இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிவாரணியாகத் தெரிவிக்கப்படும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது “சட்டரீதியான ஏற்பாடு’ என்பதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்று பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப தொழில் நிபுணர்களின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பான மாநாடொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜேந்திரன் தெரிவித்ததாவது;
இலங்கையிலுள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாக அமையுமென மக்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், சிங்களவர், தமிழர் என்ற இரு வேறுபட்ட இனங்கள் அங்கிருப்பதைக் கூட திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
பிரேரணைகள் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதாகவும் மாகாண சபைகளை உருவாக்குவதாகவுமே உள்ளன. ஆனால், மாகாண சபைகளில் உள்ள அமைச்சர்களுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை. மாகாண சபையின், ஆளுநரின் அடிவருடிகளாக இருப்பதற்கு அப்பால் அமைச்சர்களால் எதுவும் செய்யமுடியாது. ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கிறார்.
பொது நிர்வாகம், நிதி, காணி என்பன உட்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக மாகாண அமைச்சர் சபைக்கு 13 ஆவது திருத்தம் அதிகாரங்களை வழங்கவில்லை. ஆளுநருக்கே முக்கியமான விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் வெறும் நிர்வாக செயற்பாடுகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களம் மத்தியிடமே உள்ளது. வருடாந்த வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அதிகாரங்களையோ சனத்தொகைப் பரம்பல் மாற்று நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதிகாரங்களையோ மாகாண சபைகள் கொண்டிருக்கவில்லை. காணி விவகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.