இடம் பெயர்ந்து வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரங்களை பெற்றுக் கொடுப்பதே இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டரிடம் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் மைக் ஃபோஸ்டர் வெளிவிவகார அமைச்சர், ரோஹித போகொல்லாகம மற்றும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதார தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட ஃபோஸ்டர், பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப் பட்டிருப்பதனை ஏற்றுக்கொண்டார். இடம்பெயர்ந்தோரை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதேவேளை பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்ந்தோருக்காக செய்த உதவிகளுக்காக அமைச்சர் போகொல்லாகம மைக் ஃபோஸ்டரிடம் பிரிட்டனுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
இதேவேளை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கும்; மைக் ஃபோஸ்டருக்கும் இடையிலான சந்திப்பொன்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள உதவிகள் மற்றும் ஏனைய வசதிகள் சம்பந்தமாக பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் ஃபோஸ்டர் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கேட்டறிந்து கொண்டார்.