புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் மலேசியாவில் இருப்பதாகத் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் பிரசன்னமாகியிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக மலேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.அவர்கள் மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உள்துறை அமைச்சர் கிஷாமுடீன் உசைனை மேற்கோள்காட்டி இதனை ஊர்ஜிதப்படுத்தி செய்தி வெளியாகியுள்ளது. தமது வன்முறைப் போராட்டத்தை முன்னெடுக்க மலேசியாவைத் தமது தளமாக இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் சாராத போராளிக்குழுக்கள் பயன்படுத்துவதாக கிஷாமுடீன் உசைன் கூறியுள்ளார்.

அத்துடன், தமது நிதிப்பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு மலேசியாவை இந்தக் குழுக்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமது அமைப்புகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆட்சேர்ப்புக்கு இக்குழுக்கள் இலக்கு வைப்பதாகவும் அவர் நிருபர்களுக்கு தெரிவித்திருந்தார்.

மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸ் மா அதிபர் மூசாஹசனை மேற்கோள்காட்டி அரசாங்க செய்தி முகவரமைப்பான “பேர்னாமா” செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் நடமாட்டம் என்பன உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவை தொடர்பான விபரங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கிஷாமுடீன் கூறியிருக்கிறார். தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக உள்துறை அமைச்சு உள்நாட்டு சட்ட அமுலாக்கத் துறையுடனும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடனும் நெருங்கி செயற்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *