வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோரைப் பிரிந்து தனியே சென்றுள்ள இந்த மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருப்பிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.
இருப்பினும், யுத்தச் சூழ்நிலையின்போது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பல மாணவர்கள் திருமணம் முடித்து, இப்போது குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்கள். இவர்களில் அநேகமானவர்கள் தமது கணவனை அல்லது மனைவியை இடைத்தங்கல் முகாமிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்திருக்கின்றது. இதனால் இத்தகைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என இலண்டன் பீபீஸி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.