலகங்களை நிர்மாணிக்க ரூ.89 கோடி

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மா விலை ரூபா 10.50ஆல் அதிகரிப்பு

கோதுமை தானியம் இறக்குமதிக்கான வரிச் சலுகையை நீக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து கோதுமை மா நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 10.50 ஆல் அதிகரித்துள்ளன.

கோதுமை தானிய இறக்குமதிக்கென வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க நிதி அமைச்சு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய கோதுமை தானிய இறக்குமதிக்கான வரி 15 சதவீதத்தால் அல்லது கிலோவொன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோவொன்றின் விலையை ரூபா 10.50 ஆல் அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் தனது முகவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

கோதுமை மா கிலோவொன்றின் விலை ரூபா 10.50 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிறிமா நிறுவனமும் செரண்டிப் நிறுவனமும் தங்களுக்கு அறிவித்திருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை 63 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோவொன்றின் விற்பனை விலை அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை நீக்கத்தால் ரூபா 73.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிப்பதை இரு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம்

cadar.jpgபாராளு மன்றத்திற்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்றால், ஜனாதிபதி பதவிக்கு ஏன் போட்டியிட முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதை இரண்டு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் காதர் எம். பி. தெரிவித்தார்.

மக்கள் ஆணை கிடைக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகும்’ என்று சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களைக் குழப்புகிறார்களென்றும், இரண்டு தடவையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சரத்தை அரசியலமைப்பில் நீக்க வேண்டுமென்று மங்கள சமரவீர எம். பியும் முன்பு ஒரு தடவை வலியுறுத்தியிருந்தாரென்றும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. எம்.பி. ரங்கே பண்டார ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நேற்று முன்தினம் தனது பாரியார் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவருடன் இடம்பெற்ற மோதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய ரங்கே பண்டார ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

ஆஸ்பத்திரியில் அவருக்கான சிகிச்சையை துரிதப்படுத்துவதற்கும் அதற்கான டாக்டர்களை ஏற்பாடு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான சிகிச்சைகளையடுத்து ரங்கே பண்டார விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஜனாதிபதியின் மேற்படி உதவிக்கு நன்றி கூறும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார அலரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில்  தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தந்தை செல்வநாயகமும் தனயன் பிரபாகரனும்! : அழகி

Pirabakaran V_LTTESelvanayagam_SJVவரலாறுகள் ஆராயப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அதில் தவறுகள் இருப்பின் அவற்றை திருத்தி செம்மையாக நடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஈழமக்களின் துயரங்கள் இன்னமும் நின்றபாடில்லை. அவை மேலும் தொடருவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன. ஏன்? ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சமுதாயத்தை நேசிப்பது கிடையாது. சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் கிடையாது. இப்பொழுது உள்ள இந்த நாகரீக வளர்ச்சியடைந்த தொலைத் தொடர்புகள் உலக மக்களை மிகவும் கிட்ட கொண்டு வந்துள்ள போதிலும் கூட எம்மவர்களாலே எமக்கு அழிவு, நாம் எப்போதும் ஒரு உணர்ச்சி உந்துதலுக்கு அடிமையாகவே எம்மை ஆட்படுத்தி கொண்டுள்ளோம். இதிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும்? மீண்டு வருவதற்கான தேவை என்ன? எதற்காக நாம் மீள வேண்டும்?

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணையத்தளத்தையும் உருவாக்கி கொண்டு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராமல் வரமுடியாமல் மாக்ஸியம் லெனினிஸம் பேசுவதில் யார் கெட்டிக்காரர் என்பதில் தான் நாம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எப்பொழுது தான் இந்த மேதாவித்தனங்கள் முடிவுக்கு வரப் போகின்றது? இவ்வளவு காலமும் நாம் காட்டிய மேதாவித்தனங்கள் போதுமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும்?

1) எமது அரசியல் தலைமைகள் அறுபது வருடமாக ஈழத்தமிழர்களுக்கு என்னதான் செய்திருக்கிறார்கள்?

2)எல்லா இயக்கங்களிலும் நடந்த படுகொலைகளையும் வெளிக் கொணர்ந்து போராடவென வந்தவர்களை ஏன் அடித்தும் விச ஊசி போட்டும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் எரித்தும் புதை குழிகளிலும் கொன்று தள்ளினார்கள் என உரிய விளக்கங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இப்படியான மனநோயாளிளை இனங்கண்டு நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகளை மீண்டும் வராது தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

கடந்த கால ஈழத்து அரசியலில் நாம் விட்ட தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் சில தகவல்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதில் சரி பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

1948 ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எப்போதும் சுதந்திரம் கிடைத்த மக்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள். அப்படியென்றால் தமிழர்களும் சந்தோசமாகவே இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வு அமைதியை இழந்திருந்தால் அங்கே பிரிவினை என்றொரு பேச்சு இருந்திருக்கும். அக்கால கட்டத்தில் பிரிவினை என்ற எண்ணம் தோன்றியிருப்பின் ஏன் இவர்கள் ஆங்கிலேயரிடம் பிரிவினை என்ற கொள்கையை வைக்கவில்லை. ஏன்? தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பெரிய படித்தவர்கள் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் அக்கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தமிழர் இளைஞர் காங்கிரஸ் பின்பு காங்கிரசாக மாறியபோது ஜிஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார். அந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தரத்தில்தான் செல்வா இருந்திருக்கிறார். அப்படி இருந்த செல்வா ஏன் தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்? என்பது தான் எனது கேள்வி. ஜனநாயக முறையில் எத்தனை கட்சிகளும் ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால் என்ன பிழையைக் கண்டு பிடித்து பிரிந்து சென்றார்? இதுவும் எனது கேள்வி. இப்படியே பல தமிழ் தலைவர்கள் எமது மக்களை ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்து தமது அரசியல் லாபங்களுக்காகவும் சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அறுபது வருட அரசியலில் எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. எந்த ஒரு அடிப்படைத் தேவையான பூகோள ரீதியான பரந்த சிந்தனை இல்லாமலே எமது மக்களை வெறும் உணர்ச்சியூட்டி நெருப்பாகவே அதை உருவாக்கி காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே அரசியல் கற்றவர்களே எமது கடந்த கால வரலாற்றை ஆராயும் போது அதன் தவறுகள் வெட்ட வெளிச்சமாகவே வெளிப்படும். எமது தமிழினம் எப்பொழுதும் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்ப்பதற்கு விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரிவதே இல்லை. பல தடவைகள் நாம் எமது அறிவை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் இப்படியொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒன்று நடக்காதவாறு தடுத்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தமது இருப்பை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் இரு கட்சிகளும் சேர்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரிவினை என்ற கோசத்தையும் சுயாட்சி சமஸ்டி ஆகியவற்றையும் முன் மொழிந்து 1977 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு வேப்பிலை அடித்து திருநீறு எறிந்து 22 பேரும் பாராளுமன்றம் சென்றார்கள். இவர்களுடைய ஆக்கிரோசமான நெருப்பான வார்த்தைகள் காற்றை விட மோசமான வேகத்தில் இளைஞர்களை வன்முறைக்கு உந்தி தள்ளியது. ஆனால் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தவிதமான அடிப்படையான ஆயுத போராட்ட உணர்வுகளும் இருந்திருக்கவில்லை. ஆங்காங்கு நன்கு அரசியல் தெரிந்தவர்கள் தொலை நோக்கு கொண்டவர்கள் இவர்களுடைய அரசியல் தவறு என்று விமர்சித்து இருக்கிறார்கள். விமர்சித்தவர்களை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் துரோகிகள் என்றே வருணித்திருக்கிறார்கள். இங்குதான் கல்வியாளர்கள் மக்களை நேசித்தவர்கள் பண்புள்ளவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பின் பலர் உணர்ச்சி மிக்க இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எந்தவித விசாரணைகளுமின்றி விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் பல உயிர்களை சுட்டுக் கொல்கிறார்கள். இந்த கொரூர கொலைகளை த.வி.கூட்டணி எந்த கண்டனங்களுமின்றி மௌனமாகவே இருந்து இந்த படுகொலைகளுக்கு உரம் எறிந்து எண்ணை ஊற்றி ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அரசியல் சுயநல நோக்கங்களுக்கான இளைஞர் வளர்ப்புக்கள் இறுதியில் இவர்களையே கொலை செய்து விடுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் எப்படி த.வி. கூட்டணியை நூறு வீதம் ஆதரித்து எமது விடிவிற்காக பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்களைக் கொன்றவர்களையும் பின்பு ஆதரித்துள்ளோம். பல இயக்கங்களையும் உன்னத மனிதர்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொன்ற தமிழ்ஈழ விடுதலைப் புலிகளையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தோம். இந்தக் காட்டு மிராண்டிகள் உலக அரங்கிலே எமது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மனிதர்கள் இல்லாத அளவிற்கு கொன்று புதைத்து போட்டிருந்தார்கள்.

இப்பொழுதும் கூட ஐம்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகி வறுமையிலும் பிச்சைஎடுத்துக் கொண்டும் உள்ளார்கள். அவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்து விட்ட நிலையிலும் பல போராளிகள் பொதுமக்கள் உயிருடனே சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலான புகைப்படங்கள் காட்சிகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான கோரமான பிடியில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவேயில்லை. ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அவர்கள்சார்ந்த தமிழினமும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த குற்றங்களை உணராமல் ஆராயாமல் ஈழத்தமிழ் மக்களின் குருதி காய்வதற்கு முன்னமே வட்டுக் கோட்டை தீர்மானம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் இதயமுள்ள மனிதர்களா இவர்கள்?

நாம் வாழும் இந்த ஐரோப்பிய நாடுகளில் எத்தகைய ஐனநாயகத்தை மனிதப் பண்பை சட்டங்களை மதித்து எப்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படியெல்லாம் ஆராய்ந்து முடிவு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் எம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் மனிதப்பண்பை இழந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மீண்டும் ஜிரிவி தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுள்ளது. ஜிரிவி யின் அழுகுரல்கள் உண்மையில் எந்தக் கருங்கல் இதயம் கொண்டவர்களையும் கரைத்து விடும் சோகம் வேதனை நிறைந்தது. ஆனால் இந்த அழுகுரல்களால் தமிழரைத் தவிர வேறெந்த இன மக்களையும் எம்மோடு சேர்ந்து கவலைப்பட வைக்க முடியவில்லை. ஏன்? ஜிரிவி உரிமையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் அனுதாபங்களில் தான் அவர்களுடைய பிழைப்பு ஓட்டப்படுகிறது. இது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று. எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.

முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.

1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.

2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.

(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.

இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.

அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!

ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.

புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலில் அங்குள்ள மக்களின் வறுமை அகன்று நிம்மதியாக மூன்று வேளை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அங்குள்ள குழந்தைகளின் கல்வியை குறிப்பாக வளர்க்க வேண்டும். இவற்றை திட்டமிட்டு நடத்தி வெற்றி காணவேண்டும். ஏனெனில் சிங்கள் அரசு திட்டமிட்டு இவற்றை அழித்து கொண்டிருக்கிறது. ஆனால் புலிப் பினாமிகளே!! நீங்கள் அமெரிக்காவில் பாராளுமன்றம் கட்டவென பணம் சேர்த்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. நீங்கள் நடக்க முடியாதவைகளை சொல்லித் தான் இதுவரை காசு சேர்த்தீர்கள். இனியும் சேர்ப்பீர்கள்.

தமிழ் மக்களே! இனியும் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்காதீர்கள். தமிழினம் மேலும் அழிவதற்கு காரணமாக இருக்காதீர்கள்.

புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு

111usa.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.