தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவும், இந்திய இலங்கை நல்லுறவிற்கு பாதகமாகவும் செயல்படும் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், சென்னையில் இயங்கி வரும் இலங்கை துணை உயர் ஸ்தாரானிகாலயத்தை மூட வேண்டும் என்றும் ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் தலைவரான திரைப்பட இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
“சமீபத்தில் சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த இந்தியாவிற்கான இலங்கை துணை தூதர் திரு வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போது,” இலங்கையில் உள்ள முகாம்கள், பார்வையிடுவதற்கு மிருககாட்சி சாலை அல்ல…’ என்று கூறியிருந்தார். தூதரின் அந்த ஆணவமான பேச்சிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசிய தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் இயங்கி வரும் துணை துதரகத்தை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரி ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பின் சார்பாக இன்று (8 10 09) காலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக (டி. டி கே. சாலையில்)அந்த இயக்கத்தின் தலைவர் திரு சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களை வதை முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி வரும் சிங்கள அரசிற்கு எதிராகவும், துணை தூதருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.