October

October

இன்று தென் மாகாண சபைத் தேர்தல் – 53 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1091 பேர் களத்தில்

vote.jpgதென் மாகாண சபைத் தேர்தல் இன்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெறுகிறது. காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.

இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அபமர்த்தப்பட்டுள்ளனர்.

சூழ்நிலைகளைப் பொறுத்து வாக்குச்சாவடிகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது. தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட் டுள்ளனர். வாக்குச் சாவடிகளுக்கு நேற்றுக் காலையே வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச் சாவடிகளுக்குக் கையடக்கத் தொலைபேசிகள் கமராக்கள் கொண்டு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களை நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறு சிறு சம்பவங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய, அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85% வாக்களித்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் 23 உறுப்பினர்களும், மாத்தறை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும், இரண்டு போனஸ் உறுப்பினர்களுமாகத் தென்மாகாணத்தில் 55 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்குகளை எண்ணுவதற்காக 168 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்காகப் 15 நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மின்துண்டிப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணம்

091009ecb.jpgகொலன்னாவ, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டி ப்பு ஏற்பட்டது. இம்மின் துண்டிப்பினால் நாட்டின் சில பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களும் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பெரும் அசெளகரிய ங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

இதேவேளை, இம் மின் துண்டிப்பிற்கு நாசகார சதி முயற்சிகள் எதுவும் காரணமில்லையெனவும் இயந்திர தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்றை நேற்று நண்பகல் மின்சார சபை ஒழுங்கு செய்திருந்தது. சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க பொது முகாமையாளர் திருமதி பீ. ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இது தொடர்பில் விளக்கமளித்த மின்சார சபையின் தலைவர் எதிரிசிங்க; நேற்று அதிகாலை 1.30 மணியளவில் களனி திஸ்ஸ கொலன்னாவை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தென்மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இம் மின்நிலையத்தின் மூலம் 1,32,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இம் மின் துண்டிப்பினை முழுமையாக சரிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நேற்றுக் காலை 9,15 மணிக்கே இதனை சரிசெய்ய முடிந்தது. 60 வருட மின்சாரசபையின் வரலாற்றில் இத்தகைய நீண்ட மின் துண்டிப்பொன்று இடம்பெறவில்லையென தெரி வித்த அவர், நேற்று மதியமளவில் நாடு முழுவதிற்கும் 95 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தோல்வியைச் சமாளிக்க காரணம் தேடுகிறது ஐ.தே.க சபையில் அமைச்சர் நிமல்

26parliament.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் (இன்று நடைபெறும்) படுதோல்வி அடைய விருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கான காரணங்களை முன்கூட்டியே தயாரிப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வின் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் குருநாகல் மாவட்ட ஐ.தே. க. எம். பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும் தென் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு பெட்டிகளை வாக்குகள் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பஸ் வண்டிகளில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் செல்லுவதற்கு அனுமதிக்கப்படாதது குறித்து எம். பி. ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, ஐ. தே. க. ஏற்கனவே ஏழு மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்திருக்கின்றது என்றார்.

41 அரச நிறுவனங்களுக்கு ரூ. 204 கோடி குறைநிரப்பு பிரேரணை – அரச தரப்பு பிரதம கொறடா தினேஷ் சமர்ப்பிப்பு

வரவு-செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொதுக் கருத் திட்டத்தின் கீழ் 41 அரசாங்க நிறுவனங்களுக்கென 204 கோடியே 13 இலட்சத்து 95 ஆயிரத்து 532 ரூபாவுக்கு குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குறை நிரப்பு பிரேரணையை ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகரின் அனுமதியைப் பெற்று அமைச்சர் இந்தக் குறை நிரப்பு பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

அமைச்சுக்கள், மாகாண சபைகள், அரசாங்க திணைக்களங்கள் அடங்கலான 41 அரச நிறுவனங்களுக்காகவே இக்குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தைத் திருத்துவதற்கென ஒரு கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 882 ரூபாவும் இக்குறைநிரப்பு பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மலையக தோட்டங்களிலிருந்து வீட்டு வேலைக்கு சென்றோரின் விபரம் திரட்டும் பணி ஆரம்பம்

091009puttirasigamani.jpgமலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ.  புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

90 தேயிலை தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்த முடிவு

மஹிந்த சிந்தனையின் கீழ் 90 தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்படவுள்ளன என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய விவசாய வாரம்

maithripalasirisena.jpg தேசிய ஏர்பூட்டு விழா தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு இம்மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தேசிய விவசாய வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி. கமநல சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

தேசிய விவசாய வாரத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 11ஆம் திகதி மத வழிபாட்டு நிகழ்வுகளுடன் பொலன்னறுவையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த 2 எம்.பிக்களுக்கு சபையில் நேற்று அனுதாபம்

முன்னாள் எம்.பிக்களான மறைந்த டப்ளியு. எம். ராஜாவெலேகம மற்றும் எச். பி. வன்னிநாயக்கா ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை மீதான உரைகள் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.

இந்த அனுதாபப் பிரேரணைகள் மீதான உரைகளைச் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார். இந்த அனுதாப பிரேரணைகளில் எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரே ராவும் உரையாற்றினார்.

அமெரிக்காவில் 400 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களுக்கு பலகோடி இழப்பு – பொருளாதார வீழ்ச்சியே காரணம்

usflag.jpgபொரு ளாதார வீழ்ச்சி காரணமாக  அமெரிக்காவில் 400 க்கு மேற்பட்ட கோடீஸ்வரர்களுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கபத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல “போர்ப்ஸ்’ பத்திரிகைää இது தொடர்பான பட்டியலை  வெளியிட்டுள்ளது. இதில்ää மிகப்பெரிய கோடீஸ்வரர் வாரன் பப்பட் என்பவரின் “பெர்க் ஷைர் ஹேத்அவே’ நிறுவனத்தின் பங்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. இந்த வகையில் வாரன் தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர் என்று அந்தப் பட்டியல்கூறுகிறது.

எனினும்,  இழப்பில், முதல் 10 பேரில் முதலாவதாக இருப்பவர் பில் கேட்ஸ். இவரது கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு.
இரண்டாமிடத்திலுள்ள வாரன் பப்பட்டின் வருமானம் 20 லட்சம் கோடி ரூபாய். மூன்றாவதான “ஒராக்கிள்’ நிறுவனர் லாரன்ஸ் எல்லிசனின்வருமானம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய். எல்லிசன் மட்டும்தான் பெருமளவில் இந்தப் பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்படாதவர் என்கிறது அந்த அறிக்கை.

பொருளாதார மந்தத்தினால்,  2008ல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 43 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 250 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்டியலில் குறிப்பிடப்பட்ட முதல்; 10 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பட்டியலின் 400 தொழிலதிபர்களின் மொத்த இழப்பு 19 சதவீதம்.அதாவது ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதன் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சாஹித்திய விழா இன்று ஆரம்பம்

மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா இன்று காலை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஆரம்பமாகிறது. சாஹித்திய விழாவினையொட்டி இந்தியாவிலிருந்து விசேட சொற்பொழிவாளர்கள் மூவர் கலந்து கொள்கின்றனர்.

வாணியம் பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் அப்துல் காதர், பெங்களூரைச் சேர்ந்த ‘புதுவிசை’ இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா மற்றும் தஞ்சாவூர் பாரதிதாஸன் தமிழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமா வைத்தியலிங்கம் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். புதுவிசை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா “புலம்பெயர் கவிதைகளில் முன்னோடிகள் இலங்கை மலையக தமிழர்” என்ற தலைப்பில் உரையாற்ற வுள்ளார்.

இந்த சாஹித்திய விழாவில் 14 பேர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கல்வித்துறை, சமூகசேவை, கலைத்துறை, இலக்கியத்துறை, ஊடகத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றிற்கான விருதுகள் பெறவுள்ளனர்.

“நூல்’ ஆக்கத்திற்கு 5 பேர் விருது பெறவுள்ளனர். சிறுகதை, நாவல், ஆய்வு, பிறதுறை ஆகிய வெளியீடுகளுக்காகவே விருதுகள் வழங்கப்படவுள்ளன.ஊர்வலம் காலை 9.00 மணிக்கு பாக்கிய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கின்றது. இதில் 5 ஊர்திகள் ஊர்வலத்தில் செல்லவுள்ளதோடு, திருகோணமலை ‘இனியம்’ தமிழ் இசை பாண்ட் வாத்தியமும் கலந்து கொள்ளவுள்ளது.

ஊர்வலத்தினை தொடர்ந்து விழா 10.30 மணிக்கு மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் மண்டபத்தில் மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆரம்பமாகிறது. கோயில் முற்றத்தில் 18 பாடசாலகள் கலந்து கொள்ளும் “நாளைய மலையகம்” என்ற தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் அமைச்சு திணைக்களங்களைச் சேர்ந்த இரண்டு கண்காட்சி கூடமும் அமைக்கப்படவுள்ளது.