![]()
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி நேரடியாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்ற இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. இவ்வாறு நேரடியாக வழங்கப்படுவது நாட்டின் இறைமையை பாதிக்கும் செயல் என சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த வேளையில், அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் விடுகளை அமைத்துக் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாவை உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருந்தது. இதன்பின் இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவ்வுதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்படும் எனத் தெரிவித்திருந்தார். 0
எனினும், இதனை சிறிலங்கா அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது மறுத்துள்ளார். இந்தியாவோ வேறெந்த நாடுகளோ அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவிகளை வழங்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிடம் உதவிகளைக் கோரியுள்ளோம். அவர்களது உதவிகள் அரசாங்கத்தினுடாகவே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.