இலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.
மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.
நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!
ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.
புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.
உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.
இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி – மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.
இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!
இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!
ஜனாதிபதி அவர்களே!
இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.
பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப் போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?
ஜனத்தின் அதிபதி அவர்களே!
புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.
ஆனால் ஜனாதிபதி அவர்களே!
உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.
மேலும் ஜனாதிபதி அவர்களே!
வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.
தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.
தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
ஜனாதிபதி அவர்களே!
நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள். நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.
ஆனால்…
அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.
மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.
எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.
இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.
இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.
அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!
பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.
மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.
தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.