03

03

ஓட்டமாவடி பாலம் நேற்று திறந்து வைப்பு

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 770 மில்லியன் ரூபா செலவில் ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் கிழக்கின் வசந்தம் கருத்திட்டத்தினூடாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 250 மீற்றர் நீளத்தையும் 10.5 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பாலத்திற்கான நிர்மாண பணிகள் 2007 நவம்பர் 17ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தன. பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப் பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இப்பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஓட்டமாவடி பாலம் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று மக்கள் உபயோகத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் அமீர்அலி, முரளிதரன், வேட்பாளர்களான அலி சாஹிர் மெளலானா, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் மற் றும் ஐ. ம. சு. மு. முக்கிய ஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கொலை அச்சுறுத்தல்; ஆயுதம் வைத்திருந்தமை – ஐ. தே. மு. வேட்பாளர் கிதெலபிட்டிய கைது

பெண் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் ஆயுதம் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சுசில் கிதெலபிட்டிய நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெலிக்கடை பொலிஸார் நேற்று மேற் கொண்ட சுற்றி வளைப்புக்கமையவே ஐ.தே.மு வேட்பாளரும் அவரது வேன் சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் அவரது வாகனத்திலிருந்த 7.62 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது:- மிரிஹானை பொலிஸ் நிலையம் வந்த பெண் ஒருவர் தனக்கும் ஐ. தே மு. வேட்பாளரான சுசில் கிதெலபிட்டயவுக்குமிடையில் தொடர்பு இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தனக்கு அசீட் வீசி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை தன்னைத் தவிர அவருக்கு மேலும் 20 பெண்களுடன் தொடர்பு இருந்து வருவதா கவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து 7.62 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த வான் சாரதி கடற்படையிலிருந்து தப்பியோடியவர் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஐ.ம.சு.முவிலுள்ள கட்சிகள் ஏகதீர்மானம்

2010 பொதுத் தேர்தல் முடிவடைந்த வுடன் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறையை மாற்றும் நடவ டிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தீர்மானமும் செய்து கொண்டுள்ளன.

விருப்பு வாக்குகள் முறையிலான விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நட த்தப்படும் இறுதியான தேர்தல் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக இருக்கின்ற இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றித் தாருங்கள் என்றும் மக்கள் உங்களிடம் கேட்கின்றனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறையில் நிச்சயமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருப்பார். அவர் அந்த தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடியவராக, பொறுப்பு கூற வேண்டியவராக இருப்பார். குறிப்பாக அவர் கண் ணாடி வீட்டிற்குள் இருப்பவர் போன்று இருக்க வேண்டியவராக இருப்பார்.

எமது நாட்டிற்கு ஒரு தொல்லை யாக இருந்த பயங்கரவாத ஒழிக் கப்பட்டு விட்டது. அதே போன்று மிகப் பயங்கர விளைவுகளை தந்து கொண்டிருக்கும் விகிதாசார தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார். தேர்தல் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு க்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதற்கட்டமாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதை உறுதி செய்தார்.

வெற்று வாக்கு பெட்டிகளுக்குள் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி

வெற்று வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் போது அதன் உட்பகுதியில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு கட்சிகள்/ சுயேச்சைகளுக்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வெற்று வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்படும் போது, கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேர்தல் முகவர்கள் தாங்கள் விரும்பிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை உட்பகுதியில் ஒட்ட முடியும்.

வாக்குப் பெட்டிகளில் மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளதாக தேர்தல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் கூறினார். வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் முகவர்கள் இதனைப் பரிசோதித்து அறிந்துகொள்வதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

1365 பேர் ஒப்படைப்பு: பெற்றோருக்கு உதவும் வகையில் பம்பைமடுவில் விசேட கருமபீடம்

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து கடந்த முதலாம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1365 பேரினதும் பெற்றோர் மற்றம் உறவினர்களுக்கு உதவும் வகையில் வவுனியா பம்பைமடுவில் இன்றும் நாளையும் விசேடமாக இரண்டு கருமபீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பம்பைமடு பெண்கள் விடுதி மற்றும் பம்பைமடு தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலுமே இவ் விசேட கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இயங்கவுள்ள இக் கருமபீடங்களுக்கென தனித்தனி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்வரெனவும் அவர் கூறினார்.

குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் தமது தேவைகளை இலகுவாக்கும் வகையில் கையேடுகள் அடங்கப்பெற்ற கோப்பும் அவர்கள் முழுமையான புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஏனைய பிரஜைகளைப் போல் வாழ தகுதி பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வழங்கப்படும் கோப்பில் மருத்துவர்களால் பரித்துரைக்கப்பட்ட மருந்துகள், சிகிச்சை முறைகள், கலந்தாலோசிக்கப்பட வேண்டிய வைத்திய நிபுணர்கள் பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்கள் நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற முடியும்.