தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்று (June 27 2010) தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் பொது இணக்கப்பாட்டிற்கான சந்திப்பு ஒன்றை கொழம்பில் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related News: இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.