ஆறாவது பாராளுமன்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களாக அங்கம் வகித்த பலர், ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாது இப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். ஆறாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக அங்கம் வகித்த ரோஹித்த போகொல்லாகம, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி உள்ளிட்டோர் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. க்களான மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன், சாஹல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.
ஜே.வி.பி. யில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க தோல்வியடைந்துள்ளதுடன் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜே.வி.பி. யின் முன்னாள் எம்.பி. க்கள் பலரும் இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.