October

October

டுவென்டி-20’இன்று இந்தியாவில் ஆரம்பம் – பரிசுத் தொகை 25 கோடி இந்திய ரூபா

twentytwenty.jpgசாம்பி யன்ஸ் லீக் “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர்  இன்று இந்தியாவில் ஆரம்பமாவதுடன் இதில்,  12 அணிகள் போட்டியிடுகின்றன. உள்ளூர் “டுவென்டி-20′ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரில் மோத உள்ளன.
 
கடந்த 2008 ம் ஆண்டு,  முதலாவது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் நடைபெற இருந்தது. எனினும்; மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து,  இத்தொடர் கைவிடப்பட்டது. தற்போது இத்தொடர் இன்று முதல் வரும் 23 ம் தேதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.

ஏழு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்தியா தரப்பில் ஐ.பி.எல்.,  “டுவென்டி-20′ தொடரின் நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ்,  இரண்டாவது இடம் பிடித்த பெங்களுர் ரோயல் சாலஞ்சர்ஸ் மற்றும் லீக் சுற்றில் முதலிடம் பெற்ற டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காää இங்கிலாந்து தரப்பில் தலா இரண்டு அணிகளும், நியூசிலாந்து,  மேற்கிந்தி தீவுகள்;  இலங்கை தரப்பில் தலா ஒரு அணி வீதமும்; தொடரில் பங்கேற்க உள்ளன. பாகிஸ்தான் சார்பில் எந்த ஒரு அணியும் பங்கேற்வில்லை.
 
மொத்தம் உள்ள 12 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் 2 வது சுற்றுக்கு (8 அணிகள்) தகுதி பெறும். இதில்,  2 பிரிவாக அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். இதன் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

போட்டிகள் பெங்களுர் (சின்னசாமி விளையாட்டரங்கு,  ஐதராபாத் (ராஜிவ்காந்தி சர்வதேச விளையாட்டரங்கு) மற்றும் டில்லி (பெரோ ஷா கோட்லா விளையாட்டரங்கு) ஆகிய இடங்களில் நடக்க உள்ளன. இங்கு பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப் பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடரின் பரிசுத் தொகை இந்திய நாணயத்தில் 25 கோடி ரூபாவாகும். ஒரு கிரிக்கெட் தொடருக்கு இவ்வளவு பரிசுத் தொகை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணி சுமார்  10 கோடி ரூபா பரிசு வெல்ல உள்ளது.

நியூஸிலாந்திலும் பிலிப்பைன்ஸிலும் இன்று காலை பயங்கர நிலநடுக்கம்

நியுஸிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சான்டோ தீவிலிருந்து வடமேற்கே 294 கி.மீட்டரிலும் போர்ட்விலாவிலிருந்து வடமேற்கே 598 கி.மீ. தொலைவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
 
நில நடுக்கம் உணரப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது. இதனால் ஆஸ்திரேலியாää நியுஸிலாந்துää பிஜி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நில நடுக்கம் காரணமாக பல இடங்களில் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேத விபரம் குறித்து அறிவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை

சக விஞ்ஞானிகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்- வெங்கி

071009venkatraman-ramakrishnan.jpgஎன்னுடன் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு வென்றது குறித்து மகிழ்ச்சியுடன் உள்ளார் வெங்கி. இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆய்வு செய்து வரும் எம்ஆர்சி மூலக்கூறு உயிரியியல் லேப் மற்றும் உடாவா பல்கலைக்கழகம் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தது. அங்கிருந்த சூழல், சக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் எல்லாம் சேர்ந்து தான் எனக்கு இந்த பெருமையை தேடி தந்துள்ளது. என்னுடம் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய திறமையான சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.

இலங்கை துணை தூரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவும், இந்திய இலங்கை நல்லுறவிற்கு பாதகமாகவும் செயல்படும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், சென்னையில் இயங்கி வரும் இலங்கை துணை உயர் ஸ்தாரானிகாலயத்தை மூட வேண்டும் என்றும் ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் தலைவரான திரைப்பட இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

“சமீபத்தில் சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் திரு வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போது,” இலங்கையில் உள்ள முகாம்கள், பார்வையிடுவதற்கு மிருககாட்சி சாலை அல்ல…’ என்று கூறியிருந்தார். தூதரின் அந்த ஆணவமான பேச்சிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசிய தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இயங்கி வரும் துணை துதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரி ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் சார்பாக இன்று (8 10 09) காலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக (டி. டி கே. சாலையில்)அந்த இயக்கத்தின் தலைவர் திரு சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களை வதை முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி வரும் சிங்கள அரசிற்கு எதிராகவும், துணை தூதருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இடம்பெயர்ந்தோருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரிட்டனுக்கு அமைச்சர் போகொல்லாகம தெரிவிப்பு

101009displacedidps.gifஇடம் பெயர்ந்து வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரங்களை பெற்றுக் கொடுப்பதே இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டரிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டர் வெளிவிவகார அமைச்சர், ரோஹித போகொல்லாகம மற்றும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  வாழ்வாதார தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட ஃபோஸ்டர், பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதனை ஏற்றுக்கொண்டார். இடம்பெயர்ந்தோரை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்ந்தோருக்காக செய்த உதவிகளுக்காக அமைச்சர் போகொல்லாகம மைக் ஃபோஸ்டரிடம் பிரிட்டனுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

இதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கும்; மைக் ஃபோஸ்டருக்கும் இடையிலான  சந்திப்பொன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள உதவிகள் மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தமாக பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் ஃபோஸ்டர் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கேட்டறிந்து கொண்டார்.

பிரதிக் கல்வியமைச்சர் தலைமையிலான குழு யாழ்; விஜயம்

08dy_minister_eduction.pngபிரதிக்  கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று; விரைவில் வன்னிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது.
 
வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் கீழ் வட மாகாண கல்வி மேம்பாடு குறித்து ஆராய்வதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் குழு எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான இலவச நூல்வெளியீடு எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாந்திகதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற் கொள்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகுமென்று பிரதியமைச்சர் கூறினார்.

அகதி முகாம்களிலிருந்து வெளியேறிய யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகள்

vau-camp-srilanka.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோரைப் பிரிந்து தனியே சென்றுள்ள இந்த மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருப்பிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.

இருப்பினும், யுத்தச் சூழ்நிலையின்போது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பல மாணவர்கள் திருமணம் முடித்து, இப்போது குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்கள். இவர்களில் அநேகமானவர்கள் தமது கணவனை அல்லது மனைவியை இடைத்தங்கல் முகாமிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்திருக்கின்றது. இதனால் இத்தகைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என இலண்டன் பீபீஸி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

நோபல் பரிசை வென்ற 3வது தமிழர்

081009venkatraman.jpgநோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர்  என்ற பெருமையைப் தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்த வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.பெற்றுள்ளார்

1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார். இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார். இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.

இதற்கு முன்பு சர். சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார். இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார். வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்.

இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

தென் மாகாண சபை தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்றது.

srilanka-voting.jpgநாளை மறுதினம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

தேர்தல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதோடு தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் இன்று பிற்பகல் முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்க உள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் 16 ஆயிரம் பொலிஸார் நாளை முதல் கடமையை பொறுப்பேற்க உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

நேற்றைய தினம் தென்மாகாணத்தில் பல இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பிரதான கட்சிகள் பல பிரதான கூட்டங்களை நடத்தின.
தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க 17 இலட்சத்து 61,859 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் 670 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளது. தபால் மூல வாக்குகள் எண்ணும் 13 நிலையங்கள் உட்பட 161 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

ஒரேநேரத்தில் 18 நாடுகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை!

இந்து சமுத்திரத்திலுள்ள 18 நாடுகளில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரே நேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
 
உலக அழிவுகளை குறைக்கும் தினத்தை முன்னிட்டு இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்த ஒத்திகையில் இலங்கை, இந்தியா,  இந்தோனேஷியா,  மலேசியா, அவுஸ்திரேலியா உட்பட 18 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தோனேஷியாவில் இருந்து 18 நாடுகளுக்கும் ஒரேநேரத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது. அறிவித்தல் கிடைத்து எவ்வளவு நேரத்தில் சுனாமி எச்சரிக்கை குறித்த நாட்டை வந்தடையும்,  எவ்வளவு நேரத்தில் மக்களுக்கு அறிவிப்பது எவ்வளவு நேரத்தினுள் மக்களை வெளியேற்றுவது என்பன குறித்தும் ஒத்திகைகள் இடம்பெற உள்ளதாக இடர்முகாமைத்துவ நிலைய தேசிய இணைப்பாளர் கீர்த்தி ஏக்கநாயக்க கூறினார்.