தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் தஞ்சம் பெற்றிருந்த முருகேசு சந்திரகுமார் வன்னி யுத்த முடிவில் இலங்கைக்குத் திரும்பி இருந்தார். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தில் 8வது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு முன்னர் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஈபிடிபி 5 ஆசனங்கள் வரை வென்றெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது 3 ஆசனங்களைப் பெற்றுள்ள ஈபிடிபி தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெறலாம் என நம்புகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாவதாக வந்த மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க 8000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையான வாக்குகளைப் பெற முடிந்தமைக்கான காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்கு வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி இருந்தமையே. தீவுப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் அம்மக்கள் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான ஆதரவு ஏனைய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.
வேலனை, ஊர்காவற்துறை, சரவணை ஆகிய இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்து சிலவற்றை அங்கேயே தீர்த்து வைத்தார். நல்ல தண்ணீர் வரவில்லை என்பதனை மறுநாளே தண்ணீர் வர ஏற்பாடு, பாடசாலைக்கான தளபாடங்களுக்கு 50000 ரூபாய்கான காசோலை, மீன்பிடி சங்கத்திற்கு 2 00 000 ரூபாய்க்கான காசோலை என்பன உடடினயாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சரிடம் தங்கள் குறைகளை எழுத்தில் வைத்து பெருமளவு கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தப்பட்டனரா என்று கேட்ட போது அனைவருமே தாங்கள் சுயவிருப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர். பத்திரிகைகளில் அமைச்சரைப் பற்றி மோசமான செய்திகள் வரும் போது நீங்கள் எவ்வாறு அவரை ஆதரிக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு ”பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அமைச்சர் மாதத்தில் ஒரு தடவையாவது வந்து எம்மைச் சந்திக்கின்றார். நாங்கள் ஆபத்தில் இருந்த போது எங்களுக்கு அனைத்தையும் அவர் செய்துள்ளார். அதனால் எமது வாக்கு அமைச்சருக்கே” என உறுதிபடத் தெரிவித்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முதலாம் வேட்பாளர் அங்கஜன் ராமானுஜன் ஆதரவாளர்களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விசாரித்ததில் அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் வாக்கு ‘ஐயாவுக்கு’ (அமைச்சருக்கு) எனத் தெரிவித்ததாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அங்கஜன் ராமனுஜனின் தந்தைக்கு தெரிவித்ததைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கஜன் ராமானுஜன் தொழிலதிபர் ஒருவருடைய மகன். அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் பணச் செலவில் போட்டியிட்டவர். இருப்பினும் மக்களின் ஆதரவை அவரால் வென்றெடுக்க முடியவில்லை.
குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களின் ஊடகங்களின் பலத்தில் தங்கியிருந்த தமிழ் தேசியத்திற்கான முன்னணி தோல்வியைச் சந்தித்து உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி மட்டுமல்ல கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அனைவருமே தோல்விகண்டனர்.
தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்து வன்னி மக்களை யுத்தச் சுழலுக்குள் கைவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது அவர்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியே.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லண்டனில் போராட்டப் பீரங்கிகளாக விழங்கிய ‘அம்பிகை சீவரத்தினம் – அங்கையற்கன்ணி’ இரட்டையர்களில் அங்கையற்கன்ணி யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார். இவரை விடவும் கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் யாழ் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தத கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும் அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியல்ல. அவர் மீதும் அவரது கட்சி மீதும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அது தொடர்பாக அமைச்சரும் அவரது கட்சியும் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளது. முன்னர் இருந்த நிலையைவிட மக்கள் கூடிய ஆதரவை வழங்கி உள்ளனர். அதனால் அவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற சாவகச்சேரி படுகொலை தொடர்பில் ஈபிடிபி சம்பந்தப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதனை போட்டி வேட்பாளர் சரவணபவனின் பத்திரிகையே வெளியிட்டு இருந்த போதும் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.